Thursday, March 10, 2011


தேர்தல் திருவிழாவில் காணாமல் போகும் விவசாயிகள்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரபரப்பு அதன் உச்சக் கட்டத்தை நெருங்கி வருகிறது. கூட்டணி குறித்த கூட்டல், கழித்தல் கணக்குகள் முடிவுக்கு வந்து விட்ட நிலையில், வாக்குகளை அறுவடை செய்வதற்கான வியூகங்களை வகுக்கும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

தேர்தல் திருவிழாவில் உதிரிக்கட்சிகள் கூட உற்சாகத்துடன் வலம் வருகின்றன. சக்திக்குத் தகுந்த ‘சீட்டு’கள். இல்லாவிட்டால் ‘நிபந்தனையற்ற ஆதரவு’ என்ற  அறிவிப்புடன், அகப்பட்டதை சுருட்டி அரசியல் வியாபாரத்தில் லாபம் பார்த்துவிடுவது என்பதே அவர்களது அதிகபட்ச வேலைத்திட்டம். இப்படி, ஜாதி, வட்டாரம், தொழில் என ஏதோ ஓர் அடிப்படையில்  உதிரி இயக்கங்களாக ஒண்றிணைந்து, தேர்தல் காற்று வீசும்போதே தூற்றிக் கொள்ளத் தயாராகி விட்டன பல அமைப்புகள்.

ஆனால், கிராமப்புற வாக்குவங்கியின் பெரும்பான்மை எண்ணிக்கையாக இருக்கும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு மட்டும் இந்த தேர்தல் கால செப்படி வித்தை எப்போதுமே சாத்தியமாவதில்லை.

அறுபது ஆண்டுகால ஜனநாயகத்தில் எந்த நிறைவையும் எட்ட முடியாமல் தவிக்கும் சில சபிக்கப்பட்ட மக்கள் பிரிவில் விவசாயிகள் முக்கியமானவர்கள். ஆனால், தேர்தல் காலத்தில் வெறும் வாக்களிக்கும் மனிதக் கருவிகளாக மட்டுமே அவர்கள் பார்க்கப்படுகிறார்கள். 

சங்கங்கள் என்ற பெயரில் விவசாயிகளை  ஒருங்கிணைக்கும் சில இயக்கங்களும், முறையான அரசியல் பயிற்சி எதையும் அவர்களுக்கு அளிப்பதில்லை. கையாகவும், தாமரையாகவும், உதய சூரியனாகவும், இரட்டை இலையாகவும், பம்பரமாகவும் இன்னபிற ஓட்டுக் கட்சிகளின் சின்னங்களாகவும் கூழாங்கற்களைப் போல, விவசாயிகளின் அரசியல் பேராற்றல் சிதறுண்டு கிடக்கிறது.

கடன் தள்ளுபடி பெறுதல், மானிய விலையில் உரங்கள், விதைகள் பெறுதல் என்ற அளவில் விவசாயிகளின் அரசியல் தேவைகள் இங்கே குறுக்கப்படுகின்றன.
அனைத்து அரசியல், சமூக செயற்பாடுகளும் விவசாயிகளை நோக்கியே செல்லுவது போல நமக்குத் தோன்றுவது உண்டு. ஆனாலும் அவை  வெறும் தோற்றப்பிழைகள் என்பதே உண்மை.

அது உண்மையாக இருந்திருந்தால், தகவல் தொழில் நுட்பம் மட்டுமே  முதற்பெருந் தொழிலாக இன்று அடையாளம் காணப்படும் நிலை ஏற்பட்டிருக்காது.

உற்பத்தித் தொழிலான விவசாயத்தை முற்றிலும் ஓரங்கட்டி விட்டு, ‘தரகு’வேலையான தகவல் தொழில் நுட்பத்தை மட்டுமே,  நாட்டின் வளர்ச்சிக்கான வழியாகச் சித்தரிக்கும் கோட்பாட்டு மோசடியும் அரங்கேறி இருக்காது.

