Friday, December 3, 2010


வேண்டாம் விபரீத யோசனை!
றுமை ஒழிப்பைப் போலவே விவசாய வளர்ச்சியும் இந்தியாவைப் பொறுத்தவரை நிறைவேறாத நெடுங்கனவாகவே இன்றளவும் நீடிக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், அதற்கான பிரச்சனைகளும், தீர்வுகளும்,  ஒற்றைப் பரிமாணம் கொண்டவை அல்ல.

இந்த நிலையில்,  விவசாயத்தை வளர்த்தெடுக்க, நவீன வேளாண் வித்தகர்கள் (!) சிலர் அண்மையில் முன்வைத்துள்ள திட்டம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஈ ஃபார்ம் என்ற அமைப்பை நடத்திவரும் வெங்கட சுப்பிரமணியன் என்பவர் தெரிவித்திருக்கும் யோசனைகள் விபரீதமானவை என்கின்றனர் விவசாயிகள் சங்கத்தினர்.

அப்படி அவர் முன்வைக்கும் தீர்வும், திட்டமும்தான் என்ன?

‘விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கு, அவற்றை கொள்முதல் செய்து சந்தைப்படுத்தும் பொறுப்பை, முழுக்கத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும்.

இதில் தொழில்முறை இடைத்தரகர்களின் பங்கு மிக முக்கியமானது(!). 4 அல்லது 5 கிராமங்களுக்கு ஒரு நிறுவனத்தை  அவர்கள் தொடங்க அனுமதிக்க வேண்டும். அவற்றின் மூலம், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களைக் கொள்முதல் செய்து, தனியாருக்கு நல்ல லாபத்துடன் விற்பனை செய்ய வேண்டும்.

விவசாயத்துறை தொடர்பான அனைத்துப் பொறுப்புகளையும்,  அரசிடம் இருந்து பறித்து தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் . எல்லாவற்றையும் அரசே செய்து கொண்டிருந்தால் அதில் லாபம் பார்க்க முடியாது…’ இப்படியாக விவசாயத்தைக் காப்பாற்றுவதற்கான பல புதிய உத்திகளை அவர் தெரிவித்திருக்கிறார்.

மருந்து, மளிகை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் பல்வேறு வர்த்தகச் சங்கிலித் தொடரின் மூலமாக மக்களைச் சென்றடையும் போது, விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு மட்டும் ஏன் அது பொருந்தாது எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

விவசாயிகளுக்கு அரசால் வழங்கப்பட்டு வரும் மானியங்களும், இலவச உதவிகளும், கடன் தள்ளுபடிகளும், அவர்களைச் சுயமரியாதையற்றவர்களாக மாற்றவே வழிவகுக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஆனால், இது போன்ற யோசனைகள் விவசாயத்தைக் கார்ப்பரேட் மயமாக மாற்ற உதவுமே தவிர, எளிய மக்களின் வாழ்வாதாரமாக தகவமைக்க உதவாது என்கிறார்கள் மரபுசார்ந்த வேளாண் வல்லுநர்கள். இது தொடர்பாக அவர்கள் முன்வைக்கும் மேலும் சில கருத்துகள்,  இந்திய விவசாயத்தின் எதிர்காலம் குறித்த அழுத்தமான கவலைகளை நமக்குள் ஏற்படுத்துகின்றன.

“விவசாயத்தை லாபம் மிக்க தொழிலாக மாற்றவேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால், சந்தைப்படுத்துவதால் மட்டுமே அது சாத்தியமில்லை. அது  மட்டுமே விவசாயத்தின் பிரச்சனையும் அல்ல.
இந்தியாவைப் பொறுத்தவரை விவசாயம் என்பது வெறும் வியாபாரமோ, தொழிலோ மட்டுமல்ல. நாட்டின் தற்சார்பு உள்ளிட்ட உன்னத இலக்குகளுக்குமான ஜீவாதாரத் தளம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

விவசாயிகளுக்கு வழங்கப்படும், இலவசங்களும், மானியங்களும் அவர்களின் சுயமரியாதையைப் பறிப்பதற்கல்ல. அவர்களிடமிருந்து பல ஆண்டுகளாக, பல்வேறு வடிவங்களில் பறிக்கப்பட்டுவரும் மண்வளத்தையும், மனிதவளத்தையும் ஈடு செய்ய என்பதை உணர்ந்நு கொள்ள வேண்டும். அது ஒரு மக்கள் அரசின் மறுக்க முடியாத கடமை.

பன்னாட்டு நிறுவனங்களால் விதைகளும், உரமும் கடன் வழங்கப்பட்டு, அதனால், விவசாயிகள் விஷம் குடித்துச் சாகும் நிலைக்குத் தள்ளப்பட்டதை ஏற்றுக்கொள்ளும் இந்த நவீன வேளாண்மைச் சிந்தனையாளர்கள், சொந்த மக்களைக் காப்பாற்ற அரசு வழங்கும் உதவிகளை விமர்சிப்பதன் உள்நோக்கம் நமக்குப் புரியவில்லை.

ஜனநாயக அமைப்பில் அத்தியாவசியத் தேவைகள் தொடர்பான அனைத்தும் அரசின் வசம் இருக்க வேண்டும் என்பதே, நியாயமான நடைமுறையாக இருக்க முடியும்.
விவசாயம் என்பது அத்தியாவசியத் தேவை மட்டுமின்றி, ஆதாரத் தேவையும் கூட. அப்படி இருக்கும் போது, அதற்காக அரசு மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகளை வீண் செலவாகச் சித்தரிப்பது, விபரீத விளைவுகளுக்கே வழி வகுக்கும்.

