Monday, January 24, 2011

(23.1.11 தினமலர் செய்திமலரில் பிரசுரமான கட்டுரை)
 நிலை குலைக்கும் விலை உயர்வு…

ந்த மாதத்தில்மட்டும் இரண்டாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்த்திக்கொள்ளும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைக்கப்பட்ட பின்னர் இது எட்டாவது முறை.

ஏற்கனவே வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களின் விலை தாறுமாறாக எகிறி, விண்ணைத் தொட்டுத்தொட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குப் பின்னர் இனி கேட்க வேண்டாம். ஏறுமுகம்தான்.  

விலை உயர்வு என்பது ஏதோ ஒரு விதத்தில் கட்டுப்படுத்த முடியாத முரட்டுக் காளையாய், அரசுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்துகிறது. அது அரசே முன்னின்று நடத்தும் ஜல்லிக்கட்டாகவும் இருக்கிறது.

‘இப்படியே போனால் எங்கள் கதி என்னாவது’ என்ற சாமானியனின் கேள்விக்கு எந்த அரசியல் கட்சிகளிடமும் பதில் இல்லை.

சாமான்ய மக்களை மத்திய அரசு பழிவாங்குகிறது என்று குற்றம் சாட்டும் பாரதிய ஜனதாவிடம் கூட, இதற்கான விளக்கம் இல்லை. விலை உயர்வுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவது குறித்து, இடதுசாரிகள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப் போவதாக கூறும் மார்க்சிஸ்ட் கட்சியிடமாவது,  விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் மந்திரம் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

வெங்காயம், தக்காளி போன்ற அத்தியாவசியக் காய்கறிகளின் விலை மற்றும் உற்பத்தி நிலவரம் குறித்த மத்திய வேளாண்துறையின் புள்ளி விவரம், இந்தப் பிரச்சனை குறித்து சில முக்கியமான கேள்விகளை நம்முள் எழுப்புகிறது. 

கடந்த 2006ம் ஆண்டு முதல், நடப்புப் பருவம் வரை, வெங்காயம், தக்காளி இவற்றின் ஒட்டுமொத்த உற்பத்தியைப் பொறுத்தவரை ஏறுமுகத்தில்தான் இருந்து வருகிறது. குறையவே இல்லை என்பதை அரசின் புள்ளிவிவரமே நமக்கு சொல்லுகிறது.

அதாவது, கடந்த 2006ம் ஆண்டில்  தக்காளி பயிரிடப்படும் ஒட்டு மொத்த நிலப்பரப்பின் அளவு 17 லட்சத்து 40 ஆயிரம் ஹெக்டேராக இருந்தது. இது  , தற்போது 18 லட்சத்து 90 ஆயிரம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, 280 லட்சம் டன்னாக இருந்த தக்காளியின் ஒட்டுமொத்த உற்பத்தி, தற்போது 400 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. 

அதே நேரத்தில் 2006ம் ஆண்டில் குவிண்டால் 500 ரூபாயாக இருந்த தக்காளியின் விலை, 2010ம் ஆண்டில் 843 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் கதையும் இதுதான்.

உற்பத்தி அதிகமானால் விலை குறைய வேண்டும் என்பதுதானே, இயல்பான நடைமுறை. ஆனால் இங்கே நேரெதிராக நடந்து வருகிறது. இதற்கு என்ன காரணம்?

வரி விதிப்பில் குழப்பம் என்று சிலர் சொல்லுகிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கையில் உள்ள குளறுபடிகளே காரணம் என்று மற்றொரு தரப்பினர் சொல்லுகிறார்கள். மொத்தத்தில் ஏதோஒரு கொள்கைக் குழப்பத்தின் விளைவே இந்த விலை உயர்வு என்பது மட்டும் நமக்குப் புரிகிறது.

இது ஒருபுறம் இருக்க, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு நாம் எதிர்பாராத சில காரணங்களும் சொல்லப்படுவதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது.

அவற்றில் முதலாவதாக, நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 60 சதவீதமாக இருக்கும் இளைய தலைமுறையினரின் வாங்கும் சக்தி அதிகரித்து வருவதை ஒரு காரணமாக வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இளைஞர்களின் வருவாய் விகிதம் அதிகரித்திருப்பதால், அவர்கள் என்ன விலை கொடுத்தும் பொருட்களை வாங்கத் தயாராக உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். 

ஆனால், இதை சமூகத்தின் அனைத்து மட்ட இளைஞர்களுக்குமான அளவு கோலாக எடுத்துக் கொள்ள முடியாது. கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் மற்றும் பொறியியல் கல்வி கற்று, லட்சங்களில் சம்பளம் வாங்கும் இளைஞர்களின் எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் மேல் தேறாது. 

எனினும், ஒட்டு மொத்த சமூக மாற்றத்தின் காரணமாக அடிப்படை வருவாய் விகிதம் ஓரளவுக்கு உயர்ந்திருப்பதை மறுப்பதற்கில்லை. விலை உயர்வுக்கு இது ஒரு காரணமாக கூறப்படுவதை ஏற்க முடியவில்லை என்றாலும், முழுமையாக மறுக்கவும் முடியவில்லை.

மற்றொரு காரணம் இன்னும் வினோதமானது.

ஆண்டுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தின் காரணமாக விவசாயத் தொழிலாளர்களின் ஒரு நாள் கூலி, சராசரி 150 ரூபாயக உயர்ந்து விட்டதாகவும், இதனால் உற்பத்திச் செலவு அதிகரித்திருப்பதாகவும், விவசாயிகளில் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். 

2006ம் ஆண்டிற்குப் பின்னர் ஏற்பட்டுவரும் விலை ஏற்றத்திற்கும், இதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக, பொருளாதார வல்லுநர்களே கூறுகிறார்கள். விவசாயிகளின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும் போது, கொள்முதல் விலையும், அதன்காரணமாக சில்லறை விலையும் அதிகரிப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். 

