Saturday, April 9, 2011


சுடுகாட்டில் வீசும் தென்றல்

நிண நாற்றம்
சகிக்க முடியவில்லை
நடு நிசி நாய்களின்
குரூர வேட்கையும்தான்

ஊழல் தீயின் தகிப்பில்
கனன்றடங்கிச் சாம்பலாகிறது
ஜனநாயகத்தின் ஒவ்வொரு
உயிர்த்துளியும்

சுடுகாட்டில் வீசும்
தென்றலாக தேர்தல்

விரிந்த ‘கை’கள்
இப்போது
கூப்பியபடி தமிழர்களிடம்
வாக்கு கேட்டு…

ஈழரத்தம் ருசித்த
மூவண்ண நாவுகளுக்கு
இன்னும் அடங்கவில்லை
தமிழ்க் குருதி
வேட்கை

தமிழர்களின் அரசியலை
பிரித்துப் போட்டு
கலைத்து விளையாடி
ரசித்துச் சிரிக்கிறாள்
டெல்லி மோகினி

சுவைக்காத மாங்கனி
சீற்றம் தணிந்த சிறுத்தை
சாட்டை இழந்து
ஓரமாய்ச் சரிந்த
பம்பரம் என

தமிழ்க் கூறுகள்
அனைத்தும்
தன்னளவில்
நீர்த்துப் போனது
கண்டு அவளுக்கு
தாழவில்லை
பெரு மகிழ்ச்சி


இங்கோ
ராஜாஜிக்குப் பிறகு
தம் குலத்துக்குக் கிடைத்த
தலைமை போய்விடுமோ
என்று பதறும்
மற்றொரு கூட்டம்….

போதையில் தள்ளாடியபடி
புரட்சி பேசி
முரசு கொட்டும்
முட்டாள் நடிகர்

அவர் மூலமேனும்
பொதுவுடைமை
மலருமா
என ஏங்கித்தவிக்கும்
இலக்கிலா இடதுகள்….

பிரபலமான கோமாளிகள்
என்ற பேரில்
நாத்தழும்பேறப் பேசும்
வடிவேல்களாம்
அரசியல் ஈசல்கள்

தண்ணீரைவிட ரத்தம்
கெட்டியானது என
ஸ்ரீ ரங்கத்துச்
சொந்தங்களிடம்
தஞ்சமடைந்துவிட்ட
எதிரணித் தலைவி….

வியூகம் வகுத்த பீஷ்மரோ
இப்போது அம்புப் படுக்கையில்
துரோகங்களுக்கு மன்னிப்பு ஏது?

வரலாறு தாட்சண்யமற்ற
தன் தீர்ப்பை
எழுதத் தொடங்குகிறது.


செம்பரிதி


நன்றி : தாகம் இதழ்

Friday, April 1, 2011


அரசியல் காணாமல் போன தேர்தல் களம்!

“முன்பெல்லாம் தேர்தல் என்றால் சுவர்கள் முழுவதும் சின்னங்கள் சிரிக்கும். கட்சிக் கொடிகளின் வண்ணங்கள் கண் சிமிட்டும். இரவெல்லாம் தலைவர்கள் வருகைக்காக காத்திருந்து, நள்ளிரவு நேரத்தில் அவர் வந்தாலும் மக்கள் ஆர்ப்பரித்து வரவேற்பார்கள். இப்போது எல்லாமே மாறி விட்டது. ஒரு தேர்தல் நடைபெறுவது போலவே இல்லை…”

தற்போதைய தேர்தல் நடைமுறைகள் குறித்த நண்பர் ஒருவரின் அங்கலாய்ப்பு இது.

தேர்தல் பிரச்சார நடைமுறைகள் மட்டுமா மாறியுள்ளன?
அன்று தொண்டனின் மனதில் கனன்று கொண்டிருந்த கருத்தாவேசம், தலைவனின் வருகைக்காக அவனை நள்ளிரவு வரை காத்திருக்கத் தூண்டியது. தான் ஏற்றுக்கொண்ட கொள்கையை வலியுறுத்தும் தலைவனின் சிந்தனையும், பேச்சும் ஒரு வேதி வினையைப் போல், அவனுக்குள் ஓர் அறிவுக் கிளர்ச்சியை ஏற்படுத்தின.