ஏழ்மையும், வறுமையும் புதராக மண்டிக்கிடக்கும் நாட்டில் விவசாயம் ஒன்றுதான் எளிய மக்களின் வாழ்வாதாரமாக எஞ்சி நிற்கிறது. அதனையும் அவர்களிடம் இருந்து பறித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க வேண்டும் என்ற பேராசையே, நவீன வேளாண் சிந்தனையாளர்களிடம் தெரிகிறது.

நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்கப்பட்டு அதில், மண்ணுக்கேற்ற பயிர்களை விளைவிப்பதன் மூலமாகவே, விவசாயத்தை அதன் வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றும் முதல் கட்ட நடவடிக்கையாக இருக்க முடியும்.

ஆனால், இதற்கு நேரெதிராக விளைநிலங்களை மனையிடங்களாக கூறு போட்டு, கொள்ளை லாபத்திற்கு விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட்  கோமான்களின் ஆட்சிதான் இப்போது கொடிகட்டிப் பறக்கிறது.

எஞ்சியுள்ள நிலங்களையும் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரால், பெருமுதலாளிகளுக்கு பங்கு போட்டுத் தரும் கைங்கர்யமும் ஜரூராக நடந்தேறி வருகிறது.

இந்தநிலையில், விவசாயத்தை வளர்க்க யோசனை சொல்லுகிறோம் என்ற பெயரில், இடைத்தரகர்களின் பங்களிப்பு அவசியம் என்பது போன்ற விபரீத திட்டங்களை முன்வைப்பது ஆபத்தானது.

அரசு கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதோடு, தானியங்களைப் பதனிட்டு பாதுகாக்கும் வசதியும் விவசாயிகளுக்கு செய்துதரப்பட வேண்டும் என்பதே எமது முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

விசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் முழு உரிமையும் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். இடைத்தரகர்கள் வந்து ஆளுமை செலுத்துவதற்கு, இது பங்குச் சந்தையைப் போல வர்த்தகப் பரிவர்த்தனை மையம் அல்ல.

ஆழிப்பேரலையால் பேரழிவு நேர்ந்த போது இந்தியப் பங்குச் சந்தை வரலாறுகாணாத வகையில் ஏற்றம் கண்டதாகச் சொல்வார்கள்.

அழிவில் ஏற்றம் காணுவதற்கு விவசாயம் ஒன்றும் பங்குச்சந்தை இல்லை. அது ஆக்கத்தில் மட்டுமே ஏற்றம் காணக்கூடிய நேரிய தொழில். விவசாயத்தை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை விவசாயிகளிடம் தான் கேட்க வேண்டும். தரகர்களிடம் அல்ல ”

விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்திருக்கும் இந்தக் கருத்து, அத்துறையின் எதிர்காலம் சார்ந்த பல முக்கியக் கேள்விகளை நம்முள் எழுப்புகிறது.
எந்த ஒரு தொழிலும் நவீனத்தன்மைக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளாத போது, அதன் இருத்தலும் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் என்பதே இயற்கையின் நியதி. விவசாயத்துக்கும் அது பொருந்தும் என்பதை மறுப்பதற்கில்லை.

எனினும், மற்ற தொழிலுக்கும், விவசாயத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு. மற்றவற்றுக்குப் பொருந்தும் பொருளாதாரப் புள்ளிக் கணக்குள் இதற்குப் பொருந்தாது.  

விவசாயம் என்பது வெறும் பொருளாதார மேம்பாடு சார்ந்த துறை மட்டும் அல்ல…

எளியமக்களின் தவிர்க்க முடியாத வாழ்வாதாரம்…

நாட்டின் தற்சார்புத் தன்மையைத் தன் உயிரைக் கொடுத்துப் பிடித்து இழுத்து வைத்திருக்கும் மூலாதாரம்…

மண்ணையும், மண்சார்ந்த விதை உள்ளிட்ட மரபு உரிமைகளையும் காக்க வேண்டிய தார்மீக ஆதாரம்….

என அடிப்படையான அனைத்து ஆதாரங்களுக்கும் உயிராதாரமாக விளங்குவதுதான்  விவசாயம் என்பதை நவீன வேளாண் சிந்தனையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மேனா.உலகநாதன்

நன்றி : 05.12.10 தினமலர் செய்திமலர் .

Saturday, November 20, 2010

புதிய பதிவு....



ஒளிர்ந்தும் ஒளிராத….

அன்று தீபாவளிப் பண்டிகை.
நாடு முழவதும் பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருந்த கொண்டாட்ட ஒளிவெள்ளத்தின் சிறு கீற்று கூட அங்கு கூடியிருந்தவர்களின் முகத்தில் விழவில்லை.

வறுமையின் இறுக்கமும், பசியின் தீவிரமும், கனத்த போர்வையைப் போல இருளின் வடிவில் அவர்கள் மீது ஒரு சேரக் கவிந்து படர்ந்திருந்தது. 

ஆண்டுக்கு 100 நாள் வேலைத்திட்டத்திற்கான குறைந்த பட்சக் கூலியை 100 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தித் தரவேண்டும் என வலியுறுத்தி, தீபாவளிக் கொண்டாட்டத்தைப் புறக்கணித்து, ஜெய்ப்பூர் நகரின் ஓர் இடத்தில் கூடியிருந்த ராஜஸ்தான் மாநில விவசாயத் தொழிலாளர்கள் தான் அவர்கள்.

அக்டோபர் 2ம் தேதி முதல் கடந்த 17ம் தேதிவரை ஏறத்தாழ 47 நாட்கள், அவர்கள் நடத்திய இந்தத் தொடர் போராட்டத்திற்கு,  இறுதியில் வெற்றியே கிடைத்துள்ளது.  

விவசாயத் தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தால், பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்த அம்மாநில அரசு, அவர்களது கோரிக்கையை ஏற்று, கூலியை உயர்த்தித் தர ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், அரசுதரப்பில் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், கையெழுத்திட்டனர்.

