Monday, November 1, 2010

புதிய பதிவு....


தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்…?

த்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் வழக்கம் போல எளிய மக்களுக்கு  எதிரான தன் திருவுளத்தை, மீண்டும் ஒருமுறை திறந்து காட்டி இருக்கிறார்.
அனைவருக்கும் உணவு என்ற இலக்கை அடைய, வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மாதம் 35 கிலோ அரிசி அல்லது  கோதுமையும், மற்றவர்களுக்கு 20 கிலோவும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மலிவு விலையில் வழங்க வேண்டும் என அண்மையில், சோனியாகாந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக்குழு பரிந்துரை செய்தது.
இதன் மூலம், கிராமப்புற, நகர்ப்புற ஏழைகள் அனைவருக்கும் தவறாமல் உணவுகிடைப்பதை உறுதிப்படுத்த முடியும் என நம்பப் பட்டது.
ஆனால்….
உணவுக் கழக கிடங்குகளில் கெட்டு வீணாகும் தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கினால் என்ன என்று உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, அதெப்படி முடியும் எனக் கொதித்தெழுந்த சரத்பவார், தற்போது தேசிய ஆலோசனைக் குழுவின் இந்தப் பரிந்துரைகளையும் புறந்தள்ளி இருக்கிறார்.
தேசிய ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை நிறைவேற்ற, ஆண்டுக்கு 610 லட்சம் டன் தானியம் கொள்முதல் செய்ய வேண்டியது வரும் என்றும், அப்படிச் செய்வது அரசால் சாத்தியமில்லை எனவும் அவர் கூறி இருக்கிறார்.
ஒரு பணக்காரக் கிரிக்கெட் ஆர்வலரிடம், ஏழைகளின் பசி பற்றிய புரிதலை எதிர்பார்ப்பது தவறுதான்.
ஆனால், மத்திய அரசும், மன்மோகன்சிங்கும் அவரிடம் அதை விடாப்பிடியாக எதிர்பார்க்கிறார்களே!
அது ஒரு அரசியல் விளையாட்டு.
எனக்கு இந்தப் பதவி வேண்டாம் என்று சரத்பவார் மிரட்ட, அய்யய்யோ விட்டு விடாதீர்கள் என மன்மோகன் சிங் சமாதானம் செய்ய, அவ்வப்போது அரங்கேறும் அந்த விளையாட்டு, சரத்பவாரின் ஆழமான சுயநலப் பின்னணிகளைக் கொண்டது.
ஆனால் அதற்குப் பலியாவது அரைவயிற்றுக் கஞ்சிக்கு ஆலாய்ப்பறக்கும் ஏழைகள்.
உலகில், மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் போதிய ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காமல் வாழும் ஏழு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்கிறது ஐ. நா வின் உணவுத் திட்ட அமைப்பு.
ஆனாலும் அதற்கான பிரத்தியேகத் திட்டங்களை,  முழு வீச்சில் செயல் படுத்துவது குறித்த அக்கறை நம் தலைவர்களுக்கு இருந்தது இல்லை.
அத்தி பூத்தாற்போல எப்போதாவது இது போன்ற (உணவு உறுதித் திட்டம்) திட்டங்கள் குறித்த பேச்சு எழும்போது, அதற்கு முட்டுக்கட்டை போடவும் தயங்குவது இல்லை.
ஆண்டுக்கு 600 லட்சம் டன் தானியங்களைக் கொள்முதல் செய்வது ஓர் அரசால் சாத்தியமில்லை என சண்டித்தனம் செய்யும் சரத்பவார் போன்றவர்கள், ஒன்றை வசதியாக மறந்து விடுகிறார்கள்.
விவசாயத்திற்கும் அதன் உற்பத்தி சார்ந்த பொருட்களுக்கும் வழங்கப்பட்டு வரும் மானியம் வளர்ந்த நாடுகளில் பல மடங்கு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இந்தியாவில் அது குறைந்து கொண்டே போகிறது என்பதுதான் அது.