இப்போது தேர்தல் ஆணையம் தடைவிதித்திரா விட்டாலும் கூட, இரவு பத்து மணிக்கு மேல் தலைவர்களின் வருகைக்காக தொண்டர்கள் காத்திருக்க மாட்டார்கள்.

அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அளவுக்கு எந்த தலைவர்களும் அவர்களுக்குப் புதிய செய்திகளையோ, புதிய சிந்தனைகளையோ கொண்டுவரப் போவதில்லை என்பதே உண்மை.

அரசியல் களம்,  உண்மையான அரசியல் களமாக இருந்த போது தலைவராக முகிழ்த்து உருவாகி, 75 ஆண்டுகால வாழ்வையும் அதிலேயே கழித்துள்ள, முதலமைச்சர் கருணாநிதி கூட, இன்று கருத்துகளை முன்வைத்து வாக்குக் கேட்கும் நிலையில் இல்லை.    

திமுக, அதிமுக இரண்டு ஆட்சிகளையும் ஒப்பிட்டுப்பார்த்து வாக்களியுங்கள் என்று கேட்கிறார்.

எங்களுக்கு வாக்களித்தால் இத்தனை பொருட்களை இலவசமாகத் தருவோம் என்கிறார். திட்டங்கள் தொடர வாக்களியுங்கள் என்கிறார்.

எத்தகைய இலட்சியங்களை வென்றெடுப்பதற்காக திராவிட இயக்கம் தொடங்கப்பட்டதாக கூறப்பட்டதோ, அதன் கருத்தாக்கங்களில் ஒன்று கூட இன்று பிரச்சாரத்துக்காகவேனும் பேசப்படுவதில்லை.

அண்மையில் பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், திமுக, அதிமுக இரண்டு கட்சிகளின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணிகளுமே கொள்கையற்ற கூட்டணிகள் என விமர்சிக்கப் பட்டுள்ளது. எனவே இரண்டு அணிகளையுமே தாங்கள் ஆதரிக்கப் போவதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

பெரியார் திராவிடர் கழகம் சொல்லித்தான் இது தெரியவேண்டுமா என்று கேட்கலாம். அதற்கு அவர்கள் சொல்லியிருக்கும் விளக்கம் முக்கியமானது என்பதால் அதனை இங்கே குறிப்பிட வேண்டி உள்ளது.

தேர்தலுக்குத் தேர்தல், கருத்து அடிப்படையிலான மோதல் பின்னுக்குத் தள்ளப்பட்டு, சந்தர்ப்பவாத உடன்பாட்டின் அடிப்படையில் தேர்தலை சந்திக்கும் போக்கு அரசியல் கட்சிகள் மத்தியில் அதிகரித்து வருவதை அந்த தேர்தல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

43 ஆண்டுகளுக்கு முன்னர், திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரசும் தேர்தல் களத்தில் எதிரெதிர் முனைகளில் சந்தித்துக் கொண்டன.
அப்போது ஏதுமற்ற ஏதிலிகளான எளியமக்களின் பிரதிநிதியாக திமுக தன்னை முன்னிறுத்தியது.

காங்கிரஸ் ஆதிக்க சக்தியின் அடையாளமாக சித்தரிக்கப் பட்டது. அதில் ஒரளவுக்கு உண்மையும் இருந்தது.
எளிய மக்களின் ஆதரவில் திமுக முதன்முறையாக ஆட்சிக்கட்டிலில் ஏறி அமர்ந்தது.

ஆட்சி அதிகாரமும், தேர்தல் காலத் தேவைகளும் திமுகவின் அடிப்படைக் கொள்கைகளை அவ்வப்போது காவு கேட்டன. தலைவர்களால் தவிர்க்கவோ, தப்பிக்கவோ முடியவில்லை.

கருப்பும் சிவப்பும் மெல்ல மெல்ல வெளிறி மஞ்சள் ஆனது.
காலப்போக்கில் அது ஒரு பிரச்சனையாகவே இல்லை. இந்த அரசியல் களேபரத்தில் இருந்து இடதுசாரிகளும் தப்பவில்லை.

ஒரு முறை திமுகவுடன் என்றால், அடுத்த முறை அதிமுகவுடன். இத்தகைய அணிச்சேர்க்கைக்கு அவர்கள் ஒவ்வொரு முறையும் முன்வைக்கும் காரணங்கள் மிகவும் பலவீனமானவை. திமுகவிடமும், அதிமுகவிடமும் அவர்கள் அவ்வப்போது காணும் அரசியல் முரண்பாடும், உடன்பாடும், விநோதமான அரசியல் வேடிக்கைகள்.