‘விவசாயத் தொழிலாளர்களின் போராட்டத்திற்குக் கிடைத்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வெற்றி, நாடு முழுவதும் ஆண்டுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலைபார்த்துவரும் தொழிலாளர்களுக்குப் பயன் அளிக்கக் கூடியது என, போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திய சமூக சேவகர் அருணாராய் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் அருந்ததிராய், பிரபல பத்திரிகையாளர் சாய்நாத், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட மேலும் பல சமூக ஆர்வலர்களும் கூட, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

விவசாயத் தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கையைக் கவனத்தில் கொண்டு, கூலியை உயரத்தித் தர நடவடிக்கை எடுக்குமாறு, தேசிய ஆலோசனைக் குழுத் தலைவர் என்ற முறையில், சோனியாகாந்தியே (!) பிரதமருக்கு கடிதம் எழுதி இருப்பதுதான் இதில், உச்சக்கட்ட சுவராசியம்.

எப்படியோ… அடித்தட்டு மக்களின் குரல் உயர் மட்டத்தில் இருப்பவர்களின் காதுகளில் விழுந்தது வரை மகிழ்ச்சி…

இதன் மூலம், மேலும் பல மாநிலங்களில் ஆண்டுக்கு 100 நாள் வேலைத்திட்டத்திற்கான குறைந்த பட்சக்கூலி, 100 ரூபாயில் இருந்து மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.  

ஆனால், ஆண்டுக்கு 100 நாள் வேலைத்திட்டம் குறித்து, நடைமுறையில் வேறு சில கேள்விகளும் எழுந்து வருகின்றன.

குறிப்பாக தமிழகத்தில், ஆண்டுக்கு 100 நாள் வேலைத்திட்டம் காரணமாக, விவசாய காலங்களில் வேலைக்குத் தொழிலளார்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, சிறுவிவசாயிகள் ஒரு முணுமுணுக்கத் தொடங்கி உள்ளனர்.
இதன் காரணமாக கிராமங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், சிறு விவசாயிகள் எழுப்பும் இந்தப் புகார் அர்த்தமற்றது என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கச் செயலாளரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான கே. பாலகிருஷ்ணன்.

ண்டுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பெரும்பாலும் பெண்களும், வயதானவர்களும் மட்டுமே வேலை பார்த்து வருகிறார்கள். ஆண்டுக்கு 100 நாள் மட்டுமே கிடைக்கும் வருமானத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்திச் செல்ல முடியாது என்பதே யதார்த்தம். அதனால் இந்த வேலைக்கு பெரும்பாலும் குடும்பத் தலைவர்களாக இருக்கும் ஆண்கள் வருவதில்லை. அவர்கள் பிழைப்புத் தேடி வெளியூர் சென்று விடுகிறார்கள். வறுமையை எதிர்த்துப் போராடிக் கொண்டு வீட்டில் இருக்கும் பெண்கள்தான் இந்தத் திட்டத்தின் கீழ் நடைபெறும் வேலைகளுக்குச் செல்கிறார்கள்.

எனவே ஆண்டுக்கு 100 நாள் வேலைத் திட்டத்திற்கும் விவசாய வேலைக்கு தொழிலாளர்கள் கிடைக்காததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விவசாயத்தில் ஏற்பட்டுள்ள நலிவு என்பது ஒட்டுமொத்தமான ஒரு சமூகப் பிரச்சனை. சிறு விவசாயிகள் விவசாயத்தின் மீது நம்பிக்கை இழந்து, நிலத்தைத் தரிசாகப் போட்டுவிட்டு, கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறும் போது, தொழிலாளர்கள் மட்டும் அங்கு எப்படிப் பிழைப்பார்கள். 

அவர்களுக்கும் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்காதா? விவசாயத்தை இன்று தொழிலாக மதிக்கும் இளைஞர்கள் எத்தனை பேர்? பெற்றோர்களும் தான் எத்தனை பேர்?

எல்லோரும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். எளிய விவசாயிகளுக்கு விவசாயம் ஒரு நம்பிக்கை தரக்கூடிய தொழிலாக இன்று இல்லை என்ற யதார்த்தத்தை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

அது ஓர் அடிப்படையான பிரச்சனை.

மத்திய, மாநில அரசுகள் விவசாயத்தை மேம்படுத்த முறையான கொள்கைத் திட்டங்களை வகுக்கவில்லை. மற்ற துறைகளைப் போல், சூழலுக்கு ஏற்ற லாபத்தைத் தரக்கூடிய தொழிலாக விவசாயம் வளரும்போது, இந்தப் பிரச்சனைகள் தாமாகக் காணாமல் போய்விடும். 

விவசாயிகள் உற்பத்தி செய்யும் விலைக்கு, சந்தையில் உரிய விலை கிடைக்கவில்லை. அது கிடைக்கும் போதுதான்,  ஆண்டு முழுமைக்கும் வாழ்க்கைச் செலவுக்குத் தேவையான குறைந்த பட்சவருவாயைத் தரக்கூடிய தொழிலாகவாவது விவசாயம் வளர்ச்சி பெறும். இந்திய விவசாயம் அந்தத் திசையில் கூட இன்னும் காலடி எடுத்து வைக்கவில்லை.

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, ஆண்டுக்கு 100 நாள் வேலையும் ஏதோ கொஞ்சம் கூலியும் கொடுத்து விட்டு, விவசாய வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது” என்று, இந்தப் பிரச்சனைக்கான அடிப்படைக் காரணங்களை அடையாளம் காட்டுகிறார் பாலகிருஷ்ணன்.

கடந்த 2000 முதல் 2008  வரையிலான எட்டு ஆண்டுகளில் மட்டும், இந்திய அரசின் மொத்த வருவாயில் 5லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய், ஊழல் மூலம் சுரண்டப் பட்டு இருப்பதாக சர்வதேச பொருளாதார ஒருங்கிணைந்த அமைப்பின் (Global Financial Integrity) ஆய்வு அண்மையில் தெரிவித்துள்ளது.

