Saturday, December 11, 2010




மாற்றி யோசிக்கலாமே…….

‘வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடிஉயரும்
குடிஉயரக் கோனுயர்வான்’

விவசாயம் எனும் உயிர்த்தொழிலின் அவசியத்தை உணர்த்த, தமிழ் மூதாட்டி ஔவை சொல்லி வைத்த அறவுரை இது.

நவீனத்தின் பாய்ச்சலில், எத்தனையோ தொன்மங்களும், விழுமியங்களும் அர்த்தம் இழந்து வரும் நிலையில், ஔவையின் இந்த மூதுரை மட்டும், நம் மண்ணின் அறமாக இன்றும் நீடித்து வருகிறது.

என்னதான் நவீனப் பொருளாதாரப் புலிகள் அதை இல்லை என அடிக்கப்பார்த்தாலும், இந்த நாட்டின் முதல் தொழிலாகவும், முழுத்தொழிலாகவும் விவசாயமே இன்றுவரை நிலைத்து வருகிறது.
ஆனால், இயற்கையின் சுழற்சி அப்படியே நீடிக்கவில்லை. அதில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

புவி வெப்பமயமாதல் காரணமாக, பருவநிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை நாம் கண்கூடாகக் காண முடிகிறது.
வடமேற்கு, வடகிழக்கு பருவமழைக் காலங்கள் உரிய காலத்தில் தொடங்கி உரிய காலத்தில் முடிவது இல்லை.
  
‘பெய்தும் கெடுக்கும், பெய்யாமலும் கெடுக்கும்’ என்ற விவசாயப் பெருமக்களின் வழக்கு மொழி முன்னெப்போதையும் விட, அண்மைக்காலமாக மெய்யாகி வருகிறது. 

ஆண்டு தோறும், சம்பா பருவ நடவு முடிந்து, சில தினங்களுக்குள் கனமழை பொழிவதும், பயிர்கள் பாழாவதும், அண்மைக் காலமாக தொடர்கதையாகி வருகிறது.

கடந்த சில வாரங்களாகப் பெய்த கனமழையால், கடலூர் மாவட்டத்தில் மட்டும் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள பயிர்கள் நீரில் மூழ்கியதாக, அப்பகுதியை நேரில் பார்வையிட்ட துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

டெல்டா மாவட்டங்கள் குறித்து சொல்ல வேண்டியதில்லை. கடும் சேதமும், பெரும் பாதிப்பும் அப்பகுதி விவசாயிகளைக் கலக்கமடைய வைத்துவிட்டது.
ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி என, தமிழகத்தின் தென் மாவட்டங்களையும், மழை விட்டுவைக்க வில்லை.

நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டிருக்கும் தமிழக அரசு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகிறது.
 ‘முன்பெல்லாம் தான் மழை பெய்தது. ஆனால் அது இத்தனை பேரழிவுகளை ஏற்படுத்துவதில்லை’ சில கிராமத்து முதியவர்கள் வெளிப்படுத்தும் இந்த அதிர்ச்சி கலந்த வேதனையில் அர்த்தம் இல்லாமல் இல்லை.

இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், கிராமப் பகுதிகளில் ஒரு கட்டாயமான பழக்கம் இருந்தது. விவசாயப் பருவம் முடிவடைந்து, கோடைக்காலத்தில் விவசாயிகள் ஓய்வாக இருப்பார்கள்.

அப்போது அந்தக் கிராமத்திற்கான நீராதரங்களுக்கு தண்ணீர் வரும் வழிகளையும், நிரம்பிய பின்னர் அதனை வெளியேற்றுவதற்கான வடிகால்களையும், தூர் வாரித் தூய்மைப் படுத்தும் பணி இயல்பாக மேற்கொள்ளப் படுவதுண்டு.

இதற்கு அரசு சார்பில் உதவியோ, உத்தரவோ எதுவும் பெறப்படுவதில்லை. வீட்டுக்கு ஒரு ஆள் என்ற முறையில், கிராமத்து பொதுமக்களே முடிவெடுத்து, அதனைச் செயல்படுத்துவார்கள்.

இந்த நடைமுறைக்கு சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில்  ‘கிராம ஊழியம்’ என்றே ஒரு பெயருண்டு.

ஆனால், தற்காலத்தில் இந்த நடைமுறை முற்றிலும் கைவிடப்பட்டு விட்டது. நீர் நிலைகளின் மராமத்துப் பணிகளுக்கு முற்றிலும் அரசு நிர்வாகத்தையே எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனநிலைக்கு மக்கள் ஆளாகி இருக்கிறார்கள்.