ஏறத்தாழ பாமகவின் நிலையும் இதுதான். காங்கிரஸ் குறித்து கவலை கொள்ளவே தேவை இல்லை. அவர்களுக்கு ‘கொள்கை’ சார்ந்த கவலைகளோ தடைகளோ கிடையாது.

தமிழர்கள் தலைநிமிர்ந்து விடக் கூடாது என்பதில் மட்டும் அக்கட்சியின் டெல்லித் தலைமை உறுதியாக இருக்கும். அந்த வகையில் காங்கிரசின் கொள்கை உறுதியைக் குறை சொல்ல முடியாது.

அத்தகைய காங்கிரசுடன்தான் திமுக கடந்த 7 ஆண்டுகளாக கூட்டணி வைத்திருக்கிறது. இப்போதும் 63 இடங்களைத் தந்து அந்த உறவை ஒருவழியாக காப்பாற்றிக் கொண்டுள்ளது.

இலங்கைத் தழிழர்களைக் காப்பாற்றுவதே தனது அரசியல் லட்சியம் என கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முழங்கிய ஜெயலலிதா, ஈழத்தமிழர்களுக்கு தொடந்து ஆதரவுகாட்டி வந்த மதிமுகவை இந்த தேர்தலில் கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக வெளியே தள்ளிக் கதவைச் சாத்தி விட்டார்.

எந்த அரசியல் அடிப்படையும் அற்ற விஜயகாந்திற்கு 40க்கும் மேற்பட்ட இடங்களை அளித்து அணிசேர்த்துக் கொண்டுள்ளார்.

இருபுறங்களிலும் இருந்து இலவசங்கள் தொடர்பாற அறிவிப்புகளை தங்களது தேர்தல் அம்பறாத் தூணிகளில் இருந்து திமுகவும், அதிமுகவும் தொடர்ந்து எடுத்து வீசுகின்றன.

பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, சமூக நீதி போன்ற கொள்கை முழக்கங்களுக்குப் பதிலாக, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி என தனது அரசியல் வியூகத்தை மாற்றிக் கொண்டுவிட்டது இன்றைய திமுக.

திமுக வுக்கு எதிர்ப்பதம் தானே அதிமுக. அந்த வகையில் திமுக சொல்வதைவிட கூடுதலாக கொஞ்சம் என்ற அளவில் அதிமுக தேர்தல் களமாடுகிறது.
இப்படியாக, கருத்துகள் மோதிக்கொண்ட தேர்தல் களத்தில் இப்போது கிரைண்டர்களும், மிக்சிகளும் மோதிக்கொள்கின்றன.

இவற்றில், திமுக அறிவித்துள்ள இலவசங்களை விட, அதிமுகவின் இலவச அறிவிப்புகள் பயனுள்ளவை என்ற ரகசியத்தைக் கண்டறிந்து சொல்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்.
இடதுசாரிகளின் அரசியல் போராட்டம் என்பது இரண்டு திராவிட இயக்கங்களில் ஏதாவது ஒன்றை நியாயப்படுத்துவது என்ற அளவில் சுருங்கிப் போனதுதான் சோகம்.

நவீன தேர்தல் பிரச்சாரத்தில் காணாமல் போயிருப்பது சுவர் விளம்பரங்களும், நள்ளிரவுக் கூட்டங்களும் மட்டுமல்ல என்பதை நாம் புரிந்து கொண்டிருக்கிறோமா?
மேனா. உலகநாதன்

நன்றி : தினமலர் - செய்திமலர்

Saturday, March 26, 2011

மக்களை இழிவு படுத்த வேண்டாம்!

வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் எடுத்துவரும் ‘கிடுகிடு’ நடவடிக்கைகளுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.
எப்போதுமே இதே போல வாகன சோதனைகளை நடத்தினால் கறுப்புப் பண நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி விடலாமே என்று அங்கலாய்க்கும் அளவுக்கு சிலர் உணர்ச்சிவசப் படுவதையும் பார்க்க முடிகிறது.
தேர்தல் ஆணையத்தின் தேவையற்ற கெடுபிடிகளுக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் கருணாநிதி மீது சிலர் சந்தேககக் கணைகளைத் தொடுத்திருப்பது இதில் கூடுதல் சுவாரஸ்யம்.
ஊழலற்ற ஜனநாயகத்தின் மீது இவர்களுக்கு இருக்கும் அக்கறை நம்மைப் புல்லரிக்க வைக்கிறது. போகட்டும்.
இதில் தேர்தல் ஆணையம் யாரைத் திருடர்களாகப் பார்க்கிறது?
மக்களையா, அரசியல் கட்சிகளையா?
சந்தேகமே இல்லாமல் மக்களைத்தான்.
ஏனென்றால் அரசியல் கட்சிகள் என்றைக்கிருந்தாலும் தங்களை ஆட்டிப்படைக்கும் எஜமானர் நாற்காலியில் அமருவார்கள் என்பது தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குத் தெரியாதா என்ன?
இதில் கொடுமை என்னவென்றால், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இடதுசாரிகள் கூட அவ்வப்போது குரல் எழுப்புவதுதான்.
அப்படி என்றால் மக்களின் அரசியல் உணர்ச்சி மீதும், அரசியல் நாணயத்தின் மீதும் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை .
மக்களைத் திரட்டி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய இடதுசாரிகளே மக்களை குற்றவாளிகளாகப் பார்க்கும் போக்கு, எப்படி உருவானது?
தமிழகத்தில், உண்மையான அரசியலின் பக்கம் மக்களைத் திருப்புவதற்கான வாய்ப்பை, வரலாறு இடதுசாரிகளுக்கு அளித்த போதெல்லாம், அவர்கள் அதைச் செய்யத்தவறிவிட்டார்கள் என்பதே உண்மை.
70 களில் திமுகவுக்கும், கருணாநிதிக்கும் எதிராக மக்களைத் திரட்ட தங்களது அரசியல் கருத்தின் வலிமையை விட எம்.ஜி.ஆரின் முகவிலாசத்தைத்தான் அவர்கள் நம்பினார்கள்.
இந்த தேர்தலின் போது மட்டும் என்ன?
கூட்டணிக் கட்சிகளுடன் எந்த ஒரு ஆலோசனையும் செய்யாமல் 160 தொகுதிகளுக்கும் தமது கட்சி வேட்பாளர்களை அறிவித்த ஜெயலலிதாவின் எதேச்சதிகாரப் போக்கு, மீண்டும் ஒரு வரலாற்று வாய்ப்பை இடதுசாரிகளுக்கு ஏற்படுத்தித் தந்தது.
ஆனால் அப்போதும் இவர்கள் என்ன செய்தார்கள்.
ஓரளவுக்கேனும் அடிப்படையான அரசியல் கோட்பாடுகளுடன் கட்சி நடத்தி வரும் வைகோவைத் தேடி இவர்கள் செல்லவில்லை. விஜயகாந்தைத் தான் தேடிச் சென்றார்கள்.
தங்களது அரசியல் நாணயத்தின் மீது இன்றுவரை நம்பிக்கை வைத்திருக்கும் சிறுபான்மை மக்கள் கூட்டத்தை அரசியல் அணியமாக திரட்ட முடியும் என்ற குறைந்த பட்ச நம்பிக்கை இடதுசாரிகளுக்குக் கூட இல்லாமல் போனதுதான் சோகம்.
தங்களது அரசியலை நகர்த்திச் செல்ல எப்போதுமே ஒரு வசீகரமான முகவிலாசத்தை இவர்கள் தேர்வு செய்யும் போது, அப்பாவி மக்கள் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுவதற்கு  இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
விஜயகாந்த் போன்றவர்கள் கடந்த தேர்தல்களில் பிரச்சாரம் செய்யும் போது வாக்காளர்களிடம் என்ன சொன்னார்கள்? இப்போதும் என்ன சொல்லிவிடப் போகிறார்கள்?
‘யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். வாக்கை மட்டும் எங்களுக்கு அளித்துவிடுங்கள்’
என்ன ஒரு அரசியல் தத்துவம்.
வாக்குகளை பணத்திற்கு விற்கும் பிச்சைக்காரர்கள் என்பதுதான் மக்கள் குறித்த இவர்களது மதிப்பீடு.
தனது தலைமையிலான அரசைக் காப்பாற்றிக் கொள்ள, ‘மிஸ்டர் கிளீன்’ என்று புகழப்பட்ட பிரதமர் மன்மோகன்சிங்,  நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்துள்ள புகார், நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியது.
எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லும் ஒருவர் எதற்கு பிரதமராக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அவரை நோக்கி எழுப்பிய கேள்வி அவமானகரமானது.
சில ஆண்டுகளுக்கு முன்னர், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் குறிப்பிட்ட துறை அல்லது நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்ப, உறுப்பினர்கள் பணம் வாங்கியதாக எழுந்த புகார், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான அடிப்படை நம்பிக்கையையே ஆட்டம்காண வைத்துவிட்டது.