ஆனால், விவசாயிகளின் உற்பத்திக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்பது, இன்று வரை முக்கியமான குற்றச்சாட்டாக இருந்து வருவதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அப்புறம் எப்படி விலை உயர்வுக்கு விவசாயிகள் காரணம் ஆவார்கள். அப்படி இருந்தால் இந்த விலை உயர்வை ஏற்றுக்கொள்வதே நியாயமும்  கூட! 

ஆனால், நாட்டில் எந்த விவசாயியும் அப்படி நிறைவடைந்திருப்பதாக தெரியவில்லை.

அடிப்படை வறுமையை ஒழிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ஆண்டுக்கு 100 நாள் திட்டத்தை விலை உயர்வுக்கு காரணமாக கூறுவதையும் ஏற்றுக் கொள்ளமுடியாது. விவசாயத் தொழிலாளர்களின் கூலி விகிதம் உயர்வதை எதிர்மறையாக பார்க்கும் போக்கு விபரீதமானதும் கூட.

ஆக, வாங்கும் சக்தி உயர்ந்துள்ளதே விலை உயர்வுக்கு காரணம் என்று  காட்டி, கணக்கை நேர்செய்யும் முயற்சியாகவே இந்த விளக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டி  இருக்கிறது.

உற்பத்தி அதிகரித்தால், விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதுதான் அடிப்படையான பொருளாதாரக் கோட்பாடு. தற்போதைய நிலை அதற்கு முரணாக காணப்படுவது ஏன் என்பதுதான் இன்று நம்முன் எழுந்து நிற்கும் முக்கியமான கேள்வி.

கற்பனைக்கு எட்டாத பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலவும் ஒரு சமூகத்தில், பொத்தாம் பொதுவான நியாயங்களைத் தீர்வாக வைக்க முடியாது. மாதம் ஒரு லட்சம் சம்பரூபாய் சம்பளம் வாங்குகிறவன் கொடுக்கும் விலையைத் தான், 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறவனும், அதற்கும் கீழாக இருப்பவனும் கொடுக்க வேண்டி இருக்கிறது. 

அதற்காக ஒரு கிலோ தக்காளியின் விலை 10 பைசாவாக குறையவும் வேண்டாம். பின்னர் 60 ரூபாயாக அதிகரிக்கவும் வேண்டாம்.

மாதத்திற்கு இரண்டு முறை பெட்ரோல், டீசலின் விலை உயர்ந்தால், அத்தியாவசியப் பொருட்களின் விலை நான்கு முறை உயர்த்தப்படும் என்பதுதானே உண்மை.

அடிப்படையான தவறுகளை விட்டுவிட்டு, அங்கொன்றும், இங்கொன்றுமாக காரணங்களைத் தேடி அலைவதில் பயனில்லை என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.

விலையின் ஏற்ற இறக்கம், சராசரியானதாக இருக்க வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடாக இருக்கும். காரணம் எதுவாக இருந்தாலும், முடிவில் உறுதியும், கோட்பாட்டில் தெளிவும் இருந்தால்,  அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்படும், இத்தகைய அதல பாதாள ஏற்றத்தாழ்வை நிச்சயமாக தடுத்து நிறுத்த முடியும். 

விலை உயர்வுக்கு சரத்பவாரும், கூட்டணி ஆட்சியுமே காரணம் என்று சாக்குப் போக்கு சொல்வதை விட்டு விட்டு, மத்திய அரசு முழு மனதுடன் அதற்கான நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்.
மேனா.உலகநாதன்.

Sunday, January 9, 2011


(9.1.11 தினமலர் செய்திமலர் நெல்லைப் பதிப்பில் வெளிவந்த கட்டுரை)

விரக்தியின் விளிம்பில்…
நாட்டில் விவசாயத்தைத் தொழிலாக கொண்டவர்களில் 45 சதவீதம் பேர் இந்தப் பிழைப்பே வேண்டாம் என்று நொந்து போய்ச் சொல்லுவதாக, பசுமைப் புரட்சியின் தந்தை என்று பாராட்டப்படும் தேசிய விவசாயிகள் ஆணையத்தின் தலைவர் எம்.எஸ். சுவாமிநாதன் அண்மையில் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஆச்சார்யா என்.ஜி. ரங்கா விவசாயப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர், மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போது இதனைக் கூறியுள்ளார் (Business Line, Dec – 30, 2010).

எம்.எஸ். சுவாமிநாதன் தெரிவித்திருப்பதாலேயே இந்தக் கருத்து, பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தந்தையாக இருந்து அவர் பெற்றெடுத்த பசுமைப் புரட்சி குறித்து, பல்வேறு கருத்து வேறுபாடுகள் உண்டு. எனினும், இந்திய விவசாயத்துறை சார்ந்து, அதற்கான அதிகாரத்தளங்களில் இடம்பெற்று இயங்கி வருபவர் என்ற அளவில், விவசாயத்தின் நிலை குறித்து அவர் தெரிவிக்கும் கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை மறுப்பதற்கில்லை. விவசாயம் குறித்த நவீன கருதுகோள்கள் அடைந்திருக்கும் தோல்வியைப் புரிந்து கொள்ள, அதன் பிதாமகர்களில் ஒருவராக கருதப்படும் எம்.எஸ்.சுவாமிநாதனின் பதில்களே போதுமானது என்று நம்புகிறோம். அந்தப் பேட்டியின் சுருக்கம் இதோ….

கேள்வி : விவசாயிகள் தற்கொலை செய்வது தொடர்கதையாகி விட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் (ஆந்திராவில்) நூற்றுக்கணக்கான குத்தகை விவசாயிகள் கூட தற்கொலை செய்து கொண்டார்கள். ஏன் இந்த துயரம் தொடர்கிறது?

