Friday, April 1, 2011


அரசியல் காணாமல் போன தேர்தல் களம்!

“முன்பெல்லாம் தேர்தல் என்றால் சுவர்கள் முழுவதும் சின்னங்கள் சிரிக்கும். கட்சிக் கொடிகளின் வண்ணங்கள் கண் சிமிட்டும். இரவெல்லாம் தலைவர்கள் வருகைக்காக காத்திருந்து, நள்ளிரவு நேரத்தில் அவர் வந்தாலும் மக்கள் ஆர்ப்பரித்து வரவேற்பார்கள். இப்போது எல்லாமே மாறி விட்டது. ஒரு தேர்தல் நடைபெறுவது போலவே இல்லை…”

தற்போதைய தேர்தல் நடைமுறைகள் குறித்த நண்பர் ஒருவரின் அங்கலாய்ப்பு இது.

தேர்தல் பிரச்சார நடைமுறைகள் மட்டுமா மாறியுள்ளன?
அன்று தொண்டனின் மனதில் கனன்று கொண்டிருந்த கருத்தாவேசம், தலைவனின் வருகைக்காக அவனை நள்ளிரவு வரை காத்திருக்கத் தூண்டியது. தான் ஏற்றுக்கொண்ட கொள்கையை வலியுறுத்தும் தலைவனின் சிந்தனையும், பேச்சும் ஒரு வேதி வினையைப் போல், அவனுக்குள் ஓர் அறிவுக் கிளர்ச்சியை ஏற்படுத்தின.

இப்போது தேர்தல் ஆணையம் தடைவிதித்திரா விட்டாலும் கூட, இரவு பத்து மணிக்கு மேல் தலைவர்களின் வருகைக்காக தொண்டர்கள் காத்திருக்க மாட்டார்கள்.

அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அளவுக்கு எந்த தலைவர்களும் அவர்களுக்குப் புதிய செய்திகளையோ, புதிய சிந்தனைகளையோ கொண்டுவரப் போவதில்லை என்பதே உண்மை.

அரசியல் களம்,  உண்மையான அரசியல் களமாக இருந்த போது தலைவராக முகிழ்த்து உருவாகி, 75 ஆண்டுகால வாழ்வையும் அதிலேயே கழித்துள்ள, முதலமைச்சர் கருணாநிதி கூட, இன்று கருத்துகளை முன்வைத்து வாக்குக் கேட்கும் நிலையில் இல்லை.    

திமுக, அதிமுக இரண்டு ஆட்சிகளையும் ஒப்பிட்டுப்பார்த்து வாக்களியுங்கள் என்று கேட்கிறார்.

எங்களுக்கு வாக்களித்தால் இத்தனை பொருட்களை இலவசமாகத் தருவோம் என்கிறார். திட்டங்கள் தொடர வாக்களியுங்கள் என்கிறார்.

எத்தகைய இலட்சியங்களை வென்றெடுப்பதற்காக திராவிட இயக்கம் தொடங்கப்பட்டதாக கூறப்பட்டதோ, அதன் கருத்தாக்கங்களில் ஒன்று கூட இன்று பிரச்சாரத்துக்காகவேனும் பேசப்படுவதில்லை.

அண்மையில் பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், திமுக, அதிமுக இரண்டு கட்சிகளின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணிகளுமே கொள்கையற்ற கூட்டணிகள் என விமர்சிக்கப் பட்டுள்ளது. எனவே இரண்டு அணிகளையுமே தாங்கள் ஆதரிக்கப் போவதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

பெரியார் திராவிடர் கழகம் சொல்லித்தான் இது தெரியவேண்டுமா என்று கேட்கலாம். அதற்கு அவர்கள் சொல்லியிருக்கும் விளக்கம் முக்கியமானது என்பதால் அதனை இங்கே குறிப்பிட வேண்டி உள்ளது.

தேர்தலுக்குத் தேர்தல், கருத்து அடிப்படையிலான மோதல் பின்னுக்குத் தள்ளப்பட்டு, சந்தர்ப்பவாத உடன்பாட்டின் அடிப்படையில் தேர்தலை சந்திக்கும் போக்கு அரசியல் கட்சிகள் மத்தியில் அதிகரித்து வருவதை அந்த தேர்தல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

43 ஆண்டுகளுக்கு முன்னர், திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரசும் தேர்தல் களத்தில் எதிரெதிர் முனைகளில் சந்தித்துக் கொண்டன.
அப்போது ஏதுமற்ற ஏதிலிகளான எளியமக்களின் பிரதிநிதியாக திமுக தன்னை முன்னிறுத்தியது.

காங்கிரஸ் ஆதிக்க சக்தியின் அடையாளமாக சித்தரிக்கப் பட்டது. அதில் ஒரளவுக்கு உண்மையும் இருந்தது.
எளிய மக்களின் ஆதரவில் திமுக முதன்முறையாக ஆட்சிக்கட்டிலில் ஏறி அமர்ந்தது.