ஆனால், அரை வயிற்றுக் கஞ்சிக்கு ஆலாய்ப் பறக்கும் அப்பாவி ஏழைகளுக்கு, உணவுக் கிடங்குகளில்  அழுகி வீணாகும் உணவுப் பொருட்களை இலவசமாக வழங்கவும், அன்றாடக் கூலிகளை உயர்த்தித் தரவும் மறுப்பதற்கான காரணங்களை மத்திய அரசு தேடிக் கண்டுபிடிக்கிறது.

இந்த அணுகுமுறை முரண்பாடுதான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூல காரணமாகிறது.

மற்றொரு பக்கம், சமூகத்தில் சிலர் மட்டும் அனைத்து வசதிகளும் பெற்று வாழ, பலர் குறைந்த பட்சத் தேவைக்கான கூலிக்கே போராடிக் கொண்டிருப்பது எந்த வகையான வளர்ச்சி என்ற கேள்வியும் எழுகிறது.

ஆண்டுக்கு 100 நாட்கள் வேலையும், அதற்கான கூலியும் அரைவயிற்றுக் கஞ்சிக்கு ஆகலாம். அவர்களது வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது என்பதே உண்மை.

வறுமை ஒழிப்பு என்ற முழக்கம் அதன் அர்தத்தை  வேகமாக இழந்து வருகிறது. வளத்தைப் பரவலாக்குவது என்பதே இனிச் சரியான முழக்கமாகவும், இலக்காகவும் இருக்க முடியும்.

மேனா.உலகநாதன்

நன்றி  : 21. 11. 2010, செய்திமலர் – தினமலர் (நெல்லைப் பதிப்பு)

Sunday, November 14, 2010



ப.சிதம்பரத்தின் ‘பயங்கர’ நினைவாற்றல்!

‘என் நினைவு கூறுவதில் இருந்து, 2010ம் ஆண்டில் தமிழக மீனவர் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார். 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை’

கடந்த வாரம் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சொன்ன இந்த வார்த்தைகள், ஏற்கனவே வெந்து நொந்து போயிருக்கும் தமிழக மீனவர்களின் மனப்புண்ணில் வேலைப் பாய்ச்சி வேதனைப்படுத்துவது போல் ஆகிவிட்டது.
ப.சிதம்பரம் பட்டும் படாமல் சொன்ன அந்த சொற்கள், தமிழக மீனவர்கள் மத்தியில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி உள்ளன.

 ‘அவர் மத்திய அமைச்சராக இருக்கலாம். ஆனால் அவர் பிறந்தது தமிழ் நாட்டில் தானே. அந்த அடிப்படையிலாவது அவர் தமிழக மீனவர்களின் பிரச்சனையில் கருணையும், கரிசனமும் காட்டக்கூடாதா? இலங்கைக் கடற்படையினரிடம் அடியும், உதையும் பட்டு, உடமைகளை இழந்து, ரத்தக் காயத்துடன் உயிர் பிழைத்தால் போதும் என அன்றாடம் கரைக்கு வந்து சேரும் தமிழக மீனவர்களின் கண்ணீரும், கதறலும் அவர் காதுகளில் விழவே இல்லையா? அவர் நினைவு ஏன் இத்தனை பெரிய பொய்யைக் கூறுகிறது’ என்ற அவர்களது குமுறலில் நியாயம் இருக்கிறது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுநாள் வரை மட்டும், தமிழக மீனவர்கள் மீது 42 முறை இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தி இருப்பதாக கூறுகின்றனர் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள்.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக் கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 3 தமிழக மீனவர்களின் கை முறிந்துள்ளது.
ஜூலை மாதம் 7ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 3 படகுகள் தகர்க்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் தமிழக மீனவர்களின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது.

அதே மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 8 நாட்டுப் படகுகள் சேதப்படுத்தப்பட்டதுடன், மீனவர்களின் மண்டை உடைக்கப்பட்டு, கை முறிந்துள்ளது.

செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு படகுகள் சேதமடைந்துள்ளன.

ஆகஸ்ட் மாதம் தமிழக மீனவர்களின் ஒரு படகே மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
இது போன்று,  2010ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, கண்ணுக்குத் தெரிந்து 42 முறை தாக்குதல் நடந்திருக்கும் போது, ஒரு மத்திய உள்துறை அமைச்சர், அதுவும் தமிழர்,  இப்படி அலட்சியமாகப் பேசியிருப்பது என்ன நியாயம் என, அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இதற்கு ப.சிதம்பரம் என்ன பதில் சொல்லுவார்.

‘நான் தமிழன் என்பதற்காக தமிழக மீனவர்களைப் பற்றி மட்டுமே கவலைப் பட்டுக்கொண்டிருக்க முடியுமா? இந்தியா முழுமைக்கும் உள்துறை அமைச்சர் என்ற முறையில் எனக்கு ஆயிரம் தலைவலி இருக்கிறது. இலங்கையோடு, இந்தியாவின் உறவைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. இல்லாவிட்டால் சீனாவின் ஆக்கிரமிப்பு அங்கு அதிகமாகிவிடும். டெல்லிக்கு வந்த ராஜபக்சேவுக்கு விருந்து வைத்து,  அவருக்கு இன்னும் என்னென்ன தேவையோ அவ்வளவு உதவிகளையும் செய்ய நாங்கள் சித்தமாக இருப்பதாக தாஜா செய்து அனுப்பி இருக்கிறோம். அவரிடம் போய், எங்கள் மீனவர்களை உங்கள் கடற்படையினர் அவ்வப்போது தாக்கிக் கொன்று வருகிறார்கள். அதை நிறுத்துங்கள் என்று சொன்னால், அவர் சீனாவின் பக்கம் சாயக்கூடும். பின்னர் எங்கள் ராஜதந்திரம் என்னாவது? இந்தியாவின் பாதுகாப்பு முக்கியமா, இங்குள்ள சில மீனவர்கள் முக்கியமா?’ என்று மகாப்பெரிய பிரச்சனைகளை அவர் பதிலுக்கு முன்வைக்கக் கூடும்.