பதில் : விவசாயத்தைப் பொறுத்தவரை மிகச்சிக்கலான காலக்கட்டத்திற்குள் நாம் நுழைந்து கொண்டிருக்கிறோம். இந்தப் பிரச்சனை பன்முகப்பரிமாணங்களைக் கொண்டது. எளிமையான ஒரே ஒருகாரணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. சில பயிர்களுக்கு அதிக முதலீடு ஒரு பிரச்சனையாக இருக்கிறது. போதிய மழை இன்மை, நிலத்தில் தண்ணீருக்கான ஊற்று இன்மை இப்படி இடத்துக்கு இடம் பிரத்தியேகமாக பல்வேறு பிரச்சனைகள்…

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு, உற்பத்திக்கு ஆகும் செலவுடன், 50 சதவீதம் சேர்த்து வழங்க வேண்டும் என்று, தேசிய விவசாயிகள் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், அவர்களுக்கு உற்பத்தி செலவுடன் 15 சதவீதம் மட்டுமே சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. மொத்தத்தில் விவசாயம் என்பது இன்று கட்டுபடியாகக்கூடிய தொழிலாக இல்லை.
தற்போதைய உணவுப் பாதுகாப்புச் சட்டம்,  இந்தப் பிரச்சனையில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடியை மத்திய அரசுக்கு ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன். விவசாயப் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால், நாட்டில் 100 கோடி மக்களுக்கும், 100 கோடி விவசாயக் கால்நடைகளுக்கும் நாம் உணவு வழங்க முடியாது. இதை மிகவும் சிக்கலான காலக்கட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

கேள்வி : இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடத் தயக்கம் காட்டுவது ஏன்? அவர்களது கவனத்தை இந்த தொழிலின் மீது திருப்ப என்ன செய்யலாம்?

பதில் :  விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில், இளைஞர்கள் மட்டும் ஏன் விவசாயத்திற்கு வரப்போகிறார்கள்? விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாத வரை, இளைஞர்களை விவசாயத்தின் பக்கம் ஈர்க்க முடியாது. விவசாயத்தை தொழில் நுட்ப ரீதியாகவும், வருவாய் மதிப்புள்ள தொழிலாகவும் மேம்படுத்துவது குறித்து, மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். அதில் உள்ள அபாயங்களைக் குறைப்பதற்கும், காப்பீடு, கடன் உள்ளிட்ட உதவிகள் எளிதில் கிடைப்பதற்கும் வகை செய்ய வேண்டும்.

கேள்வி : பல்வேறு காரணங்களால் விவசாயத்தை விட்டு பலர் வெளியேறி வருகிறார்கள். விவசாய நிலங்கள், விவசாயமல்லாத பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுவது விரைவாக நடந்து வருகிறது. இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில் :  நாட்டில் விவசாயத்தைத் தொழிலாக கொண்டவர்களில் 45 சதவீதம் பேர், அந்த தொழிலை விட்டு வெளியேறப் போவதாக, அண்மையில் நடத்தப்பட்ட தேசிய மாதிரி கணக்கெடுப்பின் போது தெரிவித்துள்ளனர். கடன் சுமை தரும் அழுத்தத்தால், விவசாயிகள் தங்களது நிலங்களை, விவசாயம் அல்லாத காரணங்களுக்காக விற்பனை செய்யும் மன நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால், விவசாயத்திற்கான நிலப்பரப்பு சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. நிலத்தின் விலையும் அதிகரித்து வருகிறது. சிறிய அளவு நிலத்தில் விவசாயம் செய்பவர்கள் கூட, அதிக உற்பத்தியும், நிறைய லாபமும் அடையக் கூடிய தொழிலாக விவசாயம் மாற வேண்டும்.

கேள்வி : பருவநிலையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் விவசாயத்தைப் பொறுத்தவரை எந்த அளவு பாதித்துள்ளது? அதனால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க என்னமாதிரியான திட்டங்களை வகுக்கலாம்?

பதில் : பருவநிலை அடிப்படையிலான 128 விவசாய மண்டலங்களாகப் பிரித்து (agro-climatic zones), அவை ஒவ்வொன்றுக்கும், பருவநிலை அபாய மேலாண்மைக்கான ஆய்வு மற்றும் பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும். வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற பேரிடர் மேலாண்மைக்கான புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும். தற்போது உள்ளதைப் போல, பேரிடர் இழப்புகளை, மத்தியக் குழுக்களை அனுப்பி மதிப்பிடுவது, பின்னர் மாநில அரசுகளோடு பேரம் பேசுவது போன்ற நடைமுறைகள் எல்லாம் பயனற்றவை. இதன் மூலம் விவசாயிகளுக்கு அடுத்த பருவத்துக்கு முதலீடு செய்து பயிரிடுவதற்கு உரிய காலத்தில் கைக்கு பணம் கிடைப்பதில்லை.
மொத்தத்தில் விவசாயப் பிரச்சனைகளைப் பொறுத்தவரை நம்மிடம் ஒருங்கிணைந்த அணுகுமுறை இல்லை. மேற்கத்திய நாடுகளில் விவசாயம் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும் ஒரு முனை அமைப்பின் கீழ் அணுகப்படுகிறது. எனினும் விவசாயம் தொடர்பான நமது பிரச்சனைகள் தீர்க்கப்பட முடியாதவை அல்ல. எல்லாம் நாம் உருவாக்கிய பிரச்சனைகள்தாம். எனவே அவற்றுக்கு நம்மால் தீர்வு காணமுடியும்.
…………..

