ஜனநாயகத்தின் சண்டாளர்கள்!
அலைவரிசை ஒதுக்கீட்டுப் புகாரை முன்னிறுத்தி நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளை, வட இந்திய ஊடகங்கள், ஆங்கிலமா ஹிந்தியா என அடையாளம் கண்டறிய முடியாத வினோதமொழியில், விலாவாரியாகக் கடைவிரித்துக் கொண்டிருந்தன.
அந்த ஜனநாயக சங்கடத்தைப் பார்த்த படியே நாளேட்டைப் புரட்டிய போது கண்ணில் பட்ட மற்றொரு செய்தி, அத்தகைய சங்கடத்தை மேலும் அதிகப்படுத்தியது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் விதார்பா மாவட்ட விவசாயிகளுக்கு அப்போதையை முதலமைச்சரே இழைத்த கொடுமை குறித்து, உச்சநீதிமன்றம் தெரிவித்த கண்டனம் தொடர்பான செய்திதான் அது.
விதார்பா மாவட்டத்தை அத்தனை சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. 1997 முதல், 2008ம் ஆண்டு முடிய சுமார் பத்து ஆண்டுகளில், அந்த மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டனர்.
மனித வரலாற்றிலேயே, குறிப்பிட்ட ஒரு பிரச்சனை தந்த அழுத்தத்தால் இத்தனை பேர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு நடந்ததில்லை என்பது, மானுடவியாலாளர்களின் கருத்து.
இத்தகைய வரலாற்றுக் கொடூரத்துக்கு ஆளான அந்த அப்பாவி விவசாயிகள் பலரின் தற்கொலைக்குக் காரணமாக, அந்த மாநிலத்தின் அப்போதைய முதமைச்சரே இருந்துள்ளார் என்பதுதான் இதில் உச்சக்கட்ட சோகம்.
அவர் வேறு யாருமல்ல. தற்போது மத்திய அமைச்சராக வலம் வந்து கொண்டிருக்கும் விலாஸ்வராவ் தேஷ்முக்தான்!
அப்படி அவர் என்னதான் செய்து விட்டார்?
மகாராஷ்டிர மாநிலத்தின் அப்போதைய காங்கிரஸ் எம்எல்ஏ திலீப்குமார் சனந்தா என்பவரும், அவரது குடும்பத்தினரும், விதார்பா மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகளுக்கு கந்து வட்டிக்கு கடன் கொடுத்து வந்துள்ளனர்.
குறைந்தது மாதம் ஒன்றுக்கு 10 சதவீதம் வட்டி என்றால் எந்த விவசாயியால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும்?
மானத்தைப் பெரிதாக கருதும் விவசாயிகள், அதனை விட முடியாமல் உயிரை விடும் அவலம், அம்மாவட்டத்தில் தொடர்கதையானது.
இந்தக் கொடுமை குறித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளில் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் எழுத்து மூலமாகப் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் அந்தப் புகார்கள் மீது, அம்மாநிலக் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதததுடன், வழக்குப் பதிவு செய்யவும் மறுத்து விட்டது.
தங்களுடைய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை மறுப்பதாக, மகாராஷ்டிர மாநில உயர் நீதி மன்றத்தில் விவசாயிகள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், விவசாயிகளின் புகார் தொடர்பாக காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், அதனைப் பதிவு செய்ய மறுத்ததற்கு அபராதமாக அரசு 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
அதற்குப் பின்னரும் அம்மாநில அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டியதைத் தொடர்ந்து, விவசாயிகள் உச்சநீதிமன்றத்தின் உதவியை நாடி உள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர், இந்தப் பிரச்சனை குறித்து கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியருக்கு, முதலமைச்சர் விலாஸ்வராவ் தேஷ்முக்கின் அந்தரங்க உதவியாளர், தொலை பேசி மூலம் எச்சரித்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
2006ம் ஆண்டு, மே மாதம் 31ம் தேதி, முதலமைச்சரின் உதவியாளர், தொலை பேசி மூலமாக, மாவட்ட ஆட்சியருக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்திருப்பதையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே, அரசு இயந்திரத்தை ஏழைகளுக்கு எதிராகப் பயன்படுத்தி இருக்கும் இந்தச் சம்பவம் தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மாகாராஷ்டிர மாநில அரசுக்கு விதித்த அபராதத் தோகையை 10 லட்சம் ரூபாயக அதிகரித்து உத்தரவிட்டதுடன், உடனடியாக வழக்குப் பதிவு செய்யுமாறு காவல்துறைக்கும் அவர்கள் கட்டளை இட்டுள்ளனர்.
