Friday, March 11, 2011

தொகுதி அறிமுகம் - 4


துறைமுகம் (பொது)



Last Updated :

தொகுதி பெயர் : துறைமுகம்

வரிசை எண் : 18

அறிமுகம் :

1952 - ம் ஆண்டு துறைமுகம் தொகுதி உருவாக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பில் இந்தத் தொகுதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பூங்காநகர் தொகுதி நீக்கப்பட்ட பிறகு அந்தத் தொகுதியில் இருந்த வார்டுகள் 43, 44, 48 மட்டும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. மறுசீரமைப்பில் சிறிய தொகுதியாக இது உருவாகி இருக்கிறது. முன்பு சேப்பாக்கம் தொகுதியே சிறிய தொகுதியாக இருந்தது. இத்தொகுதியில் இதுவரை 14 முறை தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 9 முறை திமுகவும், 3 முறை காங்கிரஸ் கட்சியும், 2 முறை சுயேச்சையும் வெற்றிபெற்றுள்ளன. 1977-ல் இருந்து திமுகவின் கோட்டையாக இத்தொகுதி திகழ்ந்து வருகிறது. 1991-ல் நடைபெற்ற தேர்தலில் ராஜீவ் காந்தி மரணத்தையடுத்து ஏற்பட்ட அனுதாப அலையில் தமிழகம் முழுவதும் திமுக தோற்றபோதிலும் இத்தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் கருணாநிதி வெற்றிபெற்றார். ஆனால், கருணாநிதி தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக நீடிக்காமல் உடனே தன் பதவியை ராஜிநாமா செய்தார். இதற்கு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் திமுகவே வெற்றி பெற்றது. 1989, 1991 தேர்தல்களில் முதல்வர் கருணாநிதியும், 1996, 2001, 2006 தேர்தல்களில் பேராசிரியர் க.அன்பழகனும் தொடர்ந்து வெற்றிபெற்று வந்துள்ளார்கள். கடந்த முறை 2006-ல் நடைபெற்ற தேர்தலில் க.அன்பழகன் 410 ஓட்டுகள் வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றார்

இத்தொகுதியின் எம்.எல்.ஏ.க்கள்.

1951 கிருஷ்ணா ராவ் (காங்கிரஸ்)
1957 கிருஷ்ணா ராவ் (காங்கிரஸ்)
1962 ஹாஜா செரீப் (காங்கிரஸ்)
1967 டாக்டர் ஹபிபுல்லா பேக் (சுயேச்சை)
1971 மொய்தீன் (சுயேச்சை)
1977 செல்வராஜன் (திமுக)
1980 செல்வராஜன் (திமுக)
1984 செல்வராஜன் (திமுக)
1989 மு.கருணாநிதி (திமுக)
1991 மு.கருணாநிதி (திமுக)
1991 செல்வராஜ் (திமுக) இடைத் தேர்தல்
1996 க.அன்பழகன் (திமுக)
2001 க.அன்பழகன் (திமுக)
2006 க.அன்பழகன் (திமுக)
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்.

வார்டு 23, வார்டு 24, வார்டு 25, வார்டு 26, வார்டு 27, வார்டு 28, வார்டு 29, வார்டு 30, வார்டு 43, வார்டு 44, வார்டு 48, வார்டு 49, வார்டு 80.

வாக்காளர்கள்
ஆண் 75,621
பெண் 69,531
திருநங்கைகள் 31
மொத்தம்   1,45,183

வாக்குச்சாவடிகள்
மொத்தம் : 157

தேர்தல் நடத்தும் அதிகாரி/ தொடர்பு எண்:
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் கூடுதல் இயக்குநர் எ.சுந்தரவல்லி - 94431 58866

Thursday, March 10, 2011


தேர்தல் திருவிழாவில் காணாமல் போகும் விவசாயிகள்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரபரப்பு அதன் உச்சக் கட்டத்தை நெருங்கி வருகிறது. கூட்டணி குறித்த கூட்டல், கழித்தல் கணக்குகள் முடிவுக்கு வந்து விட்ட நிலையில், வாக்குகளை அறுவடை செய்வதற்கான வியூகங்களை வகுக்கும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

தேர்தல் திருவிழாவில் உதிரிக்கட்சிகள் கூட உற்சாகத்துடன் வலம் வருகின்றன. சக்திக்குத் தகுந்த ‘சீட்டு’கள். இல்லாவிட்டால் ‘நிபந்தனையற்ற ஆதரவு’ என்ற  அறிவிப்புடன், அகப்பட்டதை சுருட்டி அரசியல் வியாபாரத்தில் லாபம் பார்த்துவிடுவது என்பதே அவர்களது அதிகபட்ச வேலைத்திட்டம். இப்படி, ஜாதி, வட்டாரம், தொழில் என ஏதோ ஓர் அடிப்படையில்  உதிரி இயக்கங்களாக ஒண்றிணைந்து, தேர்தல் காற்று வீசும்போதே தூற்றிக் கொள்ளத் தயாராகி விட்டன பல அமைப்புகள்.

ஆனால், கிராமப்புற வாக்குவங்கியின் பெரும்பான்மை எண்ணிக்கையாக இருக்கும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு மட்டும் இந்த தேர்தல் கால செப்படி வித்தை எப்போதுமே சாத்தியமாவதில்லை.

அறுபது ஆண்டுகால ஜனநாயகத்தில் எந்த நிறைவையும் எட்ட முடியாமல் தவிக்கும் சில சபிக்கப்பட்ட மக்கள் பிரிவில் விவசாயிகள் முக்கியமானவர்கள். ஆனால், தேர்தல் காலத்தில் வெறும் வாக்களிக்கும் மனிதக் கருவிகளாக மட்டுமே அவர்கள் பார்க்கப்படுகிறார்கள். 

