Thursday, October 7, 2010

தீண்டப்படாத தீண்டாமை ஒழிப்பு!



கடந்த 3.10.10 அன்று பிரசுரமானது

ஒரு வழியாக மாகாத்மா காந்தியின் 141வது பிறந்த தினத்தையும் கொண்டாடித் தீர்த்துவிட்டோம்.
சும்மா சொல்லக்கூடாது.
குளு குளு நடிகைகள் ‘கொஞ்சும் தமிழில்’ பேசும் பேட்டி என்ன, புதிய திரைப்படங்கள் குறித்த வசீகர விமர்சனங்கள் என்ன… இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றின் சிலமாதங்களுக்கு முன்னரே வந்த திரைப்படங்கள் என்ன… என  இப்படிப் பல என்ன என்னக்களோடு, கோவணமும், கைத்தடியுமாய் அலைந்த காந்தியின் பிறந்தநாளை டிஜிட்டல் குவாலிட்டியில் கொண்டாடித் தீர்த்துவிட்டோம்.
இவ்வளவு குதூகல கொண்டாட்ட களேபரங்களுக்கு இடையே, பெரியார் திராவிடர் கழகம் என்ற அமைப்பு திருச்சியில் நடத்திய தீண்டாமை ஒழிப்புப் பிரிவை இழுத்து மூடும் போராட்டம், நம் கவனத்தை ஈர்த்ததுடன், அழுத்தமான கவலைகளையும் ஏற்படுத்தியது.
ஏன்… காமன்வெல்த் ஊழல்களைவிட மோசமாக நம்மை வெட்கித் தலைகுனிய வைத்தது என்று கூடச் சொல்லலாம். காந்தி அடிகள் தன் கடைசி மூச்சுவரை உச்சரித்துக் கொண்டிருந்த இலட்சியச் சொல், தீண்டாமை ஒழிப்பு. நமது கெடுவாய்ப்பு, அது இன்றுவரை இலட்சியமாக மட்டுமே இருந்து வருவதுதான்.
தீண்டாமை எனும் தேசிய அவமானம், இன்னும் நீடிக்கிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகளே குமுறுகிறார்கள்.
 “மாநிலத்தின் அதிகாரத்திலுள்ள தீண்டாமை தடுப்புச் சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை காமன்வெல்த் விளையாட்டுகளுக்கு திருப்பிவிட்டது தவறுஎன்று, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் கொந்தளிக்கிறார்.
ஆனாலும் என்ன? தமிழகம் முழுவதும் இரட்டைக் குவளைமுறை நடைமுறையில் உள்ள கிராமங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. சிற்றூராட்சிகளில், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர், தேர்தலில் ஊராட்சித்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் அந்தப் பதவியில் அமர முடிவதில்லை.
இவையெல்லாம் ஆண்டாண்டுகாலமாக தொடர்ந்து கொண்டு இருப்பவைதானே… என்று கேட்கலாம். அப்படித் தொடர்வதுதான் வேதனைக்குரியது.
ஆனால், அண்மையில் வெளிவந்துள்ள  மற்றொரு தகவல் தீண்டாமையின் மற்றொரு கோரமுகத்தை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
திருச்சியில், ‘வேர்அவுஸ் கல்லறைஎன்று அழைக்கப்படும், கத்தோலிக்கர்களின் கல்லறையில், தீண்டப்படாத மக்களின் பிணங்களை அடக்கம் செய்ய தனி இடம் அமைக்கப்பட்டு, அதனைத் தனியே பிரித்துக் காட்டுவதற்காக குறுக்குச் சுவர் ஒன்றும் எழுப்பப்பட்டுள்ளது வெளி உலகின் கவனத்திற்கு வந்துள்ளது.
பாலக்கரை என்று அழைக்கப்படும் பகுதியில் மேலப்புதூர் பாலம் அருகே இந்தக் கல்லறை அமைந்துள்ளது. திருச்சி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்தக் கல்லறை, பழைய கோயில் என்று அழைக்கப்படும் திருச்சபையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மறைந்த திருச்சி லூர்துசாமி என்பவர் நன்கொடையாக வழங்கிய இடத்தில் அமைந்துள்ள இந்தக் கல்லறைதான், தீண்டாமையை குறுக்குச் சுவர் வடிவத்தில் உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