இத்தனை பெரிய பிரச்சனைகளைக் கையாண்டு கொண்டிருக்கும் ப.சிதம்பரத்திறகு, எங்கோ இருக்கும் தமிழக மீனவர்கள் என்ற சிறு கூட்டத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து நினைவிருக்கும் என எதிர்பார்க்க முடியுமா?

அவரைப் பொறுத்தவரை புள்ளி விவரம் சரியாக இருக்கிறது. அரசின் ஆவணம் சொல்லும் தகவலின் படி, 2010ம் ஆண்டில் ஒரே ஒரு மீனவர் மட்டும்தான் கொல்லப்பட்டிருக்கிறார்.

அந்தப் புள்ளிவிவரத்தில், அன்றாடம் கடலுக்குச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர், கண்மூடித்தனமாகத் தாக்குவதோ, நிர்வாணப்படுத்தி ஐஸ் கட்டிகளின் மீது படுக்க வைத்துச் சித்தரவதைப் படுத்துவதோ, படகுகள் சேதப்படுத்தப்படுவதோ, மீன்படி சாதனங்கள் பறிக்கப்படுவதோ இடம்பெறவில்லை.

அப்படி இருக்கும் போது இந்தப் பிரச்சனை பற்றி எல்லாம் அவர் எப்படி நினைவில் வைத்திருக்க முடியும். அதுதான் அவரது நினைவாற்றல், நிர்த்தாட்சண்யமாக இந்தப் பிரச்சனைகளை எல்லாம் மறந்து விட்டது. ஆக, இது நினைவாற்றல் செய்த குற்றமே தவிர, சிதம்பரத்தின் குற்றமல்ல.

‘மத்திய அரசைப் பொறுத்தவரை நாங்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் தான். எங்களது பிரச்சனைகளும்ம் அவர்களுக்கு இரண்டாம் பட்சமானவைதான். இது போன்ற தாக்குதலின் போது இலங்கை மீனவர்களுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் ஒரு வேளை, மத்திய அரசு பதறக் கூடும்’ என்கிறார்கள் தமிழக மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள்.

மத்திய அரசின் மீது, தமிழக மீனவர்கள் கொண்டுள்ள இந்தக் கோபத்திற்கு நிறையவே காரணம் இருக்கிறது.

தமிழ மீனவர்களைப் போலவே, இலங்கை மீனவர்களும் எல்லை மீறி வந்து மீன்பிடிப்பது பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதுதான்.
ஆனால், அவர்களை இந்தியக் கடற்படையினர் எந்தத் தொந்தரவும் செய்வதில்லை. எச்சரிக்கை, அல்லது கைது என்ற அளவில் மட்டுமே நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

காரணம், இலங்கை மீனவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என, மத்திய அரசு, இந்தியக் கடற்படைக்கு அறிவுறுத்தி இருப்பதுதான்.
ஆனால், கச்சத்தீவுப் பகுதியிலும், அதனைத் தாண்டியும் சென்று மீன்பிடிக்கும், தமிழக மீனவர்களிடம், இலங்கைக் கடற்படையினர் எந்தக் கருணையும் காட்டுவதில்லை.

இலங்கை மீனவர்களைப் பாதுகாக்க இந்திய கடற்படையை அறிவுறுத்தும் மத்திய அரசு, தமிழ மீனவர்களைப் பாதுகாக்க, இலங்கை அரசை வலியுறுத்தாதது ஏன் என்பதுதான், அவர்கள் எழுப்பும் கேள்வி.

இலங்கையில் கொல்லப்பட்டது போக எஞ்சியுள்ள தமிழர்களுக்காக ‘நீலி’க் கண்ணீர் வடித்து, பல ஆயிரம் கோடிகளைச் செலவிடத் தயாராக உள்ள மத்திய அரசு, தமிழக மீனவர்களின் உயிரை மட்டும் இப்படி, இலங்கைக் கடற்படைக்குத் தாரை வார்ப்பது எந்த வகையில் நியாயம்?
ப.சிதம்பரம் போன்றவர்களின் நினைவாற்றல் இதற்குப் பதிலளிக்க மறுக்கலாம். மனச்சாட்சி?

மேனா.உலகநாதன்

நன்றி : தினமலர் - செய்திமலர் 14.11.11 (நெல்லைப் பதிப்பு)


Friday, November 5, 2010

புதிய பதிவு....

மணல் எனும் மண்ணுயிர்…
ணல்….
மனித இனத்தின் தொன்மைகள் அனைத்தையும் உள்வாங்கியபடி, பரந்தும், விரிந்தும், ஒடுங்கியும், வளைந்தும் நதியின் போக்கில் படிந்து கிடக்கும் காலத்தின் சுவடு.

நதிகளின் வழியாகத்தான், மனித இனம் தன் நாகரிகத்தையும், பரிணாம வளர்ச்சியையும் தகவமைத்துள்ளது.

ஆற்றங்கரையில் அமர்ந்து நண்பர்களுடன் அளவளாவிய அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே, மணலுக்கும், மனிதர்களுக்கும் உள்ள நுட்பமான உறவையும், அது கிளர்த்தும் உணர்வையும் புரிந்து கொள்ள முடியும்.

மனிதர்களுக்கும், நதிக்கும் இடையே உயிர்ப்பிணைப்பாக பின்னிக்கிடக்கும் மணல், தற்போது கட்டுமானப் பொருட்களில் ஒன்றாக மட்டுமே மதிக்கப்படுவதுதான் சோகம்.