சங்கங்கள் என்ற பெயரில் விவசாயிகளை  ஒருங்கிணைக்கும் சில இயக்கங்களும், முறையான அரசியல் பயிற்சி எதையும் அவர்களுக்கு அளிப்பதில்லை. கையாகவும், தாமரையாகவும், உதய சூரியனாகவும், இரட்டை இலையாகவும், பம்பரமாகவும் இன்னபிற ஓட்டுக் கட்சிகளின் சின்னங்களாகவும் கூழாங்கற்களைப் போல, விவசாயிகளின் அரசியல் பேராற்றல் சிதறுண்டு கிடக்கிறது.

கடன் தள்ளுபடி பெறுதல், மானிய விலையில் உரங்கள், விதைகள் பெறுதல் என்ற அளவில் விவசாயிகளின் அரசியல் தேவைகள் இங்கே குறுக்கப்படுகின்றன.
அனைத்து அரசியல், சமூக செயற்பாடுகளும் விவசாயிகளை நோக்கியே செல்லுவது போல நமக்குத் தோன்றுவது உண்டு. ஆனாலும் அவை  வெறும் தோற்றப்பிழைகள் என்பதே உண்மை.

அது உண்மையாக இருந்திருந்தால், தகவல் தொழில் நுட்பம் மட்டுமே  முதற்பெருந் தொழிலாக இன்று அடையாளம் காணப்படும் நிலை ஏற்பட்டிருக்காது.

உற்பத்தித் தொழிலான விவசாயத்தை முற்றிலும் ஓரங்கட்டி விட்டு, ‘தரகு’வேலையான தகவல் தொழில் நுட்பத்தை மட்டுமே,  நாட்டின் வளர்ச்சிக்கான வழியாகச் சித்தரிக்கும் கோட்பாட்டு மோசடியும் அரங்கேறி இருக்காது.

அத்தகைய கோட்பாட்டு மோசடி என்ற பெருவிருட்ச நிழலில் பெருகித்தழைத்த விழுதுகள்தான், ஸ்பெட்க்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு போன்ற மிகப்பெரிய பொருளாதார மோசடிகள்.

இது ஒருபுறம் இருக்க, தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் பெரும் சக்தியாக ஒரு காலக்கட்டத்தில் இருந்த விவசாய சங்கங்கள் இன்று ஏன் இப்படி முகவரி இழந்து நிற்கின்றன?
தமிழக அரசியலில் தோல்வியையே சந்திக்காத எம்.ஜி.ஆர், 1980ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு, நாராயணசாமி நாயுடு தலைமையில் இயங்கிய விவசாய சங்கத்தின் எதிர்ப்பும் ஒரு முக்கியக் காரணம் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

அடுத்து நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது, அதே நாராயணசாமி நாயுடுவின் வீட்டிற்கே சென்று சந்தித்து, அவரது ஆதரவைக் கோரிப்பெற்றுள்ளார் எம்.ஜி.ஆர்.
சரியாகவோ, தவறாகவோ, விவசாயிகளின் பேராற்றலை ஒருங்கிணைத்து, அதன் மூலம் மிகப்பெரிய அரசியல் தாக்கத்தையும் நாராயணசாமி நாயுடு ஏற்படுத்தி உள்ளார்.
ஏன் இப்போது அது சாத்தியப் படவில்லை?

விவசாய சங்கங்கள் அந்த ஆளுமையை இழந்து நிற்க காரணம் என்ன?
விவசாயிகளின் தற்சார்பு என்ற அந்தரங்க பலம் நசுக்கப்பட்டதே (demoralise) அதற்குக் காரணம்.
இலவசங்களுக்கும், மானியத்திற்கும் கையேந்தும் பிச்சைக்காரர்களின் நிலைக்கு அவர்களை அரசியல் கட்சிகள் தள்ளி விட்டன.

மனித இனத்தின் அனைத்து ஆற்றலையும் அர்த்தமற்றதாக்கிவிடும் வறுமை, பசி, நோய் இவை மூன்றும் விவசாயிகளின் அன்றாட வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அம்சங்களாகின.
இருக்க இடம், உண்ண உணவு, உடுக்க உடை இந்த மூன்று அடிப்படைத் தேவைகளை அடைவதற்காகவே, இந்திய விவசாயி தன் ஆயுள்காலம் முழுவதும் போராடுகிறான். அவனது குழந்தைகளுக்கு சத்துள்ள உணவு, நல்ல கல்வி என்பது பலிக்காத நெடுங்கனவாகவே நீடித்து வருகிறது.

தமிழகத்தின் கடைக்கோடி விவசாயியைப்  பொறுத்தவரை தேர்தல் என்பது என்ன?
ஓட்டுக்குப் பணம் கிடைக்கும். வாக்குப் பதிவன்று பிரியாணிப் பொட்டலங்கள் கூட கிடைக்க வாய்ப்புண்டு. மோதிரங்கள், குடங்கள் என இன்னும் சில பொருட்களும் கிடைக்கலாம். உள்ளூர்த்தலைவர் சார்ந்துள்ள கட்சிகளின் வசதியையும், செல்வாக்கையும் பொறுத்தது. சில ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்தகைய அற்ப சந்தோஷங்களுடன் வந்து போகும் ஒரு ஜனநாயகத் திருவிழா என்பதைத் தவிர, தேர்தல் குறித்து அவர்களுக்கு எந்த மதிப்பீடும் இல்லை.

பசுமைப் புரட்சி என்ற பெயரால் தங்களது மண்ணும், வாழ்வும் மழுங்கடிக்கப்பட்ட சோகத்தை அவர்கள் இதுவரை உணரவில்லை.

