வேண்டாம் விபரீத யோசனை!
வறுமை ஒழிப்பைப் போலவே விவசாய வளர்ச்சியும் இந்தியாவைப் பொறுத்தவரை நிறைவேறாத நெடுங்கனவாகவே இன்றளவும் நீடிக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால், அதற்கான பிரச்சனைகளும், தீர்வுகளும், ஒற்றைப் பரிமாணம் கொண்டவை அல்ல.
இந்த நிலையில், விவசாயத்தை வளர்த்தெடுக்க, நவீன வேளாண் வித்தகர்கள் (!) சிலர் அண்மையில் முன்வைத்துள்ள திட்டம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஈ ஃபார்ம் என்ற அமைப்பை நடத்திவரும் வெங்கட சுப்பிரமணியன் என்பவர் தெரிவித்திருக்கும் யோசனைகள் விபரீதமானவை என்கின்றனர் விவசாயிகள் சங்கத்தினர்.
அப்படி அவர் முன்வைக்கும் தீர்வும், திட்டமும்தான் என்ன?
‘விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கு, அவற்றை கொள்முதல் செய்து சந்தைப்படுத்தும் பொறுப்பை, முழுக்கத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும்.
இதில் தொழில்முறை இடைத்தரகர்களின் பங்கு மிக முக்கியமானது(!). 4 அல்லது 5 கிராமங்களுக்கு ஒரு நிறுவனத்தை அவர்கள் தொடங்க அனுமதிக்க வேண்டும். அவற்றின் மூலம், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களைக் கொள்முதல் செய்து, தனியாருக்கு நல்ல லாபத்துடன் விற்பனை செய்ய வேண்டும்.
விவசாயத்துறை தொடர்பான அனைத்துப் பொறுப்புகளையும், அரசிடம் இருந்து பறித்து தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் . எல்லாவற்றையும் அரசே செய்து கொண்டிருந்தால் அதில் லாபம் பார்க்க முடியாது…’ இப்படியாக விவசாயத்தைக் காப்பாற்றுவதற்கான பல புதிய உத்திகளை அவர் தெரிவித்திருக்கிறார்.
மருந்து, மளிகை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் பல்வேறு வர்த்தகச் சங்கிலித் தொடரின் மூலமாக மக்களைச் சென்றடையும் போது, விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு மட்டும் ஏன் அது பொருந்தாது எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
விவசாயிகளுக்கு அரசால் வழங்கப்பட்டு வரும் மானியங்களும், இலவச உதவிகளும், கடன் தள்ளுபடிகளும், அவர்களைச் சுயமரியாதையற்றவர்களாக மாற்றவே வழிவகுக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஆனால், இது போன்ற யோசனைகள் விவசாயத்தைக் கார்ப்பரேட் மயமாக மாற்ற உதவுமே தவிர, எளிய மக்களின் வாழ்வாதாரமாக தகவமைக்க உதவாது என்கிறார்கள் மரபுசார்ந்த வேளாண் வல்லுநர்கள். இது தொடர்பாக அவர்கள் முன்வைக்கும் மேலும் சில கருத்துகள், இந்திய விவசாயத்தின் எதிர்காலம் குறித்த அழுத்தமான கவலைகளை நமக்குள் ஏற்படுத்துகின்றன.
“விவசாயத்தை லாபம் மிக்க தொழிலாக மாற்றவேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால், சந்தைப்படுத்துவதால் மட்டுமே அது சாத்தியமில்லை. அது மட்டுமே விவசாயத்தின் பிரச்சனையும் அல்ல.
இந்தியாவைப் பொறுத்தவரை விவசாயம் என்பது வெறும் வியாபாரமோ, தொழிலோ மட்டுமல்ல. நாட்டின் தற்சார்பு உள்ளிட்ட உன்னத இலக்குகளுக்குமான ஜீவாதாரத் தளம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும், இலவசங்களும், மானியங்களும் அவர்களின் சுயமரியாதையைப் பறிப்பதற்கல்ல. அவர்களிடமிருந்து பல ஆண்டுகளாக, பல்வேறு வடிவங்களில் பறிக்கப்பட்டுவரும் மண்வளத்தையும், மனிதவளத்தையும் ஈடு செய்ய என்பதை உணர்ந்நு கொள்ள வேண்டும். அது ஒரு மக்கள் அரசின் மறுக்க முடியாத கடமை.
பன்னாட்டு நிறுவனங்களால் விதைகளும், உரமும் கடன் வழங்கப்பட்டு, அதனால், விவசாயிகள் விஷம் குடித்துச் சாகும் நிலைக்குத் தள்ளப்பட்டதை ஏற்றுக்கொள்ளும் இந்த நவீன வேளாண்மைச் சிந்தனையாளர்கள், சொந்த மக்களைக் காப்பாற்ற அரசு வழங்கும் உதவிகளை விமர்சிப்பதன் உள்நோக்கம் நமக்குப் புரியவில்லை.
