Saturday, November 20, 2010

புதிய பதிவு....



ஒளிர்ந்தும் ஒளிராத….

அன்று தீபாவளிப் பண்டிகை.
நாடு முழவதும் பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருந்த கொண்டாட்ட ஒளிவெள்ளத்தின் சிறு கீற்று கூட அங்கு கூடியிருந்தவர்களின் முகத்தில் விழவில்லை.

வறுமையின் இறுக்கமும், பசியின் தீவிரமும், கனத்த போர்வையைப் போல இருளின் வடிவில் அவர்கள் மீது ஒரு சேரக் கவிந்து படர்ந்திருந்தது. 

ஆண்டுக்கு 100 நாள் வேலைத்திட்டத்திற்கான குறைந்த பட்சக் கூலியை 100 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தித் தரவேண்டும் என வலியுறுத்தி, தீபாவளிக் கொண்டாட்டத்தைப் புறக்கணித்து, ஜெய்ப்பூர் நகரின் ஓர் இடத்தில் கூடியிருந்த ராஜஸ்தான் மாநில விவசாயத் தொழிலாளர்கள் தான் அவர்கள்.

அக்டோபர் 2ம் தேதி முதல் கடந்த 17ம் தேதிவரை ஏறத்தாழ 47 நாட்கள், அவர்கள் நடத்திய இந்தத் தொடர் போராட்டத்திற்கு,  இறுதியில் வெற்றியே கிடைத்துள்ளது.  

விவசாயத் தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தால், பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்த அம்மாநில அரசு, அவர்களது கோரிக்கையை ஏற்று, கூலியை உயர்த்தித் தர ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், அரசுதரப்பில் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், கையெழுத்திட்டனர்.

‘விவசாயத் தொழிலாளர்களின் போராட்டத்திற்குக் கிடைத்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வெற்றி, நாடு முழுவதும் ஆண்டுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலைபார்த்துவரும் தொழிலாளர்களுக்குப் பயன் அளிக்கக் கூடியது என, போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திய சமூக சேவகர் அருணாராய் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் அருந்ததிராய், பிரபல பத்திரிகையாளர் சாய்நாத், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட மேலும் பல சமூக ஆர்வலர்களும் கூட, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

விவசாயத் தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கையைக் கவனத்தில் கொண்டு, கூலியை உயரத்தித் தர நடவடிக்கை எடுக்குமாறு, தேசிய ஆலோசனைக் குழுத் தலைவர் என்ற முறையில், சோனியாகாந்தியே (!) பிரதமருக்கு கடிதம் எழுதி இருப்பதுதான் இதில், உச்சக்கட்ட சுவராசியம்.

எப்படியோ… அடித்தட்டு மக்களின் குரல் உயர் மட்டத்தில் இருப்பவர்களின் காதுகளில் விழுந்தது வரை மகிழ்ச்சி…

இதன் மூலம், மேலும் பல மாநிலங்களில் ஆண்டுக்கு 100 நாள் வேலைத்திட்டத்திற்கான குறைந்த பட்சக்கூலி, 100 ரூபாயில் இருந்து மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.  

ஆனால், ஆண்டுக்கு 100 நாள் வேலைத்திட்டம் குறித்து, நடைமுறையில் வேறு சில கேள்விகளும் எழுந்து வருகின்றன.

குறிப்பாக தமிழகத்தில், ஆண்டுக்கு 100 நாள் வேலைத்திட்டம் காரணமாக, விவசாய காலங்களில் வேலைக்குத் தொழிலளார்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, சிறுவிவசாயிகள் ஒரு முணுமுணுக்கத் தொடங்கி உள்ளனர்.
இதன் காரணமாக கிராமங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், சிறு விவசாயிகள் எழுப்பும் இந்தப் புகார் அர்த்தமற்றது என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கச் செயலாளரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான கே. பாலகிருஷ்ணன்.

ண்டுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பெரும்பாலும் பெண்களும், வயதானவர்களும் மட்டுமே வேலை பார்த்து வருகிறார்கள். ஆண்டுக்கு 100 நாள் மட்டுமே கிடைக்கும் வருமானத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்திச் செல்ல முடியாது என்பதே யதார்த்தம். அதனால் இந்த வேலைக்கு பெரும்பாலும் குடும்பத் தலைவர்களாக இருக்கும் ஆண்கள் வருவதில்லை. அவர்கள் பிழைப்புத் தேடி வெளியூர் சென்று விடுகிறார்கள். வறுமையை எதிர்த்துப் போராடிக் கொண்டு வீட்டில் இருக்கும் பெண்கள்தான் இந்தத் திட்டத்தின் கீழ் நடைபெறும் வேலைகளுக்குச் செல்கிறார்கள்.