ஜனநாயக அமைப்பில், தங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ள எல்லைக்கு உட்பட்டு, அவர்களால் செய்ய முடிந்தது இவ்வளவுதான் போலும்.
பன்னாட்டு நிறுவனங்களைக் களமிறக்கி, விதைகள், உரம் என அனைத்திற்கும் விவசாயிகளைக் கையேந்த வைத்தது, மத்திய அரசு என்றால், மாநில அரசின் அதிகார பீடத்தில் இருப்பவர்கள், அந்த மக்களிடமே கந்து வட்டிக்குப் பணம் கொடுத்துள்ளனர்.
என்ன ஒரு ஜனநாயகம்?
இதில் நீ செய்த ஊழல் பெரிதா, நான் செய்த ஊழல் பெரிதா என்ற பட்டி மன்றம் வேறு.
பல லட்சம் கோடி ஊழல்கள் எல்லாம் அனாயசமாக அரங்கேறிக் கொண்டிருக்கையில், இது என்ன பிரமாதம் என்று சிலர் கேட்கலாம்.
அவற்றால் அரசுக்கு நேர்ந்ததாகச் சொல்லப்படுவது வருவாய் இழப்பு மட்டும்தான்.
ஆனால், ஏற்கனவே மரணத்தின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கும் ஏழை விவசாயிகளுக்கு, ஆட்சியில் இருப்பவர்களும், அவர்களது ஆட்களும் கந்துவட்டிக்குக் கடன் கொடுத்து, தற்கொலைக்குள் தள்ளி விடும் குரூரம் சகிக்க முடியாதது.
லட்சியப் பிடிப்பும், கொள்கை உறுதியும், நேர்மையும் மிகுந்த அரசியல் தலைவர்கள் இல்லாமல் போயிருக்கலாம்.
அடியாட்களுக்கும், கொலைகாரக் கூலிப்படையினருக்கும் இருக்கும், குறைந்த பட்ச மனித இரக்கம் கூடவா, அரசியல்வாதிகளிடம் இல்லாமல் போய்விடும்?
போய்விட்டது என்பதையே இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.
ஊழலும், சுரண்டலும் அரசியலை விழுங்கும் ஆக்டோபஸ்களாக, விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதை எத்தனையோ நிகழ்வுகள் மூலம் நாம் உணர்ந்திருக்கிறோம்.
ஆனால், அவை எல்லாவற்றையும் விட, மிக மோசமான, கொடூரமான உதாரணம் இது.
விலாஸ்வராவ் தேஷ்முக் என்பவர், இன்றைய அரசியல்வாதிகளின் கீழ்மைத் தனத்திற்கு, வெளிப்படையான குறியீடு மட்டுமே.
மற்றபடி இது விதார்பா மாவட்டத்தில் மட்டுமே நடப்பது அல்ல. நாட்டின் பல்வேறு பகுதிகளில், ஏழ்மைக்கும், வறுமைக்கும் தம்மை ஒப்புக் கொடுத்து விட்டு, வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்ற மனநிலையோடு, மரணத்திற்காகக் காத்திருக்கும், அப்பாவி விவசாயிகளின் நிலையும் இதுதான்.
ஜார்கண்டில், ஆண்டுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கு கூலியாகக் கொடுக்கப்படும் காசோலைகளை மாற்றித்தர அவர்களிடமே சிலர் கமிஷன் வாங்குவதாக, அம்மாநிலத்தின் தலைமைச் செயலாளர், ரிசர்வ் வங்கிக் கவர்னர் சுப்பாராவ் முன்னிலையிலேயே, நிகழ்ச்சி ஒன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கிராமப்புற ஏழைகள் மீது, நமது அரசுகளும் அமைப்பும் கொண்டுள்ள பரிவும், அக்கறையும் எத்தகையது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் படும் சிரமத்திற்காக (!) கண்ணீர் வடிக்கும் நமது பிரதமர், கஞ்சிக்குப் போராடும் இந்த எளியவர்கள் குறித்தும் சிறிது அக்கறை செலுத்தலாம். அதனால் பெரிய அரசியல் பிழை ஒன்றும் நேர்ந்து விடாது.
மேனா. உலகநாதன்
தினமலர் - செய்திமலர் (நெல்லைப் பதிப்பு) 19.05.2010
மனதை தைத்தது - சி. சரவணன் ( சேனா சரவணன்)
ReplyDelete