இல்லாவிட்டால், மணல் கொள்ளை என்பது, போதைப் பொருள் கடத்தல், குழந்தைகள் கடத்தல், கூலிக்காக ஆட்களைக் கொல்லுதல் போன்றவற்றை எல்லாம் விட, குண்டர்களின் ஆதிக்கம் மிகுந்த கொலைத் தொழிலாக உருவெடுத்திருக்க முடியுமா?

மணல் திருட்டைத் தடுக்கச் சென்ற அதிகாரிகளை மட்டுமே லாரி ஏற்றிக் கொன்றது பழைய நடைமுறை.

இப்போதெல்லாம், எதிரில் யார் வந்தாலும், மோதிக் கொன்று நசுக்கி விட்டு மணல்லாரிகள் மாயமாகி விடுவது வழக்கமாகி விட்டது.

கடந்த வாரத்தில் மட்டும் இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன.
சேலம் அருகே எதிரே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பெண்மணியை, மணல் லாரி ஒன்று மூர்க்கத்துடன் மோதிக் கொன்றது.

இதற்கு எதிராகத் திரண்ட பொதுமக்களுடன், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரையும் சேர்ந்து போராட்டம் நடத்தினார்.

திருவள்ளூர் அருகே இதே போல் மணல் லாரி மோதிய சம்பவத்தில், இரு சக்கர வாகனம் அப்பளமாக நொறுங்கியது. அதில் வந்தவர் நல்ல வேளையாக காயங்களுடன் தப்பினார். இதற்கு எதிராகவும் மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

ஆனாலும் என்ன?

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆதரவோடு நடந்தேறும் இத்தகைய அட்டூழியங்களை, அப்பாவி மக்களின் போராட்டம் என்ன செய்து விடப்போகிறது?

சாலைகளில் சீறி வரும் மணல் லாரிகளின் மூர்க்கமும், கொலை வெறியும் அப்பாவி மக்களைக் குலை நடுங்கச் செய்வதில் ஆச்சர்யமில்லை.

பெண்களுக்கு நிகராக சங்ககாலப் புலவர்களாலும், தற்காலக் கவிஞர்களாலும் வர்ணிக்கப்படும் நதிகளின் மணல்மேனி, பொக்லைன் இயந்திரங்களால் புண்ணாக்கப்படும் கொடூரம், எந்தவகையிலும் சகித்துக் கொள்ள முடியாதது.
தமிழகம் மட்டுமே சொந்தம் கொண்டாட முடிந்த ஒரே நதியான, தாமிரபரணியும் 

மணல் கொள்ளையால் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இதற்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த்தலைர் நல்லகண்ணு தலைமையில் நடந்து வரும் சட்டரீதியான போராட்டம், மிகவும் முக்கியமானது.

அவரது இந்தப் போராட்டத்தின் விளைவாக, தோழப்பன்பண்ணை, மங்களக்குறிச்சி, கீழ்ப்படுகை, அப்பன் திருப்பதி மற்றும் திருமலைக்கொழுந்து ஆகிய இடங்களில் மணல் அள்ள உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை, இடைக்காலத் தடை விதித்து உள்ளது. இந்த வழக்கில் நல்லகண்ணு, நீதி மன்றத்தில் நேரில் ஆஜராகித் தமது வாதங்களை எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணைகட்டுவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, கடந்த வாரம் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட பழ.நெடுமாறன், மணல் கொள்ளைக்கு எதிராக விவசாயிகள் ஒன்று திரண்டு போராட வேண்டும் என விடுத்துள்ள அழைப்பு கவனத்திற்கு உரியது.

மணல் கொள்ளையைத் தடுக்காவிட்டால், அது நமது அடுத்த தலைமுறையைப் பாதிக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

உண்மைதானே.

நமது மூதாதையர்கள் நமக்கு வளமான நதிகளையும், வனப்பான நிலங்களையும் விட்டுச் சென்றனர்.

அவற்றை அடுத்த தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்கிறோமா? இல்லையே! வெறும் காங்கிரீட் கட்டிடங்களையும், களையிழந்த நதிளையும் அல்லவா விட்டுச் செல்கிறோம்.

…………..

அந்த மனிதர் குக்கிராமத்தைச் சேர்ந்தவர்.

வெளியூரில் தொழில் செய்து நிறையச் சம்பாதித்து விட்டார். பணம் பெருகும் போது மனம் எப்படிச் சும்மா இருக்கும்?

50 லட்சம் ரூபாய் செலவு செய்து அந்தக் கிராமத்தில் ஒரு பிரம்மாண்ட வீடு கட்டினார். 4 மாடிகள். எண்ணற்ற கண்ணாடி ஜன்னல்கள். விலை உயர்ந்த வேலைப்பாடுகள்.

மும்பை, சென்னை போன்ற நகரங்களில் கட்டி எழுப்பப்படுவதைப் போன்ற கட்டிடமாக அது நிமிர்ந்து நின்றது.

தான் பிறந்த ஊரில் இவ்வளவு பெரிய வீட்டைக் கட்டிவிட்டோம் என்பதில் அவருக்கு ஒரே பெருமிதம்.

வந்தவர்களுக்கெல்லாம் வீட்டைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தார்.
அவர்களில் ஒருவர், ‘இந்தக் கிராமத்தில் இவ்வளவு பெரிய வீடு தேவை இல்லையே. ஏன் இப்படிக் கட்டினீர்கள்? நகர்ப்புற மனிதர்கள்தான் எதைப் பற்றியும் கவலைப் படாமல், இயற்கையின் அத்தனை வளங்களையும் சுரண்டி அடுக்கு மாடிக் குடியிருப்புகளைக் கட்டுகிறார்கள். கிராமப்புறங்களிலாவது அதனைத் தவிர்க்கக் கூடாதா? உங்கள் தேவைக்கு மட்டும் அளவான வீட்டைக் கட்டிக் கொண்டால் போதாதா?’ என்று கேட்டார்.