வளர்ந்த நாடுகளில் விவசாயத்துக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தின் மதிப்பு,  கடந்த 2007ம் ஆண்டில் 362.2 பில்லியன் டாலராக இருந்தது. (ஒரு பில்லியன் 100 கோடி ரூபாய்). இது 2008ம் ஆண்டில் 379.4 பில்லியன் டாலராகவும், 2009ம் ஆண்டில் 383.7 பில்லியன் டாலராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நிலை என்ன தெரியுமா?
1986 – 88ல் இந்தியாவின் ஒட்டுமொத்த செலவில் 2.3 சதவீதத் தொகை விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்டு வந்தது. இது கடந்த 20 ஆண்டுகளில் ( 2007ம் ஆண்டு)  0.9 சதவீதமாக குறைந்து விட்டது.
கடந்த பத்தாண்டுகளில் விவசாயத்துறையில் நாம் எட்டி இருக்கும் வளர்ச்சி, வெறும் 2.5 சதவீதம் மட்டுமே.
ஆனால் இன்னும் நாம் பெருமிதத்துடன் சொல்லிவருவது ‘இந்தியா ஒரு விவசாய நாடு’.
தொழில்துறை, சேவைத்துறை இவற்றின் வளர்ச்சியில் காட்டிய அக்கறையில்,  சிறிதளவு கூட நாம் விவசாயத்துறையில் காட்டவில்லை என்பதே உண்மை.
தொண்ணூறுகளில் தொற்றிய உலகமயமாக்கல் நோய், நமது தற்சார்பு என்ற உயிர்ச் செல்கள் அனைத்தையும் கொன்றொழித்து விட்டது.
உயிர்த் தொழிலான விவசாயம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
எங்கோ இருக்கும் ஒரு நாட்டின் நிறுவனத்திடமிருந்து, மற்றொரு நாட்டின் நிறுவனத்திற்கு தகவலைப் பெற்றுத் தரும் தொழில் நுட்பம், நமது பொருளாதாரத்தின் ஆதார சுருதியாக சித்தரிக்கப்பட்டது.
5 சதவீதத்தினருக்கும் குறைவானவர்களே பணிபுரிய முடிந்த, தகவல் தொழில் நுட்பத் துறை, அனைவருக்கும் பொதுவானது போன்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டது.
விளைவு…. விவசாயம் ஒரு காலாவதியான தொழில் என்ற சிந்தனை, இன்றைய இளைஞர்களுக்குள் மிக இயல்பாகவும், எளிதாகவும் வேரூன்றி விட்டது.
நவீனச் சுழற்சி தரும் கிறக்கத்தில், உற்பத்தி சார்ந்த தொழில் துறைகளே காலாவதியானவையாகத் தெரியும் போது, விவசாயத்தை அப்படிப் பார்க்கத் தோன்றியதில் ஆச்சரியமில்லை.
பசுமைப் புரட்சி நம் மண்ணை மலடாக்கியது. தகவல் தொழில் நுட்பப் புரட்சி நம் சந்ததியையே உற்பத்தித் திறன் அற்றவர்களாக ஆக்கி வருகிறது.
உற்பத்தித் திறனை இழக்கும் நாடு, விரைவில் தற்சார்பையும் தானாகவே இழக்கும்.
பணக்காரர்கள் எனும் தரகர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அம்பானிகள் இன்னும் பல கண்ணாடி மாளிகைகள் கட்டுவார்கள்.
ஏழைகள் படு ஏழைகளாகி பட்டு மடிவார்கள்.
இதை நோக்கித்தான் நமது இந்தியா இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறது.
ஆனாலும், பசித்துக் கிடக்கும் மனிதர்கள் குறித்த கவலை, ஆட்சியாளர்களை நிம்மதி இழக்கச் செய்கிறது.
தேர்தலில் வாக்களிக்க அவர்கள் உயிருடன் இருக்க வேண்டுமே!
சில நூறு பணக்காரர்களை மட்டுமே வைத்துக் கொண்டு தேர்தல் எனும் நாடகத்தை நடத்த முடியாதே!
அதற்காகத்தான் இந்தப் பசி ஒழிப்புத் திட்டங்கள் எல்லாம். அவற்றைக் கூட சரத்பவார்களால் அனுமதிக்க முடியவில்லை.
ஆனால், பசி எனும் நெருப்பு பற்றி எரியத் தொடங்கினால், அரசும், அதிகாரமும் அதன் முன் ‘வைத்தூரு போலக் கெடும்’ என்பதை இவர்கள் மறந்து விடக் கூடாது.  
மேனா.உலகநாதன்