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் எளிய மக்கள் மட்டும் உத்தமர்களாக இருக்க வேண்டும் என்று எந்த அடிப்படையில் எதிர்பார்ப்பது?
நாட்டின் விடுதலைக்காக தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தந்த அதே எளிய மக்கள்தான், இன்று இந்த மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
‘கடைசி நேரத்துல காச வாங்கிக்கிட்டு ஓட்டப் போட்டுறுவாணுகப்பா’
மிகப்பெரிய அறிவு ஜீவிகளில் இருந்து, சாமான்ய பார்வையாளர்கள் வரை இந்த வார்த்தைகளை அநாயாசமாக பயன்படுத்துகிறார்கள்.
அவர்களது பொதுப்புத்தியில் மக்கள் என்பவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டுகளை விற்பனை செய்யும் மலின புத்தி படைத்தவர்கள் என்ற மதிப்பீடு மட்டுமே துருத்திக் கொண்டு நிற்கிறது.
எத்தனை தேர்தலில் பணம் கொடுத்து வாக்குகளை பெற்ற கட்சிகள் ஆட்சிக்கு வந்துள்ளன?
ஒரு பொதுத்தேர்தலில் அது சாத்தியமா?
இதுபோன்ற கேள்விகளை யாருமே எழுப்புவதில்லை.
தேர்தலில், பண பலமும், ஆள் பலமும் ஆதிக்கம் செலுத்துவதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அது மட்டுமே வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் முழுமையான சக்தியாக செயல்படுவதாக கூறப்படுவதை ஏற்க முடியாது.
திட்டங்கள் குறித்த அறிவிப்பு, கடந்த ஆட்சிக்காலத்தில் அந்த அரசின் நிர்வாகத்தன்மை, மக்களிடம் அந்த அரசு கொண்டிருந்த அணுகுமுறை என பல்வேறு அம்சங்களை அலசிப்பார்த்துத்தான் அடித்தட்டு மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்கிறார்கள்.
அவர்கள்தான் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறார்கள்.
ஆனால், தேர்தல் முறைகேடுகள் குறித்து அடிக்கடி அங்கலாய்க்கும் அறிவுஜீவிகளில் பெரும்பாலோர், வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கும் குறைந்த பட்சக் கடமையைக் கூட நிறைவேற்றுவதில்லை.
அடித்தட்டு மக்களை திருடர்களாகவும், பிச்சைக்காரர்களாகவும் சித்தரித்து, விமர்சிப்பது மட்டுமே இவர்கள் ஆற்றும் மேலான ஜனநாயக கடமை.
இலவசங்கள், வாக்களிக்க லஞ்சம் வாங்குவது இவற்றையெல்லாம் தாண்டி, அடித்தட்டு மக்களிடம் அழுத்தமான அரசியல் உணர்வு நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருப்பதை, அவர்களோடு நெருக்கமும், அக்கறையும் கொண்டவர்கள் அறிவார்கள்.
அவர்களை அணிதிரட்டவும், அவர்களது அரசியல் உணர்வுக்கு வடிவம் கொடுக்கவும் தவறியது யார் குற்றம்?
இடது சாரிகளைப் போன்ற சில சக்திகளும், மக்களை அரசியல் படுத்தக் கிடைக்கும் மகத்தான தருணங்கள் அனைத்தையும், கவர்ச்சியான தலைவர்களைத் தேடி, ஓடி அலைவதிலேயே கழித்து விடுகிறார்கள்.
இவ்வளவு மோசமான சூழலிலும், அவ்வப்போது தாங்கள் அரசியல் மாற்றத்தை விரும்புவதை மக்கள் உணர்த்த தவறியது இல்லை.
1967ல் காங்கிரஸ் மீது ஏற்பட்ட சலிப்பால் திமுகவைத் தேர்ந்தெடுக்க மக்கள் தயங்கவில்லை.
1977பொதுத் தேர்தலில், இந்திரா காந்தியின் சர்வாதிகாரத்துக்கு எதிராக சவுக்கடி கொடுக்கவும் மக்கள் தயங்கவில்லை.
1996 தேர்தலில் ஜெயலலிதாவின் ஊழலுக்கு எதிராக வாக்களிக்கவும் தவறவில்லை.
2001ல் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காக திமுக ஆட்சிக்கு எதிராக வாக்களிக்கவும் மக்கள் தவறவில்லை.
2006 சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவின் எதேச்சதிகார நடைமுறைகளுக்கு பாடம் புகட்டவும் அவர்கள் தயங்கவில்லை.
இது போன்ற பல ஆட்சி மாற்றங்களை மக்கள் தன்னிச்சையாக தீர்மானித்திருப்பதை நாம் மறுக்க முடியாது.
மேற்கண்ட எந்த தேர்தலிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துத்தான் வெற்றி வாங்கப்பட்டது என முழுமையாக கூறிவிட முடியாது.
தேர்தல் முறைகேடுகளும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அவ்வளவுதான்.
அடித்தட்டு மக்களை சரியான முறையில் அரசியல் படுத்தும் போது, இது போன்ற தேர்தல் தில்லுமுல்லுகள், தாமாகவே காணாமல் போய்விடும். அதை விடுத்து மக்களை ‘ஓட்டுக்கு காசுவாங்கும்’ கயவர்களாக சித்தரிக்கும் சிறுமைத்தனத்தை, அரசியலைப் புனிதப்படுத்த விரும்பும் ‘ரொம்ப நல்லவர்கள்’ கைவிட வேண்டும்.
மக்கள் மாற்றத்தை விரும்பி விட்டால், அதற்கு கைம்மாறாக எதையும் எதிர்பார்ப்பதில்லை.
மேனா.உலகநாதன்