இதை அந்த 4 மாடி வீட்டைக் கட்டியவர் எதிர்பார்க்கவில்லை. அவரது நெற்றி சுருங்கத் தொடங்கியது.

நியாயமான கேள்விதானே!

ஒரு வீட்டைக் கட்டத் தேவைப்படும் மணல் மட்டுமின்றி, செங்கல், சிமெண்ட், மரம், இரும்பு, ஜல்லி, முண்டுக்கல் என அத்தனையும் இயற்கை வளங்களில் இருந்து பெற வேண்டியவைதான்.

இவற்றில் எதையும் நம்மால் செயற்கையாக உற்பத்தி செய்ய முடியாது. எல்லாமே மண்ணின் வளத்தில் இருந்து வெவ்வேறு வடிவங்களில் பெறக் கூடியவைதான்.

பிரபஞ்சம் என்பது அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி அல்ல. எல்லாமே, எடுக்க எடுக்க குறையக் கூடியவைதான்.

இதனால் தான் சில நாடுகளில் மண், சிமெண்ட் இவற்றைவிட மரங்களால் ஆன வீடுகளைக் கட்டத் தொடங்கி உள்ளனர்.

இயற்கையில் நாம் மீண்டும் உற்பத்தி செய்ய முடிந்த ஒரே வளம், மரங்கள் மட்டுமே. அதனால், அவற்றைப் பயன்படுத்தலாம் என்பது அவர்களின் பார்வை.
ஆனால், மரங்களை வெட்டினால் மழை வளம் குறையும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

எனினும், வீடுகளைக் கட்ட, இயற்கை வளங்களைப் பாதிக்காத ஒரு வழிமுறையைக் கண்டறிய வேண்டியது, காலத்தின் கட்டாயம்.
குறிப்பாக, அது நகரமானாலும், கிராமமானாலும் தேவையற்ற அடுக்குமாடிகளைக் கட்டுவதைத் தடை செய்ய வேண்டும்.

படுக்கவும், இருக்கவும் சொந்தமாக ஓர் இடம் வேண்டும் என்ற ஆசை இயல்பானதுதான்.

அதுவே அனைத்தையும் வளைத்துப் போட வேண்டும் என்ற பேராசையாக உருவெடுக்கும் போதுதான் ஆபத்தாகிறது.

மணல் மண்ணுக்கு உயிரானது. மண் மனிதர்களுக்கு உயிரானது. இரண்டையும் அளவோடு பயன்படுத்தினால் மட்டுமே, அவை அடுத்த தலைமுறையினருக்கும் மிச்சமிருக்கும்.

இல்லாவிட்டால்…. எண்ணிப்பார்க்கவும் முடியாத  பயங்கரங்களை அவர்கள் எதிர்காலத்தில்  சந்திக்க நேரிடும்.

மேனா.உலகநாதன்

நன்றி : தினமலர் – செய்திமலர் (நெல்லைப் பதிப்பு), 7.11.2010.

Monday, November 1, 2010

புதிய பதிவு....


தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்…?