ஆட்சி அதிகாரமும், தேர்தல் காலத் தேவைகளும் திமுகவின் அடிப்படைக் கொள்கைகளை அவ்வப்போது காவு கேட்டன. தலைவர்களால் தவிர்க்கவோ, தப்பிக்கவோ முடியவில்லை.

கருப்பும் சிவப்பும் மெல்ல மெல்ல வெளிறி மஞ்சள் ஆனது.
காலப்போக்கில் அது ஒரு பிரச்சனையாகவே இல்லை. இந்த அரசியல் களேபரத்தில் இருந்து இடதுசாரிகளும் தப்பவில்லை.

ஒரு முறை திமுகவுடன் என்றால், அடுத்த முறை அதிமுகவுடன். இத்தகைய அணிச்சேர்க்கைக்கு அவர்கள் ஒவ்வொரு முறையும் முன்வைக்கும் காரணங்கள் மிகவும் பலவீனமானவை. திமுகவிடமும், அதிமுகவிடமும் அவர்கள் அவ்வப்போது காணும் அரசியல் முரண்பாடும், உடன்பாடும், விநோதமான அரசியல் வேடிக்கைகள்.

ஏறத்தாழ பாமகவின் நிலையும் இதுதான். காங்கிரஸ் குறித்து கவலை கொள்ளவே தேவை இல்லை. அவர்களுக்கு ‘கொள்கை’ சார்ந்த கவலைகளோ தடைகளோ கிடையாது.

தமிழர்கள் தலைநிமிர்ந்து விடக் கூடாது என்பதில் மட்டும் அக்கட்சியின் டெல்லித் தலைமை உறுதியாக இருக்கும். அந்த வகையில் காங்கிரசின் கொள்கை உறுதியைக் குறை சொல்ல முடியாது.

அத்தகைய காங்கிரசுடன்தான் திமுக கடந்த 7 ஆண்டுகளாக கூட்டணி வைத்திருக்கிறது. இப்போதும் 63 இடங்களைத் தந்து அந்த உறவை ஒருவழியாக காப்பாற்றிக் கொண்டுள்ளது.

இலங்கைத் தழிழர்களைக் காப்பாற்றுவதே தனது அரசியல் லட்சியம் என கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முழங்கிய ஜெயலலிதா, ஈழத்தமிழர்களுக்கு தொடந்து ஆதரவுகாட்டி வந்த மதிமுகவை இந்த தேர்தலில் கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக வெளியே தள்ளிக் கதவைச் சாத்தி விட்டார்.

எந்த அரசியல் அடிப்படையும் அற்ற விஜயகாந்திற்கு 40க்கும் மேற்பட்ட இடங்களை அளித்து அணிசேர்த்துக் கொண்டுள்ளார்.

இருபுறங்களிலும் இருந்து இலவசங்கள் தொடர்பாற அறிவிப்புகளை தங்களது தேர்தல் அம்பறாத் தூணிகளில் இருந்து திமுகவும், அதிமுகவும் தொடர்ந்து எடுத்து வீசுகின்றன.

பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, சமூக நீதி போன்ற கொள்கை முழக்கங்களுக்குப் பதிலாக, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி என தனது அரசியல் வியூகத்தை மாற்றிக் கொண்டுவிட்டது இன்றைய திமுக.

திமுக வுக்கு எதிர்ப்பதம் தானே அதிமுக. அந்த வகையில் திமுக சொல்வதைவிட கூடுதலாக கொஞ்சம் என்ற அளவில் அதிமுக தேர்தல் களமாடுகிறது.
இப்படியாக, கருத்துகள் மோதிக்கொண்ட தேர்தல் களத்தில் இப்போது கிரைண்டர்களும், மிக்சிகளும் மோதிக்கொள்கின்றன.

இவற்றில், திமுக அறிவித்துள்ள இலவசங்களை விட, அதிமுகவின் இலவச அறிவிப்புகள் பயனுள்ளவை என்ற ரகசியத்தைக் கண்டறிந்து சொல்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்.
இடதுசாரிகளின் அரசியல் போராட்டம் என்பது இரண்டு திராவிட இயக்கங்களில் ஏதாவது ஒன்றை நியாயப்படுத்துவது என்ற அளவில் சுருங்கிப் போனதுதான் சோகம்.

நவீன தேர்தல் பிரச்சாரத்தில் காணாமல் போயிருப்பது சுவர் விளம்பரங்களும், நள்ளிரவுக் கூட்டங்களும் மட்டுமல்ல என்பதை நாம் புரிந்து கொண்டிருக்கிறோமா?
மேனா. உலகநாதன்

நன்றி : தினமலர் - செய்திமலர்