நன்றி : தினமலர் - செய்திமலர்,  31.10.10 (நெல்லைப் பதிப்பு)

Wednesday, October 27, 2010

புதிய பதிவு....


இனி என்ன செய்யப் போகிறீர்கள்?

இமயமும் குமரியும் நிலைகுலைந்து நிற்கிறது.
காஷ்மீரின் தால் ஏரி குங்குமமாய்ச் சிவந்து கிடக்கிறது.
இளைஞர்களும், பெண்களும் இந்திய ராணுவத்தின் ஒடுக்கு முறைக்கு எதிராக வீசி எறிந்த கற்கள் மலை போல் குவிந்து எழுந்து நிற்கின்றன.
அதன் மேல் நின்று உரத்துக் கூவுவதைப் போல் சொல்லி இருக்கிறார் அருந்ததி ராய்…
‘காஷ்மீர் ஒரு போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது இல்லை. இது ஒரு வரலாற்று உண்மை’
இன்னொரு பக்கம், தமிழக மீனவர்கள் அனைத்து நம்பிக்கையும் வற்றிப்போன நிலையில், சாட்சிக்காரனை விட சண்டைக்காரனே மேல் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள்.
அடுத்த மாதம் 5ம் தேதி, இலங்கை அதிபர் ராஜபக்சேவைச் சந்தித்து, தங்கள் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சிக் கேட்க முடிவு செய்திருக்கிறார்கள்.
அருந்ததிராயின் வார்த்தைகளுக்காக கோபப்படும் நமது தேச பக்தர்கள், மீனவர்களின் இந்த முடிவுக்காக வெட்கப்படவில்லை.
நொடிக்கு ஒரு முறை, இறையாண்மை குறித்து இரைச்சலிடும் இவர்களுக்கு, மீனவர்களின் இந்த நிலை குறித்து எந்தச் சங்கடமும் இல்லை.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்தியாவுக்கு, தமது குடிமக்களில் ஒரு பகுதியினர், பிழைக்க வழி கேட்டு அடுத்த நாட்டு அதிபரை அண்டும் நிலை குறித்து, எந்த அருவருப்பும் இல்லை.
இதுதான் இவர்களின் இறையாண்மை.
ஆஸ்திரேலியாவில் ஒரே ஒரு இந்திய மாணவர் தாக்கப்பட்டாலும், மன்மோகன் சிங், எஸ்.எம், கிருஷ்ணா என அனைவரின் அங்கமும் பதறும்.
அறிக்கைகள் என்ன, கண்டனங்கள் என்ன, நேரில் சென்று பேசுவது என்ன…
எல்லாம் தூள் பறக்கும்.
இலங்கைக் கடற்படைக் காட்டுமிராண்டிகளிடம் பல ஆண்டுகளாக அடிவாங்கி, மிதிவாங்கி வதை படும் மீனவர்கள் பற்றி எந்தக் கவலையும் அவர்களுக்கு இல்லை.  ஏனென்றால் அவன் தமிழன்.
அதன் விளைவுதான், இவர்களைக் கெஞ்சுவதைவிட, ராஜபக்சேவை நேரில் சந்தித்தே கெஞ்சலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள்.  
சரி. இந்த நிகழ்வுகளை மைய அரசு எப்படிப் பார்க்கிறது?
காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை என்ற ‘தேசவிரோத’க் கருத்தைச் சொன்னதற்காக அவர் மீது என்ன வழக்குப் போடலாம் என யோசித்து வருகிறது.
மனச்சாட்சி சொன்னதை வெளியிடும் எழுத்தாளர்களைச் சிறையிலடைக்க வேண்டிய நிலைக்கு இந்த தேசம் தள்ளப்பட்டதை எண்ணிப் பரிதாபப்படுவதாக இது குறித்த கேள்விக்கு அருந்ததிராய் பதில் அளித்துள்ளார்.
ராமேஸ்வரத்திலோ, ராஜபக்சேவைச் சந்திக்க உள்ள மீனவப் பிரதிநிதிகளிடம் உளவுத்துறையினர், விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இறையாண்மை என்பது மக்களிடம் இயல்பாக உருவாக வேண்டிய உணர்வு. அதை அதிகாரத்தால் அச்சுறுத்தி உருவாக்க முடியாது.
காஷ்மீரிலும், ராமேஸ்வரத்திலும் மக்களிடம் ஏற்பட்டுள்ள தன்னெழுச்சி, விடுதலை மற்றும் சுய மரியாதை உணர்வில் இருந்து முகிழ்த்திருப்பது.
இதை வெறும் தேசவிரோதச் சட்டத்தால் மட்டும் ஒடுக்கிவிட முடியாது என்பதை மைய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
எளிய மக்களுக்கு எதிரான கீழறுப்பு வேலைகளை விட்டு விட்டு, கருத்து நேர்மையோடு அணுகும் போதுதான் இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
அது மைய அரசால் சாத்தியமா? அதுவும் காங்கிரஸ் கட்சி தலைமையில் இயங்கி வரும் அரசால்…!
மேனா. உலகநாதன்.  

Friday, October 22, 2010

புதிய பதிவு....

