(9.1.11 தினமலர் செய்திமலர் நெல்லைப் பதிப்பில் வெளிவந்த கட்டுரை)
விரக்தியின் விளிம்பில்…
நாட்டில் விவசாயத்தைத் தொழிலாக கொண்டவர்களில் 45 சதவீதம் பேர் இந்தப் பிழைப்பே வேண்டாம் என்று நொந்து போய்ச் சொல்லுவதாக, பசுமைப் புரட்சியின் தந்தை என்று பாராட்டப்படும் தேசிய விவசாயிகள் ஆணையத்தின் தலைவர் எம்.எஸ். சுவாமிநாதன் அண்மையில் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஆச்சார்யா என்.ஜி. ரங்கா விவசாயப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர், மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போது இதனைக் கூறியுள்ளார் (Business Line, Dec – 30, 2010).
எம்.எஸ். சுவாமிநாதன் தெரிவித்திருப்பதாலேயே இந்தக் கருத்து, பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தந்தையாக இருந்து அவர் பெற்றெடுத்த பசுமைப் புரட்சி குறித்து, பல்வேறு கருத்து வேறுபாடுகள் உண்டு. எனினும், இந்திய விவசாயத்துறை சார்ந்து, அதற்கான அதிகாரத்தளங்களில் இடம்பெற்று இயங்கி வருபவர் என்ற அளவில், விவசாயத்தின் நிலை குறித்து அவர் தெரிவிக்கும் கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை மறுப்பதற்கில்லை. விவசாயம் குறித்த நவீன கருதுகோள்கள் அடைந்திருக்கும் தோல்வியைப் புரிந்து கொள்ள, அதன் பிதாமகர்களில் ஒருவராக கருதப்படும் எம்.எஸ்.சுவாமிநாதனின் பதில்களே போதுமானது என்று நம்புகிறோம். அந்தப் பேட்டியின் சுருக்கம் இதோ….
கேள்வி : விவசாயிகள் தற்கொலை செய்வது தொடர்கதையாகி விட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் (ஆந்திராவில்) நூற்றுக்கணக்கான குத்தகை விவசாயிகள் கூட தற்கொலை செய்து கொண்டார்கள். ஏன் இந்த துயரம் தொடர்கிறது?
பதில் : விவசாயத்தைப் பொறுத்தவரை மிகச்சிக்கலான காலக்கட்டத்திற்குள் நாம் நுழைந்து கொண்டிருக்கிறோம். இந்தப் பிரச்சனை பன்முகப்பரிமாணங்களைக் கொண்டது. எளிமையான ஒரே ஒருகாரணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. சில பயிர்களுக்கு அதிக முதலீடு ஒரு பிரச்சனையாக இருக்கிறது. போதிய மழை இன்மை, நிலத்தில் தண்ணீருக்கான ஊற்று இன்மை இப்படி இடத்துக்கு இடம் பிரத்தியேகமாக பல்வேறு பிரச்சனைகள்…
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு, உற்பத்திக்கு ஆகும் செலவுடன், 50 சதவீதம் சேர்த்து வழங்க வேண்டும் என்று, தேசிய விவசாயிகள் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், அவர்களுக்கு உற்பத்தி செலவுடன் 15 சதவீதம் மட்டுமே சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. மொத்தத்தில் விவசாயம் என்பது இன்று கட்டுபடியாகக்கூடிய தொழிலாக இல்லை.
தற்போதைய உணவுப் பாதுகாப்புச் சட்டம், இந்தப் பிரச்சனையில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடியை மத்திய அரசுக்கு ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன். விவசாயப் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால், நாட்டில் 100 கோடி மக்களுக்கும், 100 கோடி விவசாயக் கால்நடைகளுக்கும் நாம் உணவு வழங்க முடியாது. இதை மிகவும் சிக்கலான காலக்கட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.
கேள்வி : இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடத் தயக்கம் காட்டுவது ஏன்? அவர்களது கவனத்தை இந்த தொழிலின் மீது திருப்ப என்ன செய்யலாம்?
பதில் : விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில், இளைஞர்கள் மட்டும் ஏன் விவசாயத்திற்கு வரப்போகிறார்கள்? விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாத வரை, இளைஞர்களை விவசாயத்தின் பக்கம் ஈர்க்க முடியாது. விவசாயத்தை தொழில் நுட்ப ரீதியாகவும், வருவாய் மதிப்புள்ள தொழிலாகவும் மேம்படுத்துவது குறித்து, மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். அதில் உள்ள அபாயங்களைக் குறைப்பதற்கும், காப்பீடு, கடன் உள்ளிட்ட உதவிகள் எளிதில் கிடைப்பதற்கும் வகை செய்ய வேண்டும்.