இத்தனை ஆண்டுகளாகத் தாங்கள் பயன்படுத்தி வரும் வேதி உரங்களால் வளமானது பெருமுதலாளிகள் சிலரே தவிர தங்களது மண்ணோ, வாழ்வோ இல்லை என்ற உண்மையும் அவர்களுக்கு புரிவதில்லை.

39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீராதாரங்கள் இருந்த இடம் தெரியாமல் போன மாயம் குறித்தும் அவர்களுக்கு தெரியவில்லை.

இவற்றின் விளைவே விவசாயம் என்ற தொழில் இன்று அழிவை நோக்கிச் சரியத் தொடங்கி இருப்பது என்ற யதார்த்தமும் அவர்களுக்கு புரியவில்லை.

ஏற்கனவே நடைபெற்ற பசுமைப் புரட்சியால், உயிர்ச்சத்து உறிஞ்சப்பட்டு, குற்றுயிரும் குலை உயிருமாக மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் மண்ணின் மீது, இன்னுமொரு பசுமைப் புரட்சி எனும் ருத்திர தாண்டவத்தை ஆடி முடிக்க நமது அரசுகள் தயாராகி விட்ட விபரீதத்தையும் அவர்களால்  உணர முடியவில்லை.

தங்களிடமிருந்து மிக குறைந்த விலைக்கு வாங்கப்படும் கத்திரிக்காய், கடைகளில் இவ்வளவு அதிக விலைக்கு விற்கப்படும் மாயம் என்ன என்பதையும் அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

இப்படித் தன்னுணர்வு எதுவும் அற்ற விட்டில் பூச்சிகளைப் போல விவசாயிகள் மழுங்கடிக்கப்பட்டுள்ளார்கள். தங்களுக்கான அரசியலும், தேவையும் என்ன என்பதை அடையாளம் காண முடியாத விசாயிகள், வாக்குவங்கி அரசியல் வர்த்தகத்தில், செல்லாத ரூபாய் நோட்டுகளைப் போலச் சீரழிகிறார்கள்.

நிலமற்ற ஏழைகளுக்கு நிலம், உற்பத்திக்கு உரிய விலை… என விவசாய சங்கங்கள் வழக்கமாக முன்வைக்கும் மிகச்சில முழக்கங்களும் கூட, அரசியல் உள்ளீடற்ற வெற்றுப் புலம்பலாய் மெல்ல மெல்லத் தேய்ந்து வருகின்றன.

வாக்காளர்களில் 50 விழுக்காடாகவும், மக்கள் தொகையில் 70 விழுக்கடாகவும் இருக்கும் விவசாயிகள், தேர்தல் நேரத்தில் தங்கள் தேவைகள் குறித்து குரல் எழுப்பவும், நிபந்தனைகளை முன்வைக்கவும் திராணியற்றவர்களாக மௌனித்திருப்பது, அவர்களுக்கு மட்டும் அல்ல, நாட்டுக்கும்  நல்லதல்ல.

இந்த லட்சணத்தில், அரசியல் தலைவர்களில் பெரும்பாலோர் தங்களை விவசாயிகள் என்று சொல்லிக் கொள்வதுதான் வேடிக்கை. ஆனால், சாதாரண  குடிமகன் ஒருவன் தன்னை விவசாயி என்று பிறரிடம் அறிமுகப் படுத்திக் கொள்ள வெட்கப்படுகிறான் என்பதே உண்மை.

கட்சி அரசியலை ஓரம் கட்டிவிட்டு, அடிப்படைப் பிரச்சனைகளை முன்னிறுத்தும் அணுகுமுறையை விவசாய அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் கிளைகளாகச் செயல்படும் விவசாய அமைப்புகளால், அது சாத்தியமில்லை.

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கங்களாக விவசாய அமைப்புகள் இயங்கத் தொடங்கும் போதுதான், அவற்றின் பலம் அரசியல் வாதிகளைத் திரும்பிப் பார்க்க வைக்கும். அதுதான் உண்மையான அரசியலும் கூட!
மேனா. உலகநாதன்

நன்றி : தினமலர் - செய்திமலர்.

தொகுதி அறிமுகம் - 3

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி (பொது)





தொகுதி பெயர் : சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி

வரிசை எண் : 19

அறிமுகம் : தமிழக சட்டப்பேரவை தொகுதிகளிலேயே சிறிய தொகுதியாக இருந்த சேப்பாக்கம் தொகுதியில் திருவல்லிக்கேணி தொகுதியின் பகுதிகளையும் இணைத்து சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி புதிதாக 2011-ல்தான் உருவாகியுள்ளது. சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக முதல்வர் கருணாநிதி இருந்து வருகிறார். திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக பதர் சயீத் (அ.தி.மு.க) உள்ளார். இதுவரை சேப்பாக்கம் தொகுதியில் 8 முறை தேர்தல் நடைபெற்று உள்ளது. முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் அதிகம் உள்ள இத்தொகுதியில் 7 முறை திமுகவும், காங்கிரஸ் ஒரு முறையும் தேசிய லீக் ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளது. 1989- நடைபெற்ற தேர்தலில் தேசிய லீக் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றிபெற்றது. முதல்வர் கருணாநிதி கடந்த மூன்று தேர்தல்களில் (1996, 2001, 2006) சேப்பாக்கம் தொகுதியிலேயே வெற்றி பெற்றுள்ளார்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்.
சென்னை மாநகராட்சி வார்டு 79, வார்டு 81, வார்டு 82, வார்டு 83, வார்டு 84, வார்டு 85, வார்டு 86, வார்டு 87, வார்டு 88, வார்டு 89, வார்டு 90, வார்டு 91, வார்டு 92, வார்டு 93, வார்டு 95, வார்டு 111.