த்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் வழக்கம் போல எளிய மக்களுக்கு  எதிரான தன் திருவுளத்தை, மீண்டும் ஒருமுறை திறந்து காட்டி இருக்கிறார்.
அனைவருக்கும் உணவு என்ற இலக்கை அடைய, வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மாதம் 35 கிலோ அரிசி அல்லது  கோதுமையும், மற்றவர்களுக்கு 20 கிலோவும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மலிவு விலையில் வழங்க வேண்டும் என அண்மையில், சோனியாகாந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக்குழு பரிந்துரை செய்தது.
இதன் மூலம், கிராமப்புற, நகர்ப்புற ஏழைகள் அனைவருக்கும் தவறாமல் உணவுகிடைப்பதை உறுதிப்படுத்த முடியும் என நம்பப் பட்டது.
ஆனால்….
உணவுக் கழக கிடங்குகளில் கெட்டு வீணாகும் தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கினால் என்ன என்று உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, அதெப்படி முடியும் எனக் கொதித்தெழுந்த சரத்பவார், தற்போது தேசிய ஆலோசனைக் குழுவின் இந்தப் பரிந்துரைகளையும் புறந்தள்ளி இருக்கிறார்.
தேசிய ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை நிறைவேற்ற, ஆண்டுக்கு 610 லட்சம் டன் தானியம் கொள்முதல் செய்ய வேண்டியது வரும் என்றும், அப்படிச் செய்வது அரசால் சாத்தியமில்லை எனவும் அவர் கூறி இருக்கிறார்.
ஒரு பணக்காரக் கிரிக்கெட் ஆர்வலரிடம், ஏழைகளின் பசி பற்றிய புரிதலை எதிர்பார்ப்பது தவறுதான்.
ஆனால், மத்திய அரசும், மன்மோகன்சிங்கும் அவரிடம் அதை விடாப்பிடியாக எதிர்பார்க்கிறார்களே!
அது ஒரு அரசியல் விளையாட்டு.
எனக்கு இந்தப் பதவி வேண்டாம் என்று சரத்பவார் மிரட்ட, அய்யய்யோ விட்டு விடாதீர்கள் என மன்மோகன் சிங் சமாதானம் செய்ய, அவ்வப்போது அரங்கேறும் அந்த விளையாட்டு, சரத்பவாரின் ஆழமான சுயநலப் பின்னணிகளைக் கொண்டது.
ஆனால் அதற்குப் பலியாவது அரைவயிற்றுக் கஞ்சிக்கு ஆலாய்ப்பறக்கும் ஏழைகள்.
உலகில், மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் போதிய ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காமல் வாழும் ஏழு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்கிறது ஐ. நா வின் உணவுத் திட்ட அமைப்பு.
ஆனாலும் அதற்கான பிரத்தியேகத் திட்டங்களை,  முழு வீச்சில் செயல் படுத்துவது குறித்த அக்கறை நம் தலைவர்களுக்கு இருந்தது இல்லை.
அத்தி பூத்தாற்போல எப்போதாவது இது போன்ற (உணவு உறுதித் திட்டம்) திட்டங்கள் குறித்த பேச்சு எழும்போது, அதற்கு முட்டுக்கட்டை போடவும் தயங்குவது இல்லை.
ஆண்டுக்கு 600 லட்சம் டன் தானியங்களைக் கொள்முதல் செய்வது ஓர் அரசால் சாத்தியமில்லை என சண்டித்தனம் செய்யும் சரத்பவார் போன்றவர்கள், ஒன்றை வசதியாக மறந்து விடுகிறார்கள்.
விவசாயத்திற்கும் அதன் உற்பத்தி சார்ந்த பொருட்களுக்கும் வழங்கப்பட்டு வரும் மானியம் வளர்ந்த நாடுகளில் பல மடங்கு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இந்தியாவில் அது குறைந்து கொண்டே போகிறது என்பதுதான் அது.
வளர்ந்த நாடுகளில் விவசாயத்துக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தின் மதிப்பு,  கடந்த 2007ம் ஆண்டில் 362.2 பில்லியன் டாலராக இருந்தது. (ஒரு பில்லியன் 100 கோடி ரூபாய்). இது 2008ம் ஆண்டில் 379.4 பில்லியன் டாலராகவும், 2009ம் ஆண்டில் 383.7 பில்லியன் டாலராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நிலை என்ன தெரியுமா?
1986 – 88ல் இந்தியாவின் ஒட்டுமொத்த செலவில் 2.3 சதவீதத் தொகை விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்டு வந்தது. இது கடந்த 20 ஆண்டுகளில் ( 2007ம் ஆண்டு)  0.9 சதவீதமாக குறைந்து விட்டது.
கடந்த பத்தாண்டுகளில் விவசாயத்துறையில் நாம் எட்டி இருக்கும் வளர்ச்சி, வெறும் 2.5 சதவீதம் மட்டுமே.
ஆனால் இன்னும் நாம் பெருமிதத்துடன் சொல்லிவருவது ‘இந்தியா ஒரு விவசாய நாடு’.
தொழில்துறை, சேவைத்துறை இவற்றின் வளர்ச்சியில் காட்டிய அக்கறையில்,  சிறிதளவு கூட நாம் விவசாயத்துறையில் காட்டவில்லை என்பதே உண்மை.
தொண்ணூறுகளில் தொற்றிய உலகமயமாக்கல் நோய், நமது தற்சார்பு என்ற உயிர்ச் செல்கள் அனைத்தையும் கொன்றொழித்து விட்டது.
உயிர்த் தொழிலான விவசாயம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
எங்கோ இருக்கும் ஒரு நாட்டின் நிறுவனத்திடமிருந்து, மற்றொரு நாட்டின் நிறுவனத்திற்கு தகவலைப் பெற்றுத் தரும் தொழில் நுட்பம், நமது பொருளாதாரத்தின் ஆதார சுருதியாக சித்தரிக்கப்பட்டது.
5 சதவீதத்தினருக்கும் குறைவானவர்களே பணிபுரிய முடிந்த, தகவல் தொழில் நுட்பத் துறை, அனைவருக்கும் பொதுவானது போன்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டது.
விளைவு…. விவசாயம் ஒரு காலாவதியான தொழில் என்ற சிந்தனை, இன்றைய இளைஞர்களுக்குள் மிக இயல்பாகவும், எளிதாகவும் வேரூன்றி விட்டது.
நவீனச் சுழற்சி தரும் கிறக்கத்தில், உற்பத்தி சார்ந்த தொழில் துறைகளே காலாவதியானவையாகத் தெரியும் போது, விவசாயத்தை அப்படிப் பார்க்கத் தோன்றியதில் ஆச்சரியமில்லை.
பசுமைப் புரட்சி நம் மண்ணை மலடாக்கியது. தகவல் தொழில் நுட்பப் புரட்சி நம் சந்ததியையே உற்பத்தித் திறன் அற்றவர்களாக ஆக்கி வருகிறது.
உற்பத்தித் திறனை இழக்கும் நாடு, விரைவில் தற்சார்பையும் தானாகவே இழக்கும்.
பணக்காரர்கள் எனும் தரகர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அம்பானிகள் இன்னும் பல கண்ணாடி மாளிகைகள் கட்டுவார்கள்.
ஏழைகள் படு ஏழைகளாகி பட்டு மடிவார்கள்.
இதை நோக்கித்தான் நமது இந்தியா இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறது.
ஆனாலும், பசித்துக் கிடக்கும் மனிதர்கள் குறித்த கவலை, ஆட்சியாளர்களை நிம்மதி இழக்கச் செய்கிறது.
தேர்தலில் வாக்களிக்க அவர்கள் உயிருடன் இருக்க வேண்டுமே!
சில நூறு பணக்காரர்களை மட்டுமே வைத்துக் கொண்டு தேர்தல் எனும் நாடகத்தை நடத்த முடியாதே!
அதற்காகத்தான் இந்தப் பசி ஒழிப்புத் திட்டங்கள் எல்லாம். அவற்றைக் கூட சரத்பவார்களால் அனுமதிக்க முடியவில்லை.
ஆனால், பசி எனும் நெருப்பு பற்றி எரியத் தொடங்கினால், அரசும், அதிகாரமும் அதன் முன் ‘வைத்தூரு போலக் கெடும்’ என்பதை இவர்கள் மறந்து விடக் கூடாது.  
மேனா.உலகநாதன்

நன்றி : தினமலர் - செய்திமலர்,  31.10.10 (நெல்லைப் பதிப்பு)