கேள்வி : பல்வேறு காரணங்களால் விவசாயத்தை விட்டு பலர் வெளியேறி வருகிறார்கள். விவசாய நிலங்கள், விவசாயமல்லாத பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுவது விரைவாக நடந்து வருகிறது. இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில் : நாட்டில் விவசாயத்தைத் தொழிலாக கொண்டவர்களில் 45 சதவீதம் பேர், அந்த தொழிலை விட்டு வெளியேறப் போவதாக, அண்மையில் நடத்தப்பட்ட தேசிய மாதிரி கணக்கெடுப்பின் போது தெரிவித்துள்ளனர். கடன் சுமை தரும் அழுத்தத்தால், விவசாயிகள் தங்களது நிலங்களை, விவசாயம் அல்லாத காரணங்களுக்காக விற்பனை செய்யும் மன நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால், விவசாயத்திற்கான நிலப்பரப்பு சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. நிலத்தின் விலையும் அதிகரித்து வருகிறது. சிறிய அளவு நிலத்தில் விவசாயம் செய்பவர்கள் கூட, அதிக உற்பத்தியும், நிறைய லாபமும் அடையக் கூடிய தொழிலாக விவசாயம் மாற வேண்டும்.
கேள்வி : பருவநிலையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் விவசாயத்தைப் பொறுத்தவரை எந்த அளவு பாதித்துள்ளது? அதனால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க என்னமாதிரியான திட்டங்களை வகுக்கலாம்?
பதில் : பருவநிலை அடிப்படையிலான 128 விவசாய மண்டலங்களாகப் பிரித்து (agro-climatic zones), அவை ஒவ்வொன்றுக்கும், பருவநிலை அபாய மேலாண்மைக்கான ஆய்வு மற்றும் பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும். வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற பேரிடர் மேலாண்மைக்கான புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும். தற்போது உள்ளதைப் போல, பேரிடர் இழப்புகளை, மத்தியக் குழுக்களை அனுப்பி மதிப்பிடுவது, பின்னர் மாநில அரசுகளோடு பேரம் பேசுவது போன்ற நடைமுறைகள் எல்லாம் பயனற்றவை. இதன் மூலம் விவசாயிகளுக்கு அடுத்த பருவத்துக்கு முதலீடு செய்து பயிரிடுவதற்கு உரிய காலத்தில் கைக்கு பணம் கிடைப்பதில்லை.
மொத்தத்தில் விவசாயப் பிரச்சனைகளைப் பொறுத்தவரை நம்மிடம் ஒருங்கிணைந்த அணுகுமுறை இல்லை. மேற்கத்திய நாடுகளில் விவசாயம் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும் ஒரு முனை அமைப்பின் கீழ் அணுகப்படுகிறது. எனினும் விவசாயம் தொடர்பான நமது பிரச்சனைகள் தீர்க்கப்பட முடியாதவை அல்ல. எல்லாம் நாம் உருவாக்கிய பிரச்சனைகள்தாம். எனவே அவற்றுக்கு நம்மால் தீர்வு காணமுடியும்.
…………..
இந்தப் பேட்டியில் இடம்பெற்றுள்ள கருத்துகளை, நவீன வேளாண் விஞ்ஞானி ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலம் என்றே கருதலாம். ஓரளவுக்கு நேர்மையாகவே பதில் அளித்திருக்கிறார். எனினும், தோல்விகளை ஒப்புக்கொண்ட அளவிற்கு, அவற்றுக்கான தீர்வு குறித்து சரியான திசையில் சிந்தித்துள்ளாரா என்பது குறித்த கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்திய விவசாயத்தில், தொழில் நுட்ப ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் ஏற்பட்டுள்ள தோல்விகளை மட்டுமே நவீன வேளாண் வல்லுநர்கள் கவனத்தில் கொண்டிருப்பதை எம்.எஸ்.சுவாமிநாதனின் இந்தப் பதில்கள் நமக்கு தெளிவு படுத்துகின்றன.
இயற்கைப் பேரிடர் குறித்து அஞ்சும் இவர்கள், மண்ணிற்கு நாம் இழைத்துள்ள செயற்கைப் பேரிடரை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை என்பதுதான், பிரச்சனையின் மற்றொரு பரிமாணம். மண்ணுக்கேற்ற மரபு சார்ந்த விவசாய முறைகளையும், பயிர்களையும் பாதுகாத்து, அவற்றை நமது மரபு உரிமைகளாகவும், செல்வங்களாகவும் நிலை நிறுத்துவது, நவீனச் சூழலில் நாம் எதிர்கொள்ள நேர்ந்திருக்கும் மிகப்பெரிய சவாலாகும். விவசாய வளர்ச்சி குறித்த திட்டமிடல்களில், அது குறித்து இவர்கள் சிந்திக்க மறுப்பது கவலை அளிக்கிறது.
பசுமைப் புரட்சி போன்ற மற்றுமொரு செயற்கைப் பேரழிவை, இந்த மண்ணில் ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்பதை, நவீன வேளாண் வல்லுநர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மண்ணைக் கொன்று விட்டு மனிதர்களை மட்டும் எப்படி ஐயா வாழவைக்க முடியும்?
மேனா. உலகநாதன்