வாக்காளர்கள்:

ஆண் பெண் திருநங்கைகள் மொத்தம்
89,688 89,815 7 1,79,510

வாக்குச்சாவடிகள்:

மொத்தம் : 184

தேர்தல் நடத்தும் அதிகாரி/ தொடர்பு எண்:

சென்னை குடிநீர் வாரிய பொது மேலாளர் ப. பாஸ்கரன் - 78450 20000

தொகுதி அறிமுகம் - 2

கள்ளக்குறிச்சி (தனி)





* தொகுதி பெயர் : கள்ளக்குறிச்சி (தனி)
* தொகுதி எண் : 80
* அறிமுகம் :

கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி 1952-ம் ஆண்டு இரட்டைமுறை வாக்கெடுப்பில் பொது தொகுதியாக தொடங்கப்பட்டது. அதன் பிறகு 1962-ல் கள்ளக்குறிச்சி தனி தொகுதியாக மாற்றப்பட்டது.

பின்னர் 1967-ல் கள்ளக்குறிச்சி பொது தொகுதியாக மாறியது. அதன் பிறகு 1977-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி தொகுதி நீக்கப்பட்டு சின்னசேலம் தொகுதியாக மாற்றப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சி, சின்னசேலம், வடக்கனந்தல் பேருராட்சி, சின்னசேலம், கள்ளக்குறிச்சி ஒன்றியங்கள் இடம்பெற்றிருந்தன.
தற்போது தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு சின்னசேலம் சட்டமன்ற பொது தொகுதி நீக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனித் தொகுதி உருவாக்கப்பட்டது.

* எல்லை :

இத்தொகுதியில் கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள 21 வார்டுகள், தியாகதுருகம் பேரூராட்சியின் 15 வார்டுகள், கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 25 ஊராட்சிகள், சின்னசேலம் ஒன்றியத்தில் 37 ஊராட்சிகள், தியாகதுருகம் ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 2 ஊராட்சிகள் இடம்பெற்றுள்ளன.

* தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

நகராட்சி: கள்ளக்குறிச்சி- 21 வார்டுகள்
பேரூராட்சிகள்: தியாகதுருகம்- 15 வார்டுகள்
கிராம ஊராட்சிகள்: 102

கள்ளக்குறிச்சி ஒன்றியம்:

(25) எரவார், இந்திலி, க.மாமனந்தல், காட்டனந்தல், மாடூர், மலைக்கோட்டாலம், மேலூர், நீலமங்கலம், நிறைமதி, பெருமங்கலம், பெருவங்கூர், பொற்படாக்குறிச்சி, புக்கிரவாரி, சிறுமங்கலம், சிறுவங்கூர், சிறுவத்தூர், தச்சூர், தென்கீரனூர், வீ.பாளையம், வானவரெட்டி, வரதப்பனூர், வீரசோழபுரம், விளம்பார், வினைதீர்த்தாபுரம், தென்தொரசலூர்.

சின்னசேலம் ஒன்றியம்:

(37) வி.அளம்பலம், அம்மையகரம், அம்மகளத்தூர், அனுமனந்தல், பங்காரம், எலவடி, ஈரியூர், ஈசாந்தை, காளசமுத்திரம், கனியாமூர், காரனூர், கருந்தலாக்குறிச்சி, கருங்குழி, கூகையூர், குதிரைச்சசந்தல், குரால், வி.மாமாந்தூர், மட்டிகைக்குறிச்சி, மேல்நாரியப்பனூர், மூங்கில்பாடி, நைனார்பாளையம், நல்லாத்தூர், நமச்சிவாயபுரம், பாக்கம்பாடி, பெத்தானூர், பெத்தாசமுத்திரம், பூண்டி, ராயப்பனூர், ராயர்பாளையம், சடையம்பட்டு, செம்பாக்குறிச்சி, தாகம்தீர்த்தாபுரம், தென்சிறுவலூர், தோட்டப்பாடி, உலகங்காத்தான், உலகிய நல்லூர், வாசுதேவனூர்.

தியாகதுருகம் ஒன்றியம்:

(38) அசகளத்தூர், சின்னமாம்பட்டு, சித்தலூர், சித்தாத்தூர், எறஞ்சி, ஈயனூர், குருபீடபுரம், காச்சக்குடி, கண்டாச்சிமங்கலம், கனங்கூர், கொங்கராயபாளையம், கூந்தலூர், கொட்டையூர், குடியநல்லூர், கூத்தக்குடி, மடம், மேல்விழி, முடியனூர், நாகலூர், நின்னையூர், ஒகையூர், பானையங்கால், பொரசக்குறிச்சி, பிரிதிவிமங்கலம், சாத்தனூர், புதுஉச்சிமேடு, சிறுநாகலூர், திம்மலை, தியாகை, உடையநாச்சி, வடதொரசலூர், வாழவந்தான்குப்பம், வரஞ்சரம், வடபூண்டி, வேளாக்குறிச்சி, வேங்கைவாடி, விளக்கூர், விருகாவூர்.

ரிஷிவந்தியம் ஒன்றியம்:

(2) அந்தியூர், குன்னியூர்.