மரபணு மாற்றவிதைகள் : சுகாதாரப் பிரச்சனை மட்டுமல்ல
க்களை ஏமாற்றும் நமது அரசுகளின் மௌடீக நாடகங்களைப் பார்த்தால், திரைப்படங்களில், நகைச்சுவை நடிகர் வடிவேலு அவ்வப்போது சொல்லும் வசனம்தான் நம் நினைவுக்கு வருகிறது.
‘எதுன்னாலும் சொல்லிட்டுச் செய்ங்கப்பா!’
கடந்த 2002ம் ஆண்டிலேயே மரபணு மாற்றப் பருத்தி விதையை மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அனுமதித்த மத்திய அரசு, அண்மையில் கத்திரிக்காயையும், மரபணு மாற்றச் சந்தைச் சுழற்சிக்குள் தள்ளப் பார்த்தது.
எதிர்பாராத தளங்களில் இருந்தெல்லாம் எதிர்ப்புக் கிளம்ப, தற்காலிகமாக மத்திய அரசு அதனைத் தள்ளிப் போட்டது.
ஆனாலும், கத்திரிக்காய்க்கு வந்த ஆபத்து நீங்கி விட்டது என்றெல்லாம் சொல்ல முடியாது. அந்தக் கத்தி இன்னும் இந்திய விவசாயிகளின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில், மரபணு மாற்றப் பயிர்கள் விவகாரத்தில், புதிதாக ஒரு சர்ச்சை இப்போது புறப்பட்டுள்ளது.
அதாவது, மரபணு மாற்றப் பயிர்கள் மூலம் தயாரிக்கப்பட்டு, சந்தைக்கு வரும் பொருட்களின் உறை, அல்லது அட்டைகள் மீது அதற்கான அடையாள முத்திரைகள் (labelling) இடப்பட வேண்டும் என ஒரு கோரிக்கை எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், இந்த முறை அமலுக்கு வந்திருப்பதால் இந்தியாவிலும், மரபணு மாற்றப் பொருட்களை அவற்றுக்கான முத்திரை இட்டு மட்டுமே சந்தையில் அனுமதிக்கும் முறையை, நடைமுறைப் படுத்த வேண்டும் என நுகர்வோர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.    
நுகர்வோருக்குத் தாங்கள் எதை வாங்கிச் சாப்பிடுகிறோம் என்பது தெரிந்திருக்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல; அடிப்படை உரிமையும் கூட.
தகவல் உரிமைச் சட்டம், உணவு உரிமைச்சட்டம், கல்வி உரிமைச் சட்டம் இப்படி நமது உரிமைக்கான சட்டங்களின் வரிசையில், இதனையும் ஒன்றாகச் சேர்த்துக் கொள்ளலாம். உரிமைக்கான சட்டங்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே போனாலும், எதிலும் முழுமையான உரிமைதான் இன்னும் கிடைத்த பாடில்லை என்பது வேறு செய்தி.
அது ஒரு புறம் இருக்க, மரபணு மாற்றப் பொருட்கள் தொடர்பான நுகர்வோர் அமைப்புகளின் இந்தக் கோரிக்கை, நமக்கு இன்னொரு எச்சரிக்கையையும் தருகிறது.
‘மரபணு மாற்ற விதைகள் இந்தியாவில் அறிமுகம் ஆவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. குறைந்த பட்சம் அவற்றின் சந்தைப் படுத்துதலையாவது கட்டுப்படுத்தலாம்’ என்ற முயற்சியின் அறிகுறியாகவே இதனைப் பார்க்க வேண்டி  உள்ளது.
ஆக, மரபணு மாற்றப் பயிர்கள் குறித்து அஞ்சும் நிலையில் இருந்து, அவற்றின் மூலம் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் பற்றிய அச்சமாக அந்த விவகாரம் தற்போது பரிணாமம் அடைந்துள்ளது என்பது மட்டும் புரிகிறது.
இந்தியா வளரும் நாடாயிற்றே... அதுதான் பிரச்சனைகளும் கூட வேகமாகவே வளருகின்றன போலும்!
சரி. இவ்வளவு பெரிய உயிரியல் ரீதியான ஆபத்தை,  மரபணு மாற்ற உணவுப் பொருட்களின் உறை மீது லேபிள் ஒட்டுவதன் மூலம் மட்டுமே எதிர் கொண்டு முறியடித்து விட முடியுமா!
அணுகுண்டு போன்ற பேரழிவு ஆயுதங்களோடு வரும் எதிரிகளுடன், வெறும் கழிகளையும், கத்திகளையும் வைத்துக் கொண்டு சண்டை போடலாம் என்று சொல்வது போல், இருக்கிறது இந்த யோசனை.