 உப்புப் பாறை, செங்குளம் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு, மல்லிகைபுரம், ஜெம்ஸ் டவுன், கூனி பசார், காஜாபேட்டை பகுதிகளில் வாழும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களின் பிணங்கள், குறுக்குச் சுவர் அமைக்கப்பட்ட  ஒரு பகுதி கல்லறையிலும், மறுபுறத்தில் உள்ள கல்லறையில், “பழைய கோயில்பகுதி இருதயபுரம், எடத்தெரு வாழும் பகுதிகளில் உயர்சாதியினர் என்று கூறிக் கொள்ளும், கிறிஸ்தவர்களின் பிணங்களும் புதைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இரண்டு கல்லறை களிலும் யேசுவின் புனித சிலுவைச் சின்னம்தான் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டு பிரிவினரும், ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சார்ந்தவர்கள்தான்.
மதமும், கடவுளும் ஒன்றாக இருந்தாலும், சாதியை வேறுபடுத்தும் குரூரம், கிறிஸ்தவர்கள் மத்தியிலும் தொடங்கி இருப்பதுதான் நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
இது குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்திய பெரியார் திராவிட கழகத்தினர், மாவட்டக் காவல்துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவான மனித உரிமைப் பாதுகாப்புபிரிவு அதிகாரியை, கடந்த மார்ச் 14 ஆம் தேதி நேரில் சந்தித்து புகாரும் அளித்துள்ளனர்.
ஆனால், இது தொடர்பாக காவல்துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அப்பிரிவை இழுத்து மூடும் போராட்டத்தில் அந்த அமைப்பினர் நேற்று ஈடுபட்டுள்ளனர். 
 “காவல்துறை நடவடிக்கை ஒரு பக்கம் இருந்தாலும், கிறிஸ்தவ மதக்கோட்பாட்டுக்கு எதிரானதும், சட்டவிரோதமானதுமான இந்தத் தீண்டாமைச் சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,  ரோமன் கத்தோலிக்க மதப் பிரிவுத் தலைவர்களுக்கும் அவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
இந்த தகவலை அறிந்த பின்னர், திருச்சியிலும் ஓர் உத்தபுரமா? அதுவும் கிறிஸ்தவர்களின் கல்லறைத் தோட்டத்தில்… என்ற அதிர்ச்சி நம்மை உறைய வைக்கிறது.
காந்தி ஒருபக்கம் ராமராஜ்ஜியத்தைக் கனவுகண்டாலும், தீண்டாமை ஒழிப்பு என்பது அவரது முக்கிய வேலைத்திட்டங்களில் ஒன்றாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.
அவரது பெயரைச் சொல்லி ஆட்சி நடத்திவரும் காங்கிரஸ் கட்சியினரும், ப.சிதம்பரம் போன்ற அதன் தற்போதைய தலைவர்களும் கூட, தவிர்க்க முடியாமல் அதனை அவ்வப்போது உச்சரித்து வருவதைப் பாரக்க முடிகிறது.
ஆனால், தமிழகத்தில், காமராஜர் (?) ஆட்சி அமைக்கத்துடிக்கும் காங்கிரஸ்காரர்களும் சரி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி நடத்திவருபவரும் திராவிட இயக்கத்தினரும் சரி, தீண்டாமை குறித்து பெரிய அளவில் கவலை கொண்டதாகத் தெரியவில்லை.
பாட்டாளி வர்க்க சர்வதேசியம் தமிழகத்தில் கைகொடுக்கத் தவறிய நிலையில், இடதுசாரிகள் அண்மைக்காலமாக தீண்டாமை ஓழிப்பு முழக்கங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
பெரியார் திராவிட கழகம் போன்ற அமைப்புகள் எப்போதும் போல, தீண்டாமைக்கு எதிரான தங்களது போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.
யார் முன்னெடுத்தாலும் சரிதான். தீண்டாமை எனும் சமூகப் பேரிழிவு ஒழிந்தால் போதும் என்பதுதான், சமூக ஆர்வலர்களின் பெருவிருப்பமும், நிறைவேறாத நெடுங்கனவும் ஆகும்!

மேனா. உலகநாதன்



                                        

No comments:

Post a Comment