நன்றி : தினமலர் - செய்திமலர் (நெல்லைப் பதிப்பு) 

Wednesday, March 16, 2011


ஜனநாயக அனாதைகள்…

அது ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி.

இந்த சமூகத்திற்கு முன்பாக தங்கள் தரப்பைச் சொல்ல நீண்ட நேரமாக அவர்கள் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் காத்திருக்கிறார்கள்.
யார் அவர்கள்?

ஒடுக்கப்பட்ட பிரிவினரிலும் ஒடுக்கப்பட்டவர்களாக, தங்களுக்கு நேர்ந்த அவலத்தை வெளிப்படுத்தும் திறனோ, தெம்போ இன்றி நாள்தோறும் நலிந்து நைந்து கிடக்கும் அப்பாவி அருந்ததி இன மக்களின் பிரதிநிதிகள்.

காலம்காலமாக தீர்க்கப்படாமல் தொடரும் தங்களின் நீண்ட கொடுந்துயரப் பட்டியலை, இந்த சமூகத்தின் முன்பாகப் பதிவு செய்ய, ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகங்களை நம்பி அவர்கள் காத்திருந்தார்கள்.

ஆனால், குறித்த நேரம் தாண்டியும் பத்திரிகையாளர்கள் என்று அறியப்பட்ட யாருமே அங்கு வரவில்லை.

நட்பு ரீதியாகவோ அல்லது கருத்து ரீதியாகவோ அக்கறை உள்ள, பத்திரிகை அல்லது ஊடகத்துறை சார்ந்த ஒன்றிரண்டு பேர் வந்து தலைகாட்டிச் சென்றார்கள்.

ஒரு பக்கம் எந்த தொகுதியில் யார் நிற்கப் போகிறார்கள் என்ற பரபரப்பான தகவலை வெளியிட பெரிய கட்சிகளின் தலைமை அலுவலகங்கள் முன்பு ஒரு பத்திரிகையாளர் கூட்டம்.  

மற்றொரு பக்கம் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் விசாரிக்கப்பட்ட தொழிலதிபரின் தற்கொலை குறித்து, உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவ மனையின் முன்பாக, படபடக்கும் அபிநயத்தோடு நின்றபடியே, நேரலை மூலமாக விவரிக்கும் துடிப்புள்ள ‘யூத்’ செய்தியாளர்கள்….