அத்தகைய கோட்பாட்டு மோசடி என்ற பெருவிருட்ச நிழலில் பெருகித்தழைத்த விழுதுகள்தான், ஸ்பெட்க்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு போன்ற மிகப்பெரிய பொருளாதார மோசடிகள்.

இது ஒருபுறம் இருக்க, தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் பெரும் சக்தியாக ஒரு காலக்கட்டத்தில் இருந்த விவசாய சங்கங்கள் இன்று ஏன் இப்படி முகவரி இழந்து நிற்கின்றன?
தமிழக அரசியலில் தோல்வியையே சந்திக்காத எம்.ஜி.ஆர், 1980ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு, நாராயணசாமி நாயுடு தலைமையில் இயங்கிய விவசாய சங்கத்தின் எதிர்ப்பும் ஒரு முக்கியக் காரணம் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

அடுத்து நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது, அதே நாராயணசாமி நாயுடுவின் வீட்டிற்கே சென்று சந்தித்து, அவரது ஆதரவைக் கோரிப்பெற்றுள்ளார் எம்.ஜி.ஆர்.
சரியாகவோ, தவறாகவோ, விவசாயிகளின் பேராற்றலை ஒருங்கிணைத்து, அதன் மூலம் மிகப்பெரிய அரசியல் தாக்கத்தையும் நாராயணசாமி நாயுடு ஏற்படுத்தி உள்ளார்.
ஏன் இப்போது அது சாத்தியப் படவில்லை?

விவசாய சங்கங்கள் அந்த ஆளுமையை இழந்து நிற்க காரணம் என்ன?
விவசாயிகளின் தற்சார்பு என்ற அந்தரங்க பலம் நசுக்கப்பட்டதே (demoralise) அதற்குக் காரணம்.
இலவசங்களுக்கும், மானியத்திற்கும் கையேந்தும் பிச்சைக்காரர்களின் நிலைக்கு அவர்களை அரசியல் கட்சிகள் தள்ளி விட்டன.

மனித இனத்தின் அனைத்து ஆற்றலையும் அர்த்தமற்றதாக்கிவிடும் வறுமை, பசி, நோய் இவை மூன்றும் விவசாயிகளின் அன்றாட வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அம்சங்களாகின.
இருக்க இடம், உண்ண உணவு, உடுக்க உடை இந்த மூன்று அடிப்படைத் தேவைகளை அடைவதற்காகவே, இந்திய விவசாயி தன் ஆயுள்காலம் முழுவதும் போராடுகிறான். அவனது குழந்தைகளுக்கு சத்துள்ள உணவு, நல்ல கல்வி என்பது பலிக்காத நெடுங்கனவாகவே நீடித்து வருகிறது.

தமிழகத்தின் கடைக்கோடி விவசாயியைப்  பொறுத்தவரை தேர்தல் என்பது என்ன?
ஓட்டுக்குப் பணம் கிடைக்கும். வாக்குப் பதிவன்று பிரியாணிப் பொட்டலங்கள் கூட கிடைக்க வாய்ப்புண்டு. மோதிரங்கள், குடங்கள் என இன்னும் சில பொருட்களும் கிடைக்கலாம். உள்ளூர்த்தலைவர் சார்ந்துள்ள கட்சிகளின் வசதியையும், செல்வாக்கையும் பொறுத்தது. சில ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்தகைய அற்ப சந்தோஷங்களுடன் வந்து போகும் ஒரு ஜனநாயகத் திருவிழா என்பதைத் தவிர, தேர்தல் குறித்து அவர்களுக்கு எந்த மதிப்பீடும் இல்லை.

பசுமைப் புரட்சி என்ற பெயரால் தங்களது மண்ணும், வாழ்வும் மழுங்கடிக்கப்பட்ட சோகத்தை அவர்கள் இதுவரை உணரவில்லை.