* வாக்காளர்கள் :
ஆண் பெண் திருநங்கைகள் மொத்தம்
1,09,553 1,05,574 8 2,15,135

* வாக்குச்சாவடிகள் :
மொத்தம் 259
பொது 252, துணை வாக்குச்சாவடி 1, ஆண் 3, பெண் 3

* தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண்:
கோட்டாட்சியர் அ.ந.நாகபூஷ்ணராஜு : 9445000421

தொகுதி அறிமுகம் - 1

காட்டுமன்னார்கோவில் (தனி)



தொகுதி பெயர் : காட்டுமன்னார்கோவில் (தனி)
தொகுதி எண் : 159
அறிமுகம் :
காட்டுமன்னார்கோவில் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி, கிழக்கு, தெற்கே நாகை மாவட்டமும், மேற்கே அரியலூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களையும், வடக்கே புவனகிரி தொகுதியையும் எல்லையாக கொண்டு அமைந்துள்ளது.

தனித்தன்மை :

சீரமைக்கப்பட்ட இத்தொகுதியில் சிதம்பரம் தொகுதியிலிருந்து ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி சேர்க்கப்பட்டுள்ளது. இத்தொகுதியிலிருந்து அண்ணாமலைநகர் பேரூராட்சி மற்றும் குமராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 4 ஊராட்சிகள் சிதம்பரம் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை ஆகிய 3 பேரூராட்சிகளும், கீரப்பாளையம் ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் 55 ஊராட்சிகள், குமராட்சி ஒன்றியத்தில் 36 ஊராட்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கி காட்டுமன்னார்கோவில் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

பேரூராட்சிகள் : 3

ஸ்ரீமுஷ்ணம் - 15 வார்டுகள்
காட்டுமன்னார்கோவில் - 18 வார்டுகள்
லால்பேட்டை - 15 வார்டுகள்
கிராம ஊராட்சிகள் : 112

கீரப்பாளையம் ஒன்றியம்: (21) கூடலையாத்தூர், கலியமலை, கந்தகுமாரன், கானூர், காவாலக்குடி, கோதண்டவிளாகம், குமாரக்குடி, மழவராயநல்லூர், நந்தீஸ்வரமங்கலம், நங்குடி, பாளையங்கோட்டை (கீழ்), பாளையங்கோட்டை (மேல்), பேரூர், பூர்த்தகங்குடி, புடையூர், ராமாபுரம், சோழத்தரம், வடக்குப்பாளையம், வலசக்காடு, வட்டத்தூர், முடிகண்டநல்லூர்.

காட்டுமன்னார்கோவில் ஒன்றியம் :

(55) ஆச்சாள்புரம், அகரபுத்தூர், ஆழங்காத்தான், அழிஞ்சிமங்கலம், அறந்தாங்கி, ஆயங்குடி, செட்டித்தாங்கல், ஈச்சம்பூண்டி, எசனூர், கள்ளிப்பாடி, கண்டமங்கலம், கண்டியாங்குப்பம், கஞ்சங்கொல்லை, கால்நாட்டாம்புலியூர், கருணாகரநல்லூர், கீழக்கடம்பூர், கீழபுளியம்பட்டு, கொக்கரசன்பேட்டை, கொள்ளுமேடு, கொழை, கொண்டசமுத்திரம், குணமங்கலம், குணவாசல், குஞ்சமேடு, குருங்குடி, கே.பூவிழந்தநல்லூர், ம.ஆதனூர், மதகளிர்மாணிக்கம், மா.மங்கலம், மானியம் ஆடூர், ம.உத்தமசோழகன், மேல்ராதாம்பூர், மேலகடம்பூர், மேல்புளியங்குடி, மோவூர், முட்டம், நகரப்பாடி, நத்தமலை, நாட்டார்மங்கலம், பழஞ்சநல்லூர், ராயநல்லூர், ரெட்டியூர், சித்தமல்லி, ஷண்டன், சிறுகாட்டூர், ஸ்ரீஆதிவராகநல்லூர், ஸ்ரீபுத்தூர், ஸ்ரீநெடுஞ்சேரி, தொரப்பு, டி.அருள்மொழிதேவன், தேத்தாம்பட்டு, திருச்சின்னபுரம், வானமாதேவி, வீராணநல்லூர், வீரானந்தபுரம்.

குமராட்சி ஒன்றியம் :

(36) ஆட்கொண்டநத்தம், சி.அரசூர், ம.அரசூர், அத்திப்பட்டு, செட்டிக்கட்டளை, எடையார், எள்ளேரி, கருப்பூர், கீழஅதங்குடி, கீழபருத்திகுடி, மேலபருத்திகுடி, ம.கொளக்குடி, குமராட்சி, கூடுவெளிச்சாவடி, மாதர்சூடாமணி, மெய்யாத்தூர், முள்ளங்குடி, நலன்புத்தூர், நந்திமங்கலம், நெடும்பூர், நெய்வாசல், ம.உடையூர், பரிவளாகம், ம.புளியங்குடி, டி.புத்தூர், ருத்திரச்சோலை, சர்வராஜன்பேட்டை, சோழக்கூர், சிறகிழந்தநல்லூர், தெம்மூர், தெற்குமாங்குடி, வடக்குமாங்குடி, திருநாரையூர், வடமூர், வெள்ளூர், வெண்ணையூர்.

வாக்காளர்கள் : ஆண் பெண் மொத்தம் 93,009 86,624 1,79,633

வாக்குச்சாவடிகள் : மொத்தம் : 216
தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண் :
கடலூர் உதவி ஆணையர் (கலால்) சி.வி.கேசவமூர்த்தி
98424 05631

Saturday, March 5, 2011

இ(எ)ப்போதும் ஏமாற்றம்தான்…

‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல் வரிகள், விவசாயிகளுக்கு தற்போதெல்லாம் பெரிய நம்பிக்கையைக் கொடுப்பதில்லை.
எத்தனை காலத்துக்கு வேண்டுமனாலும் மக்களை ஏமாற்றலாம் என்பதை நமது அரசுகள் மிகத்தெளிவாகப் புரிந்து வைத்திருப்பதே அதற்கு காரணம்.