எனவே ஆண்டுக்கு 100 நாள் வேலைத் திட்டத்திற்கும் விவசாய வேலைக்கு தொழிலாளர்கள் கிடைக்காததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விவசாயத்தில் ஏற்பட்டுள்ள நலிவு என்பது ஒட்டுமொத்தமான ஒரு சமூகப் பிரச்சனை. சிறு விவசாயிகள் விவசாயத்தின் மீது நம்பிக்கை இழந்து, நிலத்தைத் தரிசாகப் போட்டுவிட்டு, கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறும் போது, தொழிலாளர்கள் மட்டும் அங்கு எப்படிப் பிழைப்பார்கள். 

அவர்களுக்கும் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்காதா? விவசாயத்தை இன்று தொழிலாக மதிக்கும் இளைஞர்கள் எத்தனை பேர்? பெற்றோர்களும் தான் எத்தனை பேர்?

எல்லோரும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். எளிய விவசாயிகளுக்கு விவசாயம் ஒரு நம்பிக்கை தரக்கூடிய தொழிலாக இன்று இல்லை என்ற யதார்த்தத்தை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

அது ஓர் அடிப்படையான பிரச்சனை.

மத்திய, மாநில அரசுகள் விவசாயத்தை மேம்படுத்த முறையான கொள்கைத் திட்டங்களை வகுக்கவில்லை. மற்ற துறைகளைப் போல், சூழலுக்கு ஏற்ற லாபத்தைத் தரக்கூடிய தொழிலாக விவசாயம் வளரும்போது, இந்தப் பிரச்சனைகள் தாமாகக் காணாமல் போய்விடும். 

விவசாயிகள் உற்பத்தி செய்யும் விலைக்கு, சந்தையில் உரிய விலை கிடைக்கவில்லை. அது கிடைக்கும் போதுதான்,  ஆண்டு முழுமைக்கும் வாழ்க்கைச் செலவுக்குத் தேவையான குறைந்த பட்சவருவாயைத் தரக்கூடிய தொழிலாகவாவது விவசாயம் வளர்ச்சி பெறும். இந்திய விவசாயம் அந்தத் திசையில் கூட இன்னும் காலடி எடுத்து வைக்கவில்லை.

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, ஆண்டுக்கு 100 நாள் வேலையும் ஏதோ கொஞ்சம் கூலியும் கொடுத்து விட்டு, விவசாய வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது” என்று, இந்தப் பிரச்சனைக்கான அடிப்படைக் காரணங்களை அடையாளம் காட்டுகிறார் பாலகிருஷ்ணன்.

கடந்த 2000 முதல் 2008  வரையிலான எட்டு ஆண்டுகளில் மட்டும், இந்திய அரசின் மொத்த வருவாயில் 5லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய், ஊழல் மூலம் சுரண்டப் பட்டு இருப்பதாக சர்வதேச பொருளாதார ஒருங்கிணைந்த அமைப்பின் (Global Financial Integrity) ஆய்வு அண்மையில் தெரிவித்துள்ளது.

ஆனால், அரை வயிற்றுக் கஞ்சிக்கு ஆலாய்ப் பறக்கும் அப்பாவி ஏழைகளுக்கு, உணவுக் கிடங்குகளில்  அழுகி வீணாகும் உணவுப் பொருட்களை இலவசமாக வழங்கவும், அன்றாடக் கூலிகளை உயர்த்தித் தரவும் மறுப்பதற்கான காரணங்களை மத்திய அரசு தேடிக் கண்டுபிடிக்கிறது.

இந்த அணுகுமுறை முரண்பாடுதான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூல காரணமாகிறது.

மற்றொரு பக்கம், சமூகத்தில் சிலர் மட்டும் அனைத்து வசதிகளும் பெற்று வாழ, பலர் குறைந்த பட்சத் தேவைக்கான கூலிக்கே போராடிக் கொண்டிருப்பது எந்த வகையான வளர்ச்சி என்ற கேள்வியும் எழுகிறது.

ஆண்டுக்கு 100 நாட்கள் வேலையும், அதற்கான கூலியும் அரைவயிற்றுக் கஞ்சிக்கு ஆகலாம். அவர்களது வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது என்பதே உண்மை.

வறுமை ஒழிப்பு என்ற முழக்கம் அதன் அர்தத்தை  வேகமாக இழந்து வருகிறது. வளத்தைப் பரவலாக்குவது என்பதே இனிச் சரியான முழக்கமாகவும், இலக்காகவும் இருக்க முடியும்.

மேனா.உலகநாதன்

நன்றி  : 21. 11. 2010, செய்திமலர் – தினமலர் (நெல்லைப் பதிப்பு)