ஜனநாயக அமைப்பில் அத்தியாவசியத் தேவைகள் தொடர்பான அனைத்தும் அரசின் வசம் இருக்க வேண்டும் என்பதே, நியாயமான நடைமுறையாக இருக்க முடியும்.
விவசாயம் என்பது அத்தியாவசியத் தேவை மட்டுமின்றி, ஆதாரத் தேவையும் கூட. அப்படி இருக்கும் போது, அதற்காக அரசு மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகளை வீண் செலவாகச் சித்தரிப்பது, விபரீத விளைவுகளுக்கே வழி வகுக்கும்.
ஏழ்மையும், வறுமையும் புதராக மண்டிக்கிடக்கும் நாட்டில் விவசாயம் ஒன்றுதான் எளிய மக்களின் வாழ்வாதாரமாக எஞ்சி நிற்கிறது. அதனையும் அவர்களிடம் இருந்து பறித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க வேண்டும் என்ற பேராசையே, நவீன வேளாண் சிந்தனையாளர்களிடம் தெரிகிறது.
நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்கப்பட்டு அதில், மண்ணுக்கேற்ற பயிர்களை விளைவிப்பதன் மூலமாகவே, விவசாயத்தை அதன் வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றும் முதல் கட்ட நடவடிக்கையாக இருக்க முடியும்.
ஆனால், இதற்கு நேரெதிராக விளைநிலங்களை மனையிடங்களாக கூறு போட்டு, கொள்ளை லாபத்திற்கு விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் கோமான்களின் ஆட்சிதான் இப்போது கொடிகட்டிப் பறக்கிறது.
எஞ்சியுள்ள நிலங்களையும் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரால், பெருமுதலாளிகளுக்கு பங்கு போட்டுத் தரும் கைங்கர்யமும் ஜரூராக நடந்தேறி வருகிறது.
இந்தநிலையில், விவசாயத்தை வளர்க்க யோசனை சொல்லுகிறோம் என்ற பெயரில், இடைத்தரகர்களின் பங்களிப்பு அவசியம் என்பது போன்ற விபரீத திட்டங்களை முன்வைப்பது ஆபத்தானது.
அரசு கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதோடு, தானியங்களைப் பதனிட்டு பாதுகாக்கும் வசதியும் விவசாயிகளுக்கு செய்துதரப்பட வேண்டும் என்பதே எமது முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
விசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் முழு உரிமையும் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். இடைத்தரகர்கள் வந்து ஆளுமை செலுத்துவதற்கு, இது பங்குச் சந்தையைப் போல வர்த்தகப் பரிவர்த்தனை மையம் அல்ல.
ஆழிப்பேரலையால் பேரழிவு நேர்ந்த போது இந்தியப் பங்குச் சந்தை வரலாறுகாணாத வகையில் ஏற்றம் கண்டதாகச் சொல்வார்கள்.
அழிவில் ஏற்றம் காணுவதற்கு விவசாயம் ஒன்றும் பங்குச்சந்தை இல்லை. அது ஆக்கத்தில் மட்டுமே ஏற்றம் காணக்கூடிய நேரிய தொழில். விவசாயத்தை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை விவசாயிகளிடம் தான் கேட்க வேண்டும். தரகர்களிடம் அல்ல ”
விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்திருக்கும் இந்தக் கருத்து, அத்துறையின் எதிர்காலம் சார்ந்த பல முக்கியக் கேள்விகளை நம்முள் எழுப்புகிறது.
எந்த ஒரு தொழிலும் நவீனத்தன்மைக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளாத போது, அதன் இருத்தலும் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் என்பதே இயற்கையின் நியதி. விவசாயத்துக்கும் அது பொருந்தும் என்பதை மறுப்பதற்கில்லை.
எனினும், மற்ற தொழிலுக்கும், விவசாயத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு. மற்றவற்றுக்குப் பொருந்தும் பொருளாதாரப் புள்ளிக் கணக்குள் இதற்குப் பொருந்தாது.
விவசாயம் என்பது வெறும் பொருளாதார மேம்பாடு சார்ந்த துறை மட்டும் அல்ல…
எளியமக்களின் தவிர்க்க முடியாத வாழ்வாதாரம்…
நாட்டின் தற்சார்புத் தன்மையைத் தன் உயிரைக் கொடுத்துப் பிடித்து இழுத்து வைத்திருக்கும் மூலாதாரம்…
மண்ணையும், மண்சார்ந்த விதை உள்ளிட்ட மரபு உரிமைகளையும் காக்க வேண்டிய தார்மீக ஆதாரம்….
என அடிப்படையான அனைத்து ஆதாரங்களுக்கும் உயிராதாரமாக விளங்குவதுதான் விவசாயம் என்பதை நவீன வேளாண் சிந்தனையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மேனா.உலகநாதன்
நன்றி : 05.12.10 தினமலர் செய்திமலர் .