இதனால், பெரும்பாலான கிராமங்களில், ஏரி குளங்களுக்கு தண்ணீர் வரும் வழியும் சரி, வெளியேற்றப்படும் வழியும் சரி, புதர் மண்டியே காணப்படுகிறது.
தண்ணீர் வருவதும் சிரமம். வந்தால் வெளியேறுவதும் சிக்கல்.

இதனால் கால்வாய்களில் பெருக்கெடுக்கும் மழை நீர், ஏரிகளைச் சென்று அடைய வழி இல்லாமல், நேராக வயல்வெளிகளுக்குள் பீறிட்டுப் பாய்கிறது. ஏரியில் பெருகும் நீரோ, வெளியேற முடியாமல் கரைகள் உடைப்பெடுத்து, வயல் வெளியை மூழ்கடிக்கிறது.

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட, இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்ட மேலும் சில தலைவர்கள், அடிப்படையான இந்தப் பிரச்சனையைச் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

நீர்நிலைகள் தூர்வாரப்படாததுடன், அவற்றுக்கான நீர்வரத்து மற்றும் போக்கு வழிகளும் பாழடைந்து கிடப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ள நிவாரணப் பணிகளில் ஒன்றாக, நீர்நிலைகளையும், அவற்றின் நீர் வரத்து மற்றும் போக்குக்கான வழிகளையும் சீரமைப்பதில் அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் சுமார் 39 ஆயிரம் நீர் நிலைகள் இருந்த இடம் தெரியாமல், ஆக்கிரமிப்பாளர்களால் விழுங்கப்பட்டு விட்டதை,  சில ஆண்டுகளுக்கு முன்னரே சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர்.

எஞ்சி இருக்கும் நீர் நிலைகளையேனும் உரிய முறையில் பராமரிக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல, பொதுமக்களின் கடமையும் கூட.
மழை வெள்ளப் பாதிப்பு குறித்த ஆய்வுப்பணியில், நீர் நிலைகள் குறித்த இந்த கணக்கெடுப்பையும் அரசு சேர்த்துச் செய்தால், அடுத்த மழைக்காலத்திலாவது, வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து ஓரளவேனும் தப்ப முடியும்.

இது ஒரு புறம் இருக்க, கால மாற்றத்தால் ஏற்படும் இத்தகைய இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள இதுவரை நாம் என்ன வியூகம் வகுத்திருக்கிறோம்?
பனி, மழை, வெயில் என இயற்கையின் பருவமாற்றங்கள் அனைத்தும் அளவுக்கு மீறிய உக்கிரத்துடன், பூமிப்பந்தைத் தாக்கத் தொடங்கி உள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் கொட்டித் தீர்க்கும் கொடும் பனியும், கீழை நாடுகளில் பெய்து தீர்க்கும் பேய் மழையும் இதனை ஆண்டுதோறும் நமக்கு உணர்த்தி வருகின்றன.

மற்ற நாடுகளைக் காட்டிலும், மண்ணையும், மழையையும் சார்ந்திருக்கும் விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட நாம்,  இது குறித்து அதிகம் சிந்திக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற நமது முன்னோர்களின் பழ மொழியை, வேளாண் தொழிலுக்கான அடிப்படை விதியாக இனியும் நாம் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஆடி மாதம் நாற்றுப் பாவி, ஆவணியில் நடவு செய்த சில தினங்களுக்குள்ளேயே பெருமழை பெய்து பயிரை மூழ்கடித்து விடுகிறது.

இல்லாவிட்டால், நெற்பயிர் முற்றி, அறுவடைக்கு தயாரக உள்ள நேரத்தில் பெய்து, விளைந்த பயிரை நாசம் செய்து விடுகிறது.

இப்படிக் காலம் தவறிப்பெய்யும் மழைக்குத் தகுந்தவாறு நமது விவசாய முறைகளை மாற்றி அமைத்துக் கொள்வது குறித்து, வேளாண் வல்லுநர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கருத்து, விவசாயிகள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

விவசாய முறைகளிலும், காலத்திலும் மாற்றங்களை மேற்கொள்வது பற்றி, வேளாண் வல்லுநர்கள் யோசிக்கலாமே?

மேனா. உலகநாதன்

நன்றி : 12. 12. 2010, தினமலர் – செய்திமலர்