பீஸா கார்னர்களில் உண்டு மகிழ்வதன் மூலம், அமெரிக்கா சென்று திரும்பும் மோட்சம் கிடைப்பதாக எண்ணிக்  கிறங்கும் நமது இளைஞர்களா, லேபிள்களைக் கண்டு, அடடே, இது மரபணு மாற்றப் பொருளா... என ஒதுக்கித் தள்ளிவிடப் போகிறார்கள்?
அல்லது அந்தச் சிந்தனைச் செரிவைத்தான் நாம் அவர்களுக்கு ஊட்டி வளர்த்திருக்கிறோமா?
ஆனாலும், ஜனநாயகத்தில் இது போன்ற குறைந்த பட்சத் தீர்வுகளுக்கான முயற்சிகள் தவிர்க்க முடியாதவை என்பதை மறுப்பதற்கில்லை.
இது  ஒருபுறம் இருக்க, கடந்த 2006ம் ஆண்டு, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், மரபணு மாற்றப் பொருட்களின் மீது கட்டாயமாக லேபிள் ஒட்ட வேண்டும் என்று ஓர் உத்தரவைப் பிறப்பித்தது.
1955ம் ஆண்டு உணவுப் பொருள் கலப்படத் தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
மகாராஷ்டிரா மாநிலத்தில், மரபணு மாற்றப் பருத்தியை விவசாயம் செய்ததால், பல லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து மடிந்த அதே நேரத்தல்,  அந்தப் பருத்தியில் இருந்து எடுக்கப்படும் எண்ணை, சமையல் எண்ணையாக இன்றும் பல பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் விபரீத விளைவுகள் ஏதும் நிகழ்ந்ததாக தெரியவில்லை எனினும், மரபணு மாற்றப் பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டது என்ற அடையாளத்தோடு அந்த எண்ணை சந்தைப் படுத்தப்படவில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
உணவுப் பொருள் கலப்படத் தடுப்புச் சட்டத்தின் கீழ், மத்திய சுகாதாரத்துறை பிறப்பித்த உத்தரவு, கறாராக அமல்படுத்தப்பட்டு இருந்தாலே, மான்சான்டோ போன்ற நிறுவனங்கள் இந்தியாவிற்குள் வேரூன்றி இருக்க முடியாது என்கிறார்கள், இயற்கை வேளாண்மை ஆர்வலர்கள்.
மரபணு மாற்ற உணவுப் பொருட்கள் மனித உடலுக்கு ஒவ்வாதவை அல்லது ஆபத்தானவை என இதுவரை ஆய்வு ரீதியாக நிரூபிக்கப் படவில்லை என்ற வாதம் தற்போதும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இருக்கலாம். ஆனால், மரபணு மாற்றப் பயிர்கள் குறித்த நமது பிரச்சனை வெறும் சுகாதாரம் சார்ந்தது அல்ல. மண் சார்ந்தது. தற்சார்பு சார்ந்தது. இறையாண்மை சார்ந்தது.
2015ம் ஆண்டை நூற்றாண்டு இலக்காக (millennium development goals) வைத்து மத்திய அரசு ஆண்டுக்கு நூறுநாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அவை அத்தனையும், விவசாயம் என்ற நாட்டின் ஆதாரத் தொழிலின் மேம்பாடு சார்ந்தவையாகவே உள்ளன.
விவசாயத்தை வளர்த்தெடுப்பதன் மூலம் மட்டுமே, வறுமையை ஒழிக்க முடியும் என அண்மையில் நடத்தப்பட்ட சர்வதேச ஆய்வில் தெரிய வந்துள்ளதாக, அதனை மேற்கொண்ட உலக வங்கிக் குழு தெரிவித்துள்ளது.
விவசாயத்தின் முக்கியத்துவத்தை உலகம் உணரத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில், நமது மண்வளத்தயும், மரபார்ந்த விதைகளின் வளத்தையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மரபணு மாற்று விதைகள் விவகாரத்தை இந்த அடிப்படையில் மட்டுமே மத்திய அரசு அணுக வேண்டும்.
நாட்டின் எதிர்காலம் தொடர்பான அனைத்து அம்சங்களையும், அடியோடு நாசம் செய்யக்கூடியது என அஞ்சப்படும் மரபணு மாற்றப் பொருட்களை, லேபிள் ஒட்டி விற்பனை செய்வதை விட, அடியோடு மறுதலிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
மேனா. உலகநாதன்
நன்றி – தினமலர் செய்திமலர்(நெல்லை), 24.10.2010.