இந்தப் பேட்டியில் இடம்பெற்றுள்ள கருத்துகளை, நவீன வேளாண் விஞ்ஞானி ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலம் என்றே கருதலாம். ஓரளவுக்கு நேர்மையாகவே பதில் அளித்திருக்கிறார். எனினும், தோல்விகளை ஒப்புக்கொண்ட அளவிற்கு, அவற்றுக்கான தீர்வு குறித்து சரியான திசையில் சிந்தித்துள்ளாரா என்பது குறித்த கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்திய விவசாயத்தில், தொழில் நுட்ப ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் ஏற்பட்டுள்ள தோல்விகளை மட்டுமே நவீன வேளாண் வல்லுநர்கள் கவனத்தில் கொண்டிருப்பதை எம்.எஸ்.சுவாமிநாதனின் இந்தப் பதில்கள் நமக்கு தெளிவு படுத்துகின்றன.
இயற்கைப் பேரிடர் குறித்து அஞ்சும் இவர்கள், மண்ணிற்கு நாம் இழைத்துள்ள செயற்கைப் பேரிடரை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை என்பதுதான், பிரச்சனையின் மற்றொரு பரிமாணம். மண்ணுக்கேற்ற மரபு சார்ந்த விவசாய முறைகளையும், பயிர்களையும் பாதுகாத்து, அவற்றை நமது மரபு உரிமைகளாகவும், செல்வங்களாகவும் நிலை நிறுத்துவது, நவீனச் சூழலில் நாம் எதிர்கொள்ள நேர்ந்திருக்கும் மிகப்பெரிய சவாலாகும். விவசாய வளர்ச்சி குறித்த திட்டமிடல்களில், அது குறித்து இவர்கள் சிந்திக்க மறுப்பது கவலை அளிக்கிறது.

பசுமைப் புரட்சி போன்ற மற்றுமொரு செயற்கைப் பேரழிவை, இந்த மண்ணில் ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்பதை, நவீன வேளாண் வல்லுநர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மண்ணைக் கொன்று விட்டு மனிதர்களை மட்டும் எப்படி ஐயா வாழவைக்க முடியும்?

மேனா. உலகநாதன்

Saturday, January 1, 2011

கட்டுரை


(2.1.11 தினமலர் - செய்திமலர் நெல்லைப் பதிப்பில் வெளிவந்தது)

 ஏறுவது விலை மட்டுமல்ல !


டந்த வாரம் முழுவதும், வெங்காயமும், தக்காளியும் அகில இந்திய அளவில் ஊடகங்களின் முக்கியப் பாடுபொருளானது.

அவற்றின் கற்பனைக்கெட்டாத  விலை உயர்வு, நாட்டின் அடித்தட்டு மக்கள் முதல், ஆளுவோர் வரை அனைவரையும், ஒரு பூகம்பத்தைப் போல நடுங்க வைத்துவிட்டது.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்துப் பேசிய பிரமுகர் இப்படிச் சொல்கிறார்…

“முன்பெல்லாம் வீட்டு மனை பற்றிப் பேசும்போது செண்ட் கணக்கில் பேசுவார்கள். இப்போது சதுர அடிக்கணக்கில் தான் கூற முடிகிறது. அது போலவே கத்திரிக்காய், தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளை இனி கடையில் சென்று கிலோ கணக்கில் கேட்கவோ வாங்கவோ முடியாது. 100 மிலி கிராம், 50 மிலி கிராம் என்ற அளவில் மட்டும் தான் கேட்க முடியும் போல….”
அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்த சாமான்யர்களின் பேரதிர்ச்சியையே அவரது இந்தக் கருத்து பிரதிபலிக்கிறது. 

வெங்காயத்தின் விலை உயர்வை ஒட்டி எழுந்த எதிர்ப்பைப் பார்த்து மிரண்டு போன மத்திய அரசு, இறக்குமதிக்கான வரியை முழுமையாக ரத்து செய்து, ஏற்றுமதிக்குத் தடைவிதித்து… பல்வேறு பகீரதக் குட்டிக்கரணங்களைப் போட்டு, ஓரளவுக்கு விலையைக் கட்டுப்படுத்தியது.
ஆனாலும், விலையைத் தரைமட்டத்திற்கு குறைத்து விட முடியவில்லை.

மழையால் பாதிப்பு, இறக்குமதி குறைந்தது… என விலை உயர்வுக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டன. அவையெல்லாம் முழுமையான காரணங்கள் அல்ல என்பது மக்களுக்கும் தெரியும். அவர்களின் பிரதிநிதிகளுக்கும் தெரியும்.

விலை உயர்வு என்பது,  வாக்குவங்கியைப் பாதிக்கக் கூடிய பிரச்சனையாக இருப்பதால், அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் பதற்றம் காட்டுகின்றன. இல்லாவிட்டால் இது பற்றியெல்லாம் அவர்கள் பெரிதாக கண்டு கொள்ளப்போகிறார்களா என்ன?

எப்படியோ, விலை உயர்வுப் பிரச்சனையை, நாடு தழுவிய விவாதப் பொருளாக மாற்றியதற்காக, வெங்காயத்திற்கும், தக்காளிக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

சரி.

காய்கறிகளின் விலை இந்த அளவு உயரும்போது, அதனால் விவசாயிகளுக்கு ஏதாவது லாபம் கிடைக்கிறதா? அவர்களது வாழ்க்கைத் தரத்தில் ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா?