2011- 12ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையின் மூலம், மத்திய அரசு தனக்கு இருக்கும் அந்த ‘புரிதல் தெளிவை’ மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. 
விவசாயத்தை நம்பிக்கையூட்டும் வாழ்வாதாரத் தொழிலாக மாற்றுவதற்குரிய சிறப்பான எந்த அம்சமும், இடம்பெறாமலே இந்த பட்ஜெட்டை சமர்ப்பித்து முடித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி.

2011 – 12ம் ஆண்டு பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்க கூடிய ஒரே அறிவிப்பு, உணவு உறுதித் திட்டத்திற்கான மசோதா, நடப்பாண்டிற்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்பது மட்டும்தான் என்கிறார் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்.

ஆனால், அதற்கான நிதி ஆதாரமே ஒதுக்கப்படாமல், எப்படி அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்கிறார் மற்றொரு பொருளாதர விமர்சகர். கடந்த 2010 – 11ம் ஆண்டு, உணவுப் பொருள் மானியத்துக்காக 60 ஆயிரத்து 599,53 கோடி ரூபாய் ஒதுக்கிய மத்திய அரசு, தற்போதைய 2011 – 12ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அதனை  60 ஆயிரத்து 572.98 கோடி ரூபாயாக குறைத்திருப்பதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

பின்னர் எப்படி, உணவு உறுதித் திட்டத்தை முறையாக நிறைவேற்ற முடியும்?

முறையாக கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு விவசாயக்கடனுக்கான வட்டி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

உற்பத்தி செய்யவும் சக்தி இன்றி, அதற்கு உரிய விலையைப் பெறவும் வழி இன்றித் தவிக்கும் இந்திய விவசாயி, எங்கிருந்து தவணை தவறாமல் கடனைத் திருப்பிச் செலுத்துவான்?

உணவு பதனிடும் தொழில் நுட்பத்தின் பக்கம் மத்திய அரசின் கவனம் முதல் முறையாகத் திரும்பி இருப்பது, இந்த பட்ஜெட்டில் தென்படும் ஓர் ஆறுதலான அம்சம் எனலாம்.

மற்றபடி, அடுத்த தலைமுறையினரை ஈர்க்கும் வசீகரம் மிக்க தொழிலாக விவசாயத்தை மேம்படுத்தும் எத்தகைய தொலை நோக்கு வியூகங்களும் மத்திய அரசிடம் இல்லை என்பது, இந்த பட்ஜெட்  அறிக்கை மூலம் மீண்டும் ஒரு முறை உறுதியாகி உள்ளது.

வேளாண் துறையில் பட்டம் பெற்ற இளைஞர்கள் யாரும் கிராமங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்பாத நிலையில், அவர்களை ஈர்ப்பதற்கான எந்த அம்சமும் பட்ஜெட்டில் இடம்பெறாதது பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக இந்த பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியிருப்பது இங்கே கவனத்துக்குரியது.

வேளாண் படிப்பில் பட்டம்பெற்ற பெரும்பாலான இளைஞர்கள், ஏதாவது ஒரு நிறுவனங்களில் சேர்ந்து பணியாற்றுவதையே விரும்புகின்றனர்.
அவர்களின் இத்தகைய மனப்போக்கில் மாற்றம் ஏற்பட, விவசாயத்தை நாட்டின் முழுமையான ஆதாரத்தொழிலாக வளர்த்தெடுப்பதற்கான நேர்மையான முயற்சிகள் தேவை. அதனை நமது சரத்பவார் போன்றவர்களிடம் நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், விவசாயத்திற்கென தனி நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என பல முறை வலியுறுத்தி உள்ளார். ஆனால், மத்திய அரசே, இதுவரை  அதனைச் செய்ய முன்வரவில்லை என்பதுதான் வேதனை.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் வழியில், ரயில்வேத்துறைக்கென்று தனி பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதை தன் சிரமேற்கொண்ட கடமையாக கருதி நிறைவேற்றிவரும் மத்திய அரசு, பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரத் தொழிலான விவசாயத்தை, தனிப்பெருந்தொழிலாக இதுவரை அங்கீகரிக்கத் தயாரக இல்லை என்பதையே இது காட்டுகிறது.

அண்மையில், கர்நாடக மாநிலத்தில், எடியூரப்பா தலைமையிலான அரசு, விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
17 ஆயிரத்து 857 கோடி ரூபாய் மதிப்புள்ள வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருப்பதன் மூலம், அத்துறையின் அடிப்படையான பிரச்சனைகளில் அம்மாநில அரசு மிக அழுத்தமாக தன் கவனத்தைச் செலுத்தி உள்ளது.

அதனைப் புரிந்து கொள்ள கர்நாடக மாநில அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட்டின் சில அம்சங்கள் இதோ….
·         நவீன உணவுப் பதப்படுத்துதலுக்கு முன்னுரிமை.

·         சுவர்ண பூமி திட்டப்படி 10 லட்சம் விவசாயிகள் குடும்பங்கள் மேம்பாட்டுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

·         கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு ஒரு சதவகித வட்டியில் கடன்.

·         இயற்கை உர விவசாய வளர்ச்சிக்கு ரூ.200 கோடி.

·         உயிரி எரிபொருள் திட்ட மேம்பாட்டுக்கு ரூ.125 கோடி.

·         விவசாயக் கருவிகள் மானியத்துக்கு ரூ.100 கோடி.

