Tuesday, February 22, 2011


நன்றாகவே….

சில மௌனங்கள்
பல புறக்கணிப்புகள்

பாடம் நடத்தியபடியே
நகர்கிறது காலம்.

இலையுதிர்கால மரத்தில் இருந்து
உதிரும் உயிர்த்துளி
வெள்ளமெனப் பெருகிப் பரவ
துளிர்க்கும்
பசித்த மானுடம்

வசந்தம் சூல்கொள்ளும்
பூக்களின் தேன் துளி
விஷமெனக்
கரைந்து கொல்லும்
விதி எனும்
கற்பிதத்தை

வீழும்போதே எழும் எமது வீறுதனில்
மோதிச்சிதறும் அவர்தம் உன்மத்தம்

எது நடந்ததோ
அது
நன்றாகவே நடந்தது.

மேனா. உலகநாதன்

Thursday, February 17, 2011

ஊழலை ஒழிப்பது எப்படி?


ழலை ஒழிப்பது எப்படி?
மணிமேகலைப் பிரசுரம் வெளியிடும் புத்தகத்தின் தலைப்பைப் போல் இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா?
ஊழலுக்கு எதிராக தற்போது எழுந்துவரும் குரல்கள், வலிமையான அரசியல் அடித்தளத்துடன் கிளர்ந்தெழ வேண்டிய அந்த போராட்டத்தை, இப்படித்தான் மலினப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
ஆனால், அறுபது ஆண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றில், அனைத்து அடித்தட்டு குடிமக்களின், அடிமனதில் ஓயாத அலையாக எழும்பி, எழும்பி ஓயும் இந்தக் கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை என்பதே உண்மை.
நேருகாலத்தில் நாட்டையே கலக்கிய முந்திரா ஊழல் தொடங்கி, தற்போதைய 2ஜி அலைக்கற்றை, மற்றும் இஸ்ரோ ஊழல் வரை அடி, முடி காண முடியாத மர்ம முடிச்சுகளுடன், ஊழல் எனும் அந்த விசித்திர மிருகம், வெற்றிகரமாக தனது பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.
வலிமை வாய்ந்த ஜனநாயகத்தால் ஏன் இந்த மிருகத்தை வீழ்த்த முடியவில்லை?
ஊழல் எனும் பெருங்குற்றத்தை, அரசியல் கட்சிகள் எப்படியெல்லாம், தங்களது எதிரிகளைப் பழிவாங்குவதற்கான சந்தர்ப்ப ஆயுதமாக பயன்படுத்தி வந்திருக்கின்றன என்பதை கூர்ந்து கவனித்தால், இந்த வரலாற்றுத் தோல்விக்கான காரணம் புரியும்.
அதற்கு, நமது தமிழக அரசியலைச் சற்று பின்னோக்கிப் பார்த்தாலே போதும்.
அண்ணாவுக்குப் பின்னர் முதலமைச்சர் பதவியை ஏற்ற கருணாநிதி மீது, பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்றது. விஞ்ஞான ரீதியாக கருணாநிதி ஊழல் புரிந்துள்ளார் என அந்த கமிஷன் கூறியதாக பரபரப்பாக பேசப்பட்டது. (இப்போது விஞ்ஞானிகளே ஊழல் புரிவதை (இஸ்ரோ), எப்படி விமர்சிப்பது? அரசியல் ரீதியாக ஊழல் புரிந்துள்ளார்கள் எனலாமா?)
திமுக மற்றும் அதன் தலைவர் கருணாநிதி மீதான இந்த குற்றச்சாட்டு 1977 பொதுத்தேர்தல் களத்தில், அதிமுக அணிக்கு வசதியான ஆயுதமாக மாறியது. திமுகவைத் தோற்கடிக்கவும் இந்த ஆயுதம் ஓரளவுக்கு பயன்பட்டது.
எம்ஜிஆர் மறைந்ததை அடுத்து, ஏறத்தாழ 13 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போதும் பல்வேறு காரணங்களுக்காக அந்த ஆட்சி கலைக்கப்பட்டது.
1991ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார்.  ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, அமோக வெற்றி பெற்று அரியணை ஏறியது. அரசு நிர்வாகத்தில் அதுவரை இலை மறைவு காய் மறைவாக இருந்த ஊழல், வெளிப்படையான பரிவர்த்தனையாக மாறியது. ஊழலின் கரங்கள் சுடுகாடு வரை நீண்டன.
1996ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக ஆட்சியின் இந்த வெளிப்படையான ஊழல், திமுகவின் கையில் ஆயுதமாக மாறிச் சுழன்றது. மூப்பனார் தலைமையிலான த.மா.கா வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட திமுக, அந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. ஜெயலலிதா மீது ஊழல் வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்கு என பல வழக்குகள் தொடரப்பட்டன. அவர் கைதும் செய்யப்பட்டார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கரன்சிகளை ஆற்றிலும், குளத்திலும் கொட்டி எரித்த காட்சிகள் எல்லாம் அப்போது அரங்கேறின.
2001ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தது. இந்த முறை ஊழலை விட, எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற ஜெயலலிதாவின் எதேச்சதிகாரப் போக்கே அவருக்கு எதிரியானது. இதனால் 2006 ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு சுலபமானது.
தற்போது மீண்டும் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு வசதியாக ஸ்பெக்ட்ரம் ஊழல் எனும் ஆயுதம் அதிமுகவுக்கு கிடைத்துள்ளது. நிச்சயமாக, இந்த தேர்தலில், எதிர்க்கட்சியினரின் முக்கியப் பாடு பொருளாக ஸ்பெக்ட்ரம் ஊழல் இருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
இப்போதே அதிமுகவினரும், அந்த அணிக்கு ஆதரவாக சில அறிவு ஜீவிகளும், ஊழலுக்கு எதிரான தங்களது குரலை உரத்து எழுப்பத் தொடங்கி உள்ளனர். ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு ஊழல் எதிர்ப்புச் சங்கை ஊதத் தொடங்கி உள்ளன.