இல்லவே இல்லை என்கிறது அண்மையில் வெளிவந்துள்ள தேசிய குற்ற பதிவு அமைப்பின் (National Crime Records Burea – NCRB) புள்ளி விவரம்.
கடந்த 2009ம் ஆண்டில் மட்டும் 17 ஆயிரத்து 368 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக, அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. வழக்கம் போல, மகாராஷ்டிரா மாநிலம் அதிக அளவிலான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட மாநிலம் என்ற ‘பெருமை(?)யை’த் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு, அந்த மாநிலத்தில் மட்டும் 2 ஆயிரத்து 872 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகம் உள்ள ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷ் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் மட்டும் கடந்த ஆண்டு, 10 ஆயிரத்து 765 விவசாயிகள் தற்கொலையால் மடிந்துள்ளனர். இது அந்த ஆண்டின் மொத்த தற்கொலை எண்ணிக்கையில் 62 சதவீதம் ஆகும் என தேசிய குற்றப்பதிவு அமைப்பின் புள்ளி விவரம் கூறுகிறது. 
அதற்காக தமிழகத்தின் நிலவரமும் ஆறுதல் தரக்கூடியதாக இல்லை. கடந்த 2008ம் ஆண்டு 512 ஆக இருந்த தமிழக விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை, 2009ம் ஆண்டில் 1060 ஆக, அதாவது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்திய அளவில், கடந்த 1997ம் ஆண்டு தொடங்கி, 2009ம் ஆண்டு முடிய 12 ஆண்டுகளில் 2 லட்சத்து 16 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, தேசிய குற்றப்பதிவு அமைப்பு தெரிவிக்கிறது.
அதாவது, கடந்த 2009ம் ஆண்டு நிகழ்ந்துள்ள தற்கொலை எண்ணிக்கைப் படி, 30 நிமிடங்களுக்கு ஒரு விவசாயி இந்தியாவில் தற்கொலை செய்து மடிகிறார் என மதிப்பிடப் படுகிறது.

குறிப்பிட்ட ஒரு பிரச்சனையின் அழுத்தம் காரணமாக இத்தனை பேர் கொத்துக் கொத்தாக தற்கொலை செய்து கொள்வது, மனித வரலாற்றில் எங்கும், எப்போதும் நிகழாத ஒன்று என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இந்திய விவசாயத்தின் வளர்ச்சி, இந்த லட்சணத்தில்தான் தற்போதும் இருந்து வருகிறது.

“நாட்டில் விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், அந்தத்துறையைப் பாதிக்கக் கூடிய பிரச்சனைகள் என்னவோ அதிகரித்துக் கொண்டுதான் உள்ளன” என்கிறார், இந்திய விவசாயிகள் தற்கொலை குறித்து விரிவான ஆய்வுகளை நடத்தி முடித்துள்ள பொருளாதார வல்லுநர் கே. நாகராஜ்.

உண்மைதானே! ஒரு பக்கம் காய்கறிகளின் விலை உயர்கிறது. அதே நேரத்தில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அப்படி என்றால் விலை உயர்வால் லாபம் அடைபவர்கள் யார்? பொருட்களுக்கான விலையைத் தீர்மானிப்பவர்கள் யார்? 

விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைத்தால், அவன் குறைந்த பட்சம் தற்கொலை செய்து கொள்ளாமல் உயிரோடு இருந்து, அடுத்த தேர்தலுக்கு வாக்களிக்கவாவது பயன்படுவான் தானே? அதற்காகவாவது இந்தப் பிரச்சனையின் உண்மையான மூல வேரைக் கண்டு பிடித்து அறுத்தெறிய அரசியல் கட்சிகள் முயலலாமே?

இன்று வரை குக்கிராமங்களில் விளையும் தோட்டக் காய்கறிகளை, வியாபாரிகள் அதிகவிலை கொடுத்து வாங்குவதில்லை. அதே காயை அருகில் உள்ள சிறு நகரக்கடையில் போய், அதே விவசாயி வாங்க நேரிட்டால், பல மடங்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதிருக்கும்.
களைய முடியாத இந்த முரண்பாட்டுக் களை எப்படி மண்டியது? இதன் மூல வேர் எங்கிருந்துதான் புறப்படுகிறது?

இந்திய மக்கள் தொகையில் 70க்கும் மேற்பட்ட சதவீத்தினராக இருந்து வரும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இன்று வரை விடைகிடைக்காத கேள்வி இதுதான்.

உள்ளூர் வியாபாரிகளின் பதுக்கலுடன், வெளிநாட்டு நிறுவனங்களின் பகடையாட்டமும் இப்போது சேர்ந்து கொண்டதால், விலை உயர்வு என்பது பரம்பத ஆட்டம் போல் தொடர்கிறது.

இந்தியாவின் விவசாயம் சார்ந்த கொள்கை முடிவுகளில் மாற்றத்தை மேற்கொள்வதற்கு, தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் செய்து கொண்டுள்ள தாராள மய வணிக ஒப்பந்தம் (Free Trde Agreement) பெரும் தடையாக இருப்பதாக, பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இதனால் அவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதும், அவசியமான பொருட்களை ஏற்றுமதி செய்வது மான முரண்பாடான நடைமுறை, மத்திய அரசால் தொடர்ந்து கடைப்பிடிக்கப் பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ரோம் நகரமே பற்றி எரியும் போது, அமைதியாக பிடில் வாசித்துக் கொண்டிருந்த அந்நாட்டு மன்னனை, பல முறை நினைவுபடுத்தும் மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரின் முரண்பட்ட பேச்சுக்கும் போக்குக்குகம் வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

வரி ரத்து, ஏற்றுமதிக்கு தற்காலிகத் தடை என்ற விலைக்குறைப்பு நாடகமெல்லாம், தேர்தலுக்கு வேண்டுமானால் பயன்படலாம். விவசாயத்தையும், விவசாயிகளையும் தேரவைக்கப்ப பயன்படாது.

காலத்துக்கு ஏற்ற உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தும் புதிய விவசாயக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். அவை விவசாயத்தையும், விவசாயிகளையும் முன்னிறுத்தி, அவர்களுக்கு குறைந்த பட்ச உத்தராதங்களை அளிக்கக் கூடியவையாகவும் இருக்க வேண்டும்.