இத்தனை களேபரத்தில், அறுபதாண்டுகால ஜனநாயகத்திலும், அடிப்படையான மனித உரிமைகூட கிடைக்கப் பெறாமல் அல்லல் படும் அருந்ததி இன மக்களின் குரலைக் கேட்க நமது ஊடகங்களுக்கு நேரமும், நினைப்பும் இல்லாமல் போனதில் வியப்பில்லை.

தேர்தல் சந்தையின் பெருங்கூச்சலில், ஏதிலிகளின் குரல்கள் முனகலாகக் கூட நம் காதுகளில் விழுவதில்லை என்பதுதானே இந்திய ஜனநாயகத்தின் தனிப்பெரும் மாண்பு …

ஆனாலும், ஆதிக்கசக்திகளைவிட, நசுக்கப்படும் அடித்தட்டு மக்கள் தேர்தல் ஜனநாயகத்தின் மீது இன்னும்கூட அழுத்தமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். 

அதனால்தான், தேர்தல் வரும் போது, தங்களின் தீர்க்கப்படாத குறைகளை கோரிக்கைகளாக அரசியல் கட்சிகளிடம் முறையிடுவதை அவர்கள் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அந்த அடிப்படையில்தான், அருந்ததியர் ஆய்வு மையம், அருந்ததியர் மனித உரிமை அமைப்பு ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து, அருந்ததி இன மக்களின் சார்பாக ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. அதற்கான செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சிதான் அது.

அந்த அறிக்கையை வெளியிட்ட பேராசிரியர் சரசுவதி, அருந்ததி இன மக்களின் இந்த தேர்தல் அறிக்கையில் கோரப்பட்டிருப்பது அவர்களது வாழ்வாதார உரிமைகள் மட்டுமல்ல, மிக அடிப்படையான மனித உரிமைகள் ஆகும் என்று தெரிவித்தார்.

இதனை தொகுத்து வெளியிட்ட அந்த அமைப்புகளின் நிர்வாகிகள், “கையினால் மனிதக்கழிவுகளை அகற்றும் கொடுமை மட்டுமே அருந்ததி இன மக்கள் சந்தித்து வரும் பிரச்சனை அல்ல. விவசாயக் கூலிகள், உள்ளிட்ட பல்வேறு அடிமட்டத் தொழிலாளர்களாக அவர்கள் சந்திக்கும் அவலம் சொல்லிமாளாதது. அவற்றைக் கவனப்படுத்தும் முயற்சியாகவே முதல் முறையாக  அருந்ததியர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம்” என்றனர்.

பெரும்பாலும் அந்த தேர்தல் அறிக்கையை யாரும் வெளியிடப் போவதில்லை என்பதால், அதில் இடம் பெற்றுள்ள முக்கியமான சில அம்சங்கள் உங்கள் பார்வைக்கு….

·        அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

·        அருந்ததியருக்கான 3 சதவீத உள் ஒதுக்கீட்டுப் பணியிடங்களில் அதற்குத் தகுதியான அருந்ததியர் கிடைக்காத பட்சத்தில் ஏனைய தாழ்த்தப்பட்ட பிரிவினரை நியமிக்கும் நடைமுறையைக் கைவிட வேண்டும். பின்னடைவுப் பணியிடமாக அதனைக் கருதி தகுதியான அருந்ததியர் கிடைத்தபின்னரே அந்தப் பணியிடத்தை நிரப்ப வேண்டும்.

·        அருந்ததியர்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக தாட்கோ போன்று வங்கி தொடங்கி அதன் மூலம் அனைத்து வகையான தொழில் களுக்கும் வட்டி இல்லாத கடன் வழங்கவேண்டும்.

·        பஞ்சமி நிலங்களை மீட்க அதிகாரம் மிக்க ஆணையம் அமைத்து அதனை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

·        மனிதனின் மலத்தை மனிதனே அள்ளுவதை குற்றவியல் சட்டத்தின் கீழ் தடை செய்ய வேண்டும். அதில் ஈடுபடுத்தப்படுபவர்களுக்கு மாற்றுப் பணிகள் வழங்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மனிதக் கழிவுகளை கையினால் அள்ள வற்புறுத்துபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளதைப் போல துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு ஆணையம் அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.

