எண்ணிக் கொண்டிருக்கிறேன்…
-------------------------------------------------------------------------
என் பெயர் அவனுக்கு
மறந்து விட்டது என்றான்
செல்பேசியில்
என் பெயர்ப்பதிவை
அழித்து விட்டதாகவும்
சொன்னான்
கொடுத்த கடனைத்
திரும்பத் தராதவனுக்கு
என்ன நட்பு
வேண்டிக் கிடக்கிறது
புன்னகைகளை
எண்ணிக் கொண்டிருக்கிறேன்
மெல்லிதாய்
இழிப்பாய்
மோனமாய்
கோணலாய்
எண்ணத் தொலையாத
முகங்கள்
ஒற்றுமைப் படுத்தவோ
வேற்றுமைப் படுத்தவோ
முடியவில்லை
வகைப்பாடுகளுக்குள் அடங்காத
மனிதக் குணங்களின் குவியல்
மணலினும் மலிந்த எண்ணிக்கையில்
எண்ண எண்ண சலிப்பூட்டும் முகங்கள்
காணச் சகியாமல் முகம் திருப்பிக் கொள்ளும்
தழுவும் போதே முதுகைப் பதம்பார்க்கும்
நெருங்கும் கைகளை வெடுக்கென உதறும்
ஆனாலும் அந்தப் புன்னகை மட்டும்
இன்னும் அப்படியே…
மேனா. உலகநாதன்
No comments:
Post a Comment