விலை உயர்வு என்ற வலிக்கு, வெறும் தற்காலிக நிவாரணி மாத்திரைகள் தேவையில்லை. அதன் அடிப்படையான ஆணிவேரைக் கண்டு அறுத்தெறியும் ரண சிகிச்சை தேவை. அதற்கு விவசாயத்தை வளப்படுத்தி, பலப்படுத்துவது ஒன்றுதான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.

மேனா.உலகநாதன்

Monday, December 27, 2010

26.12.10, தினமலர் செய்திமலர் நெல்லைப் பதிப்பில் வெளிவந்தது 

படித்தவர்கள்தான் செய்கிறார்கள்…!

“படித்தவன் பாவமும் சூதும் பண்ணினால்
போவான் போவான் ஐயோ என்று போவான்”

பசியும், பட்டினியுமாகச் செத்துப்போன மகாகவி பாரதியின் அழுத்தமான நம்பிக்கை இது.

இப்போது இந்த வரிகளுக்கு எந்த அளவு அர்த்தப் பொலிவு இருக்கிறது என்று தெரியவில்லை.

படிக்காதவன், ஓடும் பேருந்தில் ‘பிக்பாக்கெட்’ அடிக்கிறான். பூட்டியிருக்கும் வீட்டை உடைத்து கொள்ளையடிக்கிறான்.

அவனுடைய திருட்டின் எல்லை அவ்வளவுதான்.

படித்தவர்களும், பெரும் பதவியில் இருப்பவர்களும் செய்யும் திருட்டுகள் கற்பனைக்கு எட்டாதவையாக இருக்கின்றன.

சமூகத்தின் பெரும்பாலான சீரழிவுகளுக்கும் மெத்தப்படித்த மேல்தட்டினரே காரணமாக இருக்கிறார்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2001ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி, தமிழகத்தின் ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி போன்ற பின் தங்கிய பகுதிகளில், 1000 ஆண்குழந்தைகளுக்கு சராசரியாக 925 முதல் 850 பெண்குழந்தைகள் மட்டுமே உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாக, பெண் சிசுக்கொலைக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அமைப்பு (Campain Against Sex selective Abortion) தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற இந்த அமைப்பின் கருத்தரங்கில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய தென்மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அந்தக் கருத்தரங்கில், பெண் சிசுக்கொலை  தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, இந்தப் பிரச்சனை தொடர்பாக கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டிருக்கும் எதிர்பாராத மாற்றங்கள் குறித்த அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.

6 வயதுக்கு உட்பட்ட ஆயிரம் ஆண் பெண் குழுந்தைகளின் பாலின சதவீதம், பெருநகரங்களை விட, மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் மேம்பாடு அடைந்துள்ளதாக, இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டுக் கழகத் தலைவர் ஷீலாராணி சுங்கத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2001ம் ஆண்டில், பாலின விகிதத்தில்  மிக மோசமாகக் காணப்பட்ட தர்மபுரி, சேலம், மதுரை, கடலூர் மாவட்டங்களில், தற்போது நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி மாவட்டத்தில் 1000 ஆண்குழந்தைகளுக்கு, 976 பெண்குழந்தைகள் என்ற அளவில் தற்போது பாலின விகிதம் மேம்பட்டிருப்பதையும், அந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஆனால், கல்வி அறிவில் தன்னிறைவு பெற்றதாக கருதப்படும் கேரள மாநிலத்தின் எர்ணாகுளம், வயநாடு, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் முன்னேறிய நகரமாக கருதப்படும் ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் பாலின விகிதம், படுவேகமாக சரிந்து கொண்டிருப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

கல்வி அறிவில் முன்னேறாத மாநிலங்களைக் காட்டிலும், முன்னேறிய மாநிலங்களில், சிசுவிலேயே பாலினத்தை அறிந்து கொலை செய்யும் போக்கு அதிகரித்திருப்பதாக அவர்கள் அதிர்ச்சி தெரிவித்தனர்.

இதற்குக் காரணம் நகரங்கள், மற்றும் சிறு நகரங்களில் சட்ட விரோதமாக கருச்சிதைவு செய்யும் ஸ்கேன் மையங்கள் நிறைய இருப்பதே காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள ஸ்கேன் மையங்களில் மூன்றில் ஒரு பங்கு மையங்கள் மட்டுமே, எத்தனை கருச்சிதைவு செய்யப்பட்டது என்பது குறித்த அறிக்கையை அரசுக்கு அனுப்பும் வழக்கத்தைக் கொண்டிருப்பதாக, சமூக ஆர்வலர் ரஞ்சனி மூர்த்தி தெரிவித்துள்ளார்.

கருவுற்று 12 வாரங்களுக்குப் பின்னர் கருச்சிதைவு செய்ய வேண்டும் என்றால், சட்டப்படி அதற்கான உரிமம் பெற்ற அரசு மருத்துவமனைகளை மட்டுமே அணுக வேண்டும் என்ற நிலையிலும், பெரும்பாலும் யாரும் அதனைப் பின்பற்றுவதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

மிகவும் தாழ்த்தப்பட்ட ஏழை எளிய சமூகத்தைச் சேர்ந்தவர்களை விட, நடுத்தர மற்றும் மேல்தட்டு குடும்பங்களில்தான் வரதட்சணை என்பது, இன்றும் பெரிய அளவில் கோலோச்சி வருவதாக, இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட பெரும்பாலான சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய குடும்பங்களில் பெண்ணுக்குத் திருமணம் செய்வது செலவு மிகுந்த ஆட்பரச் சடங்காகவே  உருவெடுத்திருப்பது, பெண் குழந்தைகள் குறித்த உள்ளார்ந்த அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், கருவில் இருக்கும் குழந்தையை ஆணா, பெண்ணா என்று கண்டறியும் தொழில் நுட்பத்தை, எளிய மக்களைவிட, படித்த மேல்தட்டு சமூகத்தினரே அதிக அளவில் பயன்படுத்தி வருவதாகவும், அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
உண்மைதானே!