இத்தனை ஆண்டுகளாகத் தாங்கள் பயன்படுத்தி வரும் வேதி உரங்களால் வளமானது பெருமுதலாளிகள் சிலரே தவிர தங்களது மண்ணோ, வாழ்வோ இல்லை என்ற உண்மையும் அவர்களுக்கு புரிவதில்லை.

39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீராதாரங்கள் இருந்த இடம் தெரியாமல் போன மாயம் குறித்தும் அவர்களுக்கு தெரியவில்லை.

இவற்றின் விளைவே விவசாயம் என்ற தொழில் இன்று அழிவை நோக்கிச் சரியத் தொடங்கி இருப்பது என்ற யதார்த்தமும் அவர்களுக்கு புரியவில்லை.

ஏற்கனவே நடைபெற்ற பசுமைப் புரட்சியால், உயிர்ச்சத்து உறிஞ்சப்பட்டு, குற்றுயிரும் குலை உயிருமாக மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் மண்ணின் மீது, இன்னுமொரு பசுமைப் புரட்சி எனும் ருத்திர தாண்டவத்தை ஆடி முடிக்க நமது அரசுகள் தயாராகி விட்ட விபரீதத்தையும் அவர்களால்  உணர முடியவில்லை.

தங்களிடமிருந்து மிக குறைந்த விலைக்கு வாங்கப்படும் கத்திரிக்காய், கடைகளில் இவ்வளவு அதிக விலைக்கு விற்கப்படும் மாயம் என்ன என்பதையும் அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

இப்படித் தன்னுணர்வு எதுவும் அற்ற விட்டில் பூச்சிகளைப் போல விவசாயிகள் மழுங்கடிக்கப்பட்டுள்ளார்கள். தங்களுக்கான அரசியலும், தேவையும் என்ன என்பதை அடையாளம் காண முடியாத விசாயிகள், வாக்குவங்கி அரசியல் வர்த்தகத்தில், செல்லாத ரூபாய் நோட்டுகளைப் போலச் சீரழிகிறார்கள்.

நிலமற்ற ஏழைகளுக்கு நிலம், உற்பத்திக்கு உரிய விலை… என விவசாய சங்கங்கள் வழக்கமாக முன்வைக்கும் மிகச்சில முழக்கங்களும் கூட, அரசியல் உள்ளீடற்ற வெற்றுப் புலம்பலாய் மெல்ல மெல்லத் தேய்ந்து வருகின்றன.

வாக்காளர்களில் 50 விழுக்காடாகவும், மக்கள் தொகையில் 70 விழுக்கடாகவும் இருக்கும் விவசாயிகள், தேர்தல் நேரத்தில் தங்கள் தேவைகள் குறித்து குரல் எழுப்பவும், நிபந்தனைகளை முன்வைக்கவும் திராணியற்றவர்களாக மௌனித்திருப்பது, அவர்களுக்கு மட்டும் அல்ல, நாட்டுக்கும்  நல்லதல்ல.

இந்த லட்சணத்தில், அரசியல் தலைவர்களில் பெரும்பாலோர் தங்களை விவசாயிகள் என்று சொல்லிக் கொள்வதுதான் வேடிக்கை. ஆனால், சாதாரண  குடிமகன் ஒருவன் தன்னை விவசாயி என்று பிறரிடம் அறிமுகப் படுத்திக் கொள்ள வெட்கப்படுகிறான் என்பதே உண்மை.

கட்சி அரசியலை ஓரம் கட்டிவிட்டு, அடிப்படைப் பிரச்சனைகளை முன்னிறுத்தும் அணுகுமுறையை விவசாய அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் கிளைகளாகச் செயல்படும் விவசாய அமைப்புகளால், அது சாத்தியமில்லை.

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கங்களாக விவசாய அமைப்புகள் இயங்கத் தொடங்கும் போதுதான், அவற்றின் பலம் அரசியல் வாதிகளைத் திரும்பிப் பார்க்க வைக்கும். அதுதான் உண்மையான அரசியலும் கூட!
மேனா. உலகநாதன்

நன்றி : தினமலர் - செய்திமலர்.

No comments:

Post a Comment