·        தமிழகத்தில் 12 ஆயிரத்து 618 ஊராட்சிகளில் உள்ள துப்புரவுப் பணியாளர்களை முழுநேர அரசுப்பணியாளர்களாக அறிவித்து, அவர்களுக்கு காலமுறை ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

·        புதிய நில உச்சவரம்புச் சட்டம் நிறைவேற்றி, அதன் மூலம் கிடைக்கும் உபரி நிலங்களை அருந்ததி இன மக்களுக்குப் பங்கிட்டுத் தரவேண்டும்.

·        ஆதிதிராவிட மாணவர்களுக்கான விடுதிகளின் அவலை நிலையைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

·        துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்கமுடியாமல் போவதற்கு அவர்களது வேலை நேரமே காரணமாகும். எனவே குழுந்தைகளை பள்ளிக்கு அனுப்பி பராமரிக்கும் வகையில் அவர்களது வேலை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

·        அருந்ததியர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

·        தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான தனித் தொகுதிகளில் மூன்றில் ஒரு பகுதியை அருந்ததியினருக்கு ஒதுக்க வேண்டும்.

·        அருந்ததியினருக்கான உள் இட ஒதுக்கீட்டைக் கண்காணிக்க, அருந்ததி சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

·        பல்கலைக் கழக துணைவேந்தர்களாகவும், நீதிபதிகளாகவும் தகுதி உள்ள அருந்ததி இனத்தவர் நியமிக்கப்பட வேண்டும்.

·        பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்புகளில், அருந்ததியர் குழந்தைகளின் பெற்றோருக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.

இப்படியாக 100 கோரிக்கைகள் அந்த தேர்தல் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் பெரும்பாலானவை அந்த மக்களால் ஆண்டாண்டு காலமாக முன்வைக்கப்பட்டு வரும் பழைய கோரிக்கைகளே. ஆனாலும் அவை இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் வேதனை.

அந்த வகையில் அவை வெறும் கோரிக்கைகள் அல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்ட அந்த அப்பாவி மக்கள் கூட்டத்தின் அவலக்குரல்.

ஈனஸ்வரத்தில் ஒலிக்கும் அந்த எளியமக்களின் துயரக்குரலை அரசியல் கட்சிகள் கண்டு கொள்ளாமல் போகலாம். ஊடகங்களுமா?

டாம்பீகமும், கூச்சலும் மிகுந்த நமது ஜனநாயக அமைப்பில் இது போன்ற ஏதிலிகள் அனாதையாக்கப்படுவதும், அதற்கு நான்காவது தூண்களான ஊடகங்கள் துணை போவதும் நல்லதல்ல.

மேனா. உலகநாதன்

நன்றி தினமலர் - செய்திமலர் (நெல்லைப் பதிப்பு)

தொகுதி அறிமுகம் - 14


26. வேளச்சேரி
Last Updated :

*  தொகுதி பெயர் : வேளச்சேரி
 
 *  வரிசை எண் : 26
 
  *  அறிமுகம் :
 
 தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்ட 4 தொகுதிகளில் வேளச்சேரியும் ஒன்று. மயிலாப்பூர் பேரவைத் தொகுதியில் இருந்த 151, 152-வது வார்டுகளும், தாம்பரம் பேரவைத் தொகுதியில் இருந்த 153, 154, 155 ஆகிய வார்டுகளையும் பிரித்து வேளச்சேரி தொகுதி உருவாக்கப்பட்டது. அடையாறு கிழக்கு, மேற்கு, திருவான்மியூர் கிழக்கு, மேற்கு, வேளச்சேரி ஆகிய பகுதிகள் இதன் எல்லையாகும்.

*  தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:
 சென்னை மாநகராட்சி வார்டு 151, வார்டு 152, வார்டு 153, வார்டு 154, வார்டு 155.
 
 * வாக்காளர்கள்

 ஆண்:  1,08,725
 பெண்: 1,08,275
திருநங்கைகள்: 26
மொத்தம்: 2,17,026

*  வாக்குச்சாவடிகள் மொத்தம் : 250

 *  தேர்தல் நடத்தும் அதிகாரி/ தொடர்பு எண்:

மாவட்ட வருவாய் அலுவலர் (சுனாமி நிவாரணம், மறுவாழ்வு) கேப்ரியல் - 9444 446885.