பெரும்பாலான மலைக் கிராமங்களில், பிரசவ நேரத்தில் பெண்களை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லக்கூட சாலை வசதியோ, வாகன வசதியோ இல்லாத நிலையில், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிய அவர்கள் எங்கே போவார்கள்?

படித்தறிந்த மேல் தட்டினர், மிக இயல்பாக, எந்தச் சங்கடமும் இன்றி, நெல்மணியோ, கள்ளிப்பாலோ இல்லாமல் பெண் சிசுவைக் கருவிலேயே கண்டறிந்து ஒழித்து வருகின்றனர் என்ற உண்மை, நமக்கு அதிர்ச்சியை விட வேதனையையே அதிகம் தருகிறது.

வரதட்சணை என்ற மோசமான கலாச்சார நோயே, இன்றுவரை பெண்சிசுக் கொலைக்கு ஆதார வேராக இருந்து வருகிறது என்ற உண்மை தற்போது மேலும் உறுதிப்பட்டு வருகிறது.

வடிவங்கள் மாறலாம். ஆனால் வரதட்சணை என்ற வக்கிரம் மாறவில்லை. படித்தவர்களும் கூட சிசுவென்றும் பாராமல், பெண்ணைக் கருவிலேயே கண்டறிந்து கொல்லும் மூர்க்கம், இன்றும் தணியாததற்கு இதுவே காரணமாக உள்ளது.

நுனிநாக்கு ஆங்கிலமும், நவநாகரிக உடையுமாக தோற்றத்தில் மட்டுமே தங்களைப் புதுமை விரும்பிகளாய்க் காட்டிக் கொண்டு அலையும் இவர்கள், சிந்தனை அளவில், பெண்கள் குறித்த பார்வையில், பல ஆயிரம் ஆண்டு பின்தங்கிய பழமைவாதிகள் என்பதே உண்மை.

இவர்களோடு ஒப்பிடும் போது, ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’ என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெருமிதம் பொங்க கேள்வி எழுப்பிய வள்ளுவன் இன்றும் நமக்குப் புதியவனாகத் தெரிவதில் வியப்பில்லை!

பாவம் பாரதி. படித்தவர்கள் மீதுதான் அவனுக்கு எத்தனை நம்பிக்கை.

மேனா.உலகநாதன்

Tuesday, December 21, 2010

கட்டுரை


ஜனநாயகத்தின் சண்டாளர்கள்!

லைவரிசை ஒதுக்கீட்டுப் புகாரை முன்னிறுத்தி நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளை, வட இந்திய ஊடகங்கள், ஆங்கிலமா ஹிந்தியா என அடையாளம் கண்டறிய முடியாத வினோதமொழியில்,   விலாவாரியாகக் கடைவிரித்துக் கொண்டிருந்தன.

அந்த ஜனநாயக சங்கடத்தைப் பார்த்த படியே நாளேட்டைப் புரட்டிய போது கண்ணில் பட்ட மற்றொரு செய்தி, அத்தகைய சங்கடத்தை மேலும் அதிகப்படுத்தியது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் விதார்பா மாவட்ட விவசாயிகளுக்கு அப்போதையை முதலமைச்சரே இழைத்த கொடுமை குறித்து, உச்சநீதிமன்றம் தெரிவித்த கண்டனம் தொடர்பான செய்திதான் அது.

விதார்பா மாவட்டத்தை அத்தனை சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. 1997 முதல், 2008ம் ஆண்டு முடிய சுமார் பத்து ஆண்டுகளில், அந்த மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த  2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டனர்.

மனித வரலாற்றிலேயே, குறிப்பிட்ட ஒரு பிரச்சனை தந்த அழுத்தத்தால் இத்தனை பேர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு நடந்ததில்லை என்பது, மானுடவியாலாளர்களின் கருத்து.

இத்தகைய வரலாற்றுக் கொடூரத்துக்கு ஆளான அந்த அப்பாவி விவசாயிகள் பலரின் தற்கொலைக்குக் காரணமாக, அந்த மாநிலத்தின் அப்போதைய முதமைச்சரே இருந்துள்ளார் என்பதுதான் இதில் உச்சக்கட்ட சோகம்.
அவர் வேறு யாருமல்ல. தற்போது மத்திய அமைச்சராக வலம் வந்து கொண்டிருக்கும் விலாஸ்வராவ் தேஷ்முக்தான்!

அப்படி அவர் என்னதான் செய்து விட்டார்?  

மகாராஷ்டிர மாநிலத்தின் அப்போதைய காங்கிரஸ் எம்எல்ஏ திலீப்குமார் சனந்தா என்பவரும், அவரது குடும்பத்தினரும், விதார்பா மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகளுக்கு கந்து வட்டிக்கு கடன் கொடுத்து வந்துள்ளனர்.
குறைந்தது மாதம் ஒன்றுக்கு 10 சதவீதம் வட்டி என்றால் எந்த விவசாயியால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும்?

மானத்தைப் பெரிதாக கருதும் விவசாயிகள், அதனை விட முடியாமல் உயிரை விடும் அவலம், அம்மாவட்டத்தில் தொடர்கதையானது.

இந்தக் கொடுமை குறித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளில் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் எழுத்து மூலமாகப் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் அந்தப் புகார்கள் மீது, அம்மாநிலக் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதததுடன், வழக்குப் பதிவு செய்யவும் மறுத்து விட்டது.

