'ஹெல்த்சாய்ஸ்' என்ற மருத்துவ மாத இதழுக்காக (நவம்பர்) எழுதப்பட்ட தலையங்கம்.
நமக்குள்ளே…
நமது நாட்டில், 70 சதவீதம் மக்கள், நாளொன்றுக்கு 20 ரூபாய் மட்டுமே வருவாய் உள்ளவர்களாக உயிர் வாழ்ந்து வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
அதே நாட்டில் 7 ஆயிரம் டன் உணவுதானியம், மத்திய அரசின் உணவுக்கழக கிடங்கில் புழுவைத்துக் கெட்டுப்போன நிலையில் கிடக்கிறது என்றால் அதனை என்னவென்று சொல்வது?
மத்திய அரசின் உணவுக் கழக கிடங்கில், கெட்டுப் போய் வீணாகும் பல ஆயிரம் கோடி டன் உணவு தானியங்களை, ஏழைகளுக்கு இலவசமாக வழங்க உத்தரவிடுமாறு, மக்கள் உரிமைக் கழகம், பல ஆண்டுகளுக்கு முன்னர் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், வீணாகும் தானியங்களை ஏன் ஏழைகளுக்கு வழங்கக் கூடாது என கேள்வி எழுப்பினர். அப்படி எல்லாம் வழங்க சட்டம் இடம் கொடுக்காது என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கு கடந்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ‘அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் 67 ஆயிரம் டன் உணவு தானியம் வீணாகி உள்ளது. மத்திய அரசின் உணவுதானியக் கிடங்கில், 7 ஆயிரம் டன் மட்டுமே கெட்டுப் போய் உள்ளது’ என மத்திய அரசு வழக்கறிஞர் பெருமிதம் (?) பொங்கக் கூறியுள்ளார்.
கோபத்தின் உச்சத்துக்கே சென்ற நீதிபதிகள், ‘பட்டினியால் பலர் செத்துக் கொண்டிருக்கும் நாட்டில் 7 ஆயிரம் டன் உணவு தானியம் என்பது உங்களுக்கு அவ்வளவு சாதாரணமாகத் தெரிகிறதா? மாநிலங்கள் கேட்கும் தானியத்தை ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள். வீணாகும் தானியத்தை ஏழைகளுக்கு வழங்க உடனடியாக வழிவகைகளைக் கண்டறியுங்கள்’ என அறிவுறுத்தி உள்ளனர்.
நீதிபதிகளின் கோபம் நியாயமானதுதானே!
பசியும், வறுமையும் மலிந்த நாட்டில், தானியங்கள் கெட்டு வீணாவது குறித்து விவாதம் நடத்திக் கொண்டிருப்பது எத்தனை குரூரம்.
‘ஏழை மனம் கோபப் பட்டால் என்னென்னவோ நடக்கும்’ என்பதை மத்திய அரசு மறந்து விடக் கூடாது.
வறுமை ஒழிப்பில் தனிக்கவனம் செலுத்தப் படுவதாக, மத்திய அரசு தரப்பில் அவ்வப்போது கூறப்படுகிறது.
அதனை உறுதிப் படுத்தும் வகையில், உணவு தானியக் கிடங்குகளில் வீணாகிக் கொண்டிருக்கும் தானியங்களை, ஏழைகளுக்கு எந்த தடையுமின்றி விநியோகிக்க, மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே, சமூக மேம்பாட்டில் அக்கறையுள்ள அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும்.
No comments:
Post a Comment