·         நிலத்தின் உயிர்ச்சத்தை மேம்படுத்துவதற்கான பூ சேத்தனா திட்டத்துக்கு ரூ.40 கோடி.

·         விவசாய அடிப்படை கட்டமைப்பு நிதியத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்குதல்.

·         விவசாய மின் இணைப்புகளை பலப்படுத்த ரூ.3,900 கோடி ஒதுக்கீடு.

·         ஏரிகளைத் தூர்வாரவும், அதில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கவும்
ரூ.1000 கோடி.

·         உயர் கல்வி படிக்கும் விவசாயிகளின் குழந்தைகளுக்கு வட்டி இல்லாத
கடனுதவி.

·         2011 முதல் 2020-ம் வரையிலான ஆண்டை நீர்ப்பாசன ஆண்டாக அறிவித்து நீர் ஆதாரத்தைப் பெருக்க ரூ.50 ஆயிரம் கோடி திரட்டுதல்.

என இன்னும் பல அம்சங்கள்....

கர்நாடக மாநில அரசின் பட்ஜெட்டை தமிழகத்தில் பட்டியலிட்டு என்ன செய்ய என்று நீங்கள் கேட்கலாம்.

தமிழகம் உட்பட மற்ற மாநில அரசுகளும் இதனைப் பின்பற்றலாமே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான்.

மத்திய அரசு மரபணு மாற்ற விவசாயத்தை ஆதரிக்கும் நிலையில், கர்நாடக மாநில அரசு, இயற்கை வேளாண்மைக்கும், நிலத்தின் உயிர்ச்சத்தை மேம்படுத்துவதற்கும் நிதி ஒதுக்குகிறது.

இதில் இருந்தே மாநில அரசுகள், வேளாண்மைக்கென்று தனிக்கொள்கையையும், நிதி நிலை அறிக்கையையும் வகுப்பதில் உள்ள அனுகூலம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

இளைஞர்கள் ஏற்கும் தொழிலாக விவசாயத்தை மாற்றுவதற்கான திட்டத்தோடு, மண்வளத்தைப் பாதிக்காத வேளாண்முறையையும் அதன் மூலம் வளர்த்தெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை,  கர்நாடக மாநில அரசின் இந்த நடவடிக்கை நமக்கு உணர்த்துகிறது.

தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநில அரசுகளும் ஏன் இதனைப் பின்பற்றக்கூடாது?

மேனா. உலகநாதன்

நன்றி தினமலர் - செய்திமலர்

Saturday, February 26, 2011


எதற்கு இந்த இரட்டை வேடம்?

“இந்த அரசுக்கு பதின் ஆண்டுகளின் (Decades) தொடக்கம் எது என்பதே இன்னும் தெரியவில்லை. கடந்த 2010ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரைத் தொடங்கி வைத்து உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், இதே போன்று பதின் ஆண்டுகள் தொடங்குவதாக கூறினார். இந்த ஆண்டும் உரையின் தொடக்கத்தில் அதையே கூறுகிறார். இதில் இருந்தே இந்த அரசின் உணர்ச்சியற்ற தன்மையைப் புரிந்து கொள்ள முடிகிறது”

மக்களவையில், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலின் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பிரகாஷ்காரட், 
இப்படித்தான் தமது உரையைத் தொடங்கினார்.

அவரது இந்த விமர்சனத்தை வெறும் அரசியல் நையாண்டியாகப் புறந்தள்ளி விட முடியவில்லை.

ஒரு குடியரசுத் தலைவரின் உரையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற அதே உறுதி மொழிகளும், கருத்துருக்களும் இந்த ஆண்டும் இடம்பெறுவது, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள எவரையும் ஆத்திரப்பட வைப்பதில் வியப்பில்லை.
விலைவாசி உயர்வையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவதில் இதே மெத்தனப்போக்கை இந்த அரசு காட்டிவருவதாகவும்  பிரகாஷ் காரட் அப்போது குற்றம்சாட்டினார்.

மத்திய அரசின் மீதான அவரது இந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவது போல இருந்தது, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் குறித்து, மத்திய நாடாளுமன்ற விவகார மற்றும் திட்டமிடல் துறை அமைச்சர் அஷ்வினி குமார், மக்களவையில் அதே நாளில் சமர்ப்பித்த அறிக்கை.

கடந்த 2002ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி நாட்டில் 5.5 கோடிப் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

ஆனால், இந்த கணக்கெடுப்பில் சில மாநிலங்களில் முழுமையான தகவல்களை பெற முடியவில்லை என்ற உண்மையையும் அந்த அறிக்கை ஏற்றுக் கொண்டுள்ளது.

அந்த மதிப்பீட்டின் படி, பீகாரில் அதிகபட்சமாக 1.13 கோடி பேரும், உத்தரபிரதேசத்தில் 1 கோடி பேரும், மகாராஷ்டிர மாநிலத்தில் 45 லட்சம் பேரும், மத்திய பிரதேசத்தில் 40 லட்சம் பேரும், மேற்குவங்கத்தில் 39 லட்சம் பேரும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் என மதிப்பிடப் பட்டிருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல. கடந்த 1997ம் ஆண்டு வறுமைக்கோடு குறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பும், 2002ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பும், வெவ்வேறு முறைகளில் எடுக்கப்பட்டிருப்பதால், இரண்டையும் ஒப்பிட இயலவில்லை என்றும் அந்த அறிக்கையில் மத்திய அரசு தனது குழப்பத்தை வெளிப்படுத்தி உள்ளது.