தங்களுடைய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை மறுப்பதாக, மகாராஷ்டிர மாநில உயர் நீதி மன்றத்தில் விவசாயிகள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், விவசாயிகளின் புகார் தொடர்பாக காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், அதனைப் பதிவு செய்ய மறுத்ததற்கு அபராதமாக அரசு 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

அதற்குப் பின்னரும் அம்மாநில அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டியதைத் தொடர்ந்து, விவசாயிகள் உச்சநீதிமன்றத்தின் உதவியை நாடி உள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர், இந்தப் பிரச்சனை குறித்து கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியருக்கு, முதலமைச்சர் விலாஸ்வராவ் தேஷ்முக்கின் அந்தரங்க உதவியாளர், தொலை பேசி மூலம் எச்சரித்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

2006ம் ஆண்டு, மே மாதம் 31ம் தேதி, முதலமைச்சரின் உதவியாளர், தொலை பேசி மூலமாக, மாவட்ட ஆட்சியருக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்திருப்பதையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே, அரசு இயந்திரத்தை ஏழைகளுக்கு எதிராகப் பயன்படுத்தி இருக்கும் இந்தச் சம்பவம் தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மாகாராஷ்டிர மாநில அரசுக்கு விதித்த அபராதத் தோகையை 10 லட்சம் ரூபாயக அதிகரித்து உத்தரவிட்டதுடன், உடனடியாக வழக்குப் பதிவு செய்யுமாறு காவல்துறைக்கும் அவர்கள் கட்டளை இட்டுள்ளனர்.

ஜனநாயக அமைப்பில், தங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ள எல்லைக்கு உட்பட்டு, அவர்களால் செய்ய முடிந்தது இவ்வளவுதான் போலும்.

பன்னாட்டு நிறுவனங்களைக் களமிறக்கி, விதைகள், உரம் என அனைத்திற்கும் விவசாயிகளைக் கையேந்த வைத்தது, மத்திய அரசு என்றால், மாநில அரசின் அதிகார பீடத்தில் இருப்பவர்கள், அந்த மக்களிடமே கந்து வட்டிக்குப் பணம் கொடுத்துள்ளனர்.

என்ன ஒரு ஜனநாயகம்?

இதில் நீ செய்த ஊழல் பெரிதா, நான் செய்த ஊழல் பெரிதா என்ற பட்டி மன்றம் வேறு.

பல லட்சம் கோடி ஊழல்கள் எல்லாம் அனாயசமாக அரங்கேறிக் கொண்டிருக்கையில், இது என்ன பிரமாதம் என்று சிலர் கேட்கலாம்.
அவற்றால் அரசுக்கு நேர்ந்ததாகச் சொல்லப்படுவது வருவாய் இழப்பு மட்டும்தான்.

ஆனால், ஏற்கனவே மரணத்தின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கும் ஏழை விவசாயிகளுக்கு, ஆட்சியில் இருப்பவர்களும், அவர்களது ஆட்களும் கந்துவட்டிக்குக் கடன் கொடுத்து, தற்கொலைக்குள் தள்ளி விடும் குரூரம் சகிக்க முடியாதது.

லட்சியப் பிடிப்பும், கொள்கை உறுதியும், நேர்மையும் மிகுந்த அரசியல் தலைவர்கள் இல்லாமல் போயிருக்கலாம்.

அடியாட்களுக்கும், கொலைகாரக் கூலிப்படையினருக்கும் இருக்கும், குறைந்த பட்ச மனித இரக்கம் கூடவா, அரசியல்வாதிகளிடம்  இல்லாமல் போய்விடும்?
போய்விட்டது என்பதையே இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

ஊழலும், சுரண்டலும் அரசியலை விழுங்கும் ஆக்டோபஸ்களாக, விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதை எத்தனையோ நிகழ்வுகள் மூலம் நாம் உணர்ந்திருக்கிறோம்.

ஆனால், அவை எல்லாவற்றையும் விட, மிக மோசமான, கொடூரமான உதாரணம் இது.

விலாஸ்வராவ் தேஷ்முக் என்பவர், இன்றைய அரசியல்வாதிகளின்  கீழ்மைத் தனத்திற்கு, வெளிப்படையான குறியீடு மட்டுமே.

மற்றபடி இது விதார்பா மாவட்டத்தில் மட்டுமே நடப்பது அல்ல. நாட்டின் பல்வேறு பகுதிகளில், ஏழ்மைக்கும், வறுமைக்கும் தம்மை ஒப்புக் கொடுத்து விட்டு, வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்ற மனநிலையோடு, மரணத்திற்காகக் காத்திருக்கும், அப்பாவி விவசாயிகளின் நிலையும் இதுதான்.

ஜார்கண்டில், ஆண்டுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கு கூலியாகக் கொடுக்கப்படும் காசோலைகளை மாற்றித்தர அவர்களிடமே சிலர் கமிஷன் வாங்குவதாக, அம்மாநிலத்தின் தலைமைச் செயலாளர்,  ரிசர்வ் வங்கிக் கவர்னர் சுப்பாராவ் முன்னிலையிலேயே, நிகழ்ச்சி ஒன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கிராமப்புற ஏழைகள் மீது, நமது அரசுகளும் அமைப்பும் கொண்டுள்ள பரிவும், அக்கறையும் எத்தகையது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் படும் சிரமத்திற்காக (!) கண்ணீர் வடிக்கும் நமது பிரதமர், கஞ்சிக்குப் போராடும் இந்த எளியவர்கள் குறித்தும் சிறிது அக்கறை செலுத்தலாம். அதனால் பெரிய அரசியல் பிழை ஒன்றும் நேர்ந்து விடாது.


மேனா. உலகநாதன்

தினமலர் - செய்திமலர் (நெல்லைப் பதிப்பு) 19.05.2010