வறுமைக் கோட்டுக்கான வருவாய் இலக்கை அதிகரிக்க வேண்டும் என பல மாநிலங்கள் கோரியிருப்பதையும் அந்த அறிக்கையை சமர்ப்பித்த அமைச்சர் அஷ்வினி குமார் அப்போது குறிப்பிட்டார். மாநிலங்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றுமாறு, மத்திய அரசுக்கு சுரேஷ் டெண்டுல்கர் தலைமையிலான நிபுணர் குழு வலியுறுத்தி இருப்பதாகவும் அவர் கூறினார்.  அந்தக் குழுவின் பரிந்துரையை மத்தியத் திட்டக்குழு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அஷ்வின்குமார் கூறியுள்ளார்.

மேலும், நகர்ப்புறத்தில் வறுமைக்கோடு குறித்த கணக்கெடுப்பை நடத்துவதற்கான தெளிவான வரையறை இதுவரை கண்டறியப்படவில்லை என்ற உண்மையையும் அப்போது ஒப்புக்கொண்ட அஷ்வினி குமார், சரியான கணக்கெடுப்பு முறை குறித்து ஆய்வு செய்ய மத்திய திட்டக் குழு எஸ்.ஆர்.ஹசீம் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் கூறினார்.

ஆக, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் குறித்த உண்மையான புள்ளி விபரத்தையே இதுவரை மத்திய அரசால் தெரிந்து கொள்ள முடியவில்லை.
வறுமை ஒழிப்பே தமது முதலும் முடிவுமான இலக்கு என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அதனைக் கண்டறிவதில் எந்த அளவு குழம்பிக் கிடக்கிறது என்பதை, மத்திய அமைச்சர் அஷ்வினி குமாரின் இந்த அறிக்கை நமக்கு தெளிவு படுத்துகிறது.

இதே போன்று, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ள கருத்துகள், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில், மத்திய அரசு காட்டி வரும் அக்கறை எவ்வளவு போலித்தனமானது என்பதை தோலுரித்துக் காட்டுகிறது.

கடந்த ஓராண்டில் மட்டும் பெருமுதலாளிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசு வரிச்சலுகையாக அள்ளி வழங்கி இருப்பதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

இந்தப் பணத்தை ஏழை, பணக்காரர்களுக்கு இடையே அதிகரித்துவரும் இடைவெளியை நிரப்புவதற்கு மத்திய அரசு பயன்படுத்த வேண்டும் எனவும் யெச்சூரி வலியுறுத்தி உள்ளார்.

இந்தியாவில் ஐபிஎல் (ஐபிஎல் கிரிக்கெட் அணிகளை ஏலத்தில் எடுக்கும் கோடீஸ்வரர்கள்) பிபிஎல் (வறுமைக் கோட்டுக்கும் கீழே உள்ள ஏழைகள்) என மக்கள் இரண்டு பிரிவினராக கூறுபோடப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

விலைவாசி உயர்வு மற்றும் உணவுப்பொருள் உற்பத்தி விவகாரத்தில், மத்திய அரசு, அண்மையில் மேற்கொண்டு வரும் சில நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்தால், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் முன்வைக்கும் இந்த விமர்சனத்தில் பொதிந்துள்ள உண்மை புரியவரும்.

வெங்காயத்தின் உற்பத்தி சரிந்து, அதன் விலை விண்ணை முட்டுமளவு உயர்ந்து, மக்களை மூச்சுத்திணற அடித்துக் கொண்டிருந்தபோது, மற்றொரு பக்கம் உருளைக் கிழங்குகளை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து பாதுகாத்து வைக்க, நொறுக்குத் தீனி (Junk Foods)  தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்தது மத்திய அரசு.

ஆனால், விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களை பாதுகாத்து, பதனிட்டு வைப்பதற்கான தொழில் நுட்ப வசதிகளை செய்து கொடுக்க மத்திய அரசுக்கு இதுவரை மனம் வரவில்லை.

சில்லரை வர்த்தகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதித்து, அந்த நிறுவனங்களுக்கு உணவுப் பொருள்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி சேமிப்பதற்கான வசதிகளையும்  மத்திய அரசு செய்துதரத் தொடங்கி உள்ளது.

அதுமட்டுமின்றி, கிராமப்புறங்களில், விவசாயிகளிடம் இருந்து உணவுப் பொருள்களை வாங்குவதற்கான கொள்முதல் நிலையங்கள் அமைக்கவும் பன்னாட்டு உள்நாட்டு பெருநிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்தப் பணியை செய்துவந்த அரசு கூட்டுறவுப் பண்டகசாலைகள், படிப்படியாக செயலிழக்கச் செய்யப்பட்டு, பின் அவற்றின் மூச்சு முழுமையாக நிறுத்தப்படும்.

இதன் மூலம், உணவுப் பொருள் உற்பத்தி, கொள்முதல், சேமிப்பு, விநியோகம் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த கடமைகளில் இருந்து மெல்ல மெல்ல தன்னை விடுவித்துக் கொள்ளும் மத்திய அரசு, பெருமுதலாளிகளின் லாபத்தைப் பெருக்கும் சேவையில் மனமுவந்து ஈடுபட்டு வருகிறது.
                                                    
இப்படி, ஒருபக்கம் மக்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் அமல்படுத்திக் கொண்டு, மற்றொருபக்கம் வறுமை ஒழிப்பு, உணவுப்பாதுகாப்பு என்று சொல்லும் மத்திய அரசின் இரட்டை அணுகுமுறை, அபத்தமானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட.

பிரகாஷ் காரட் சொல்வதைப் போல, இந்த அரசை உணர்ச்சியற்ற அரசு என்பதா? அல்லது உண்மையற்ற அரசு என்பதா?

மேனா. உலகநாதன்.
நன்றி : தினமலர் - செய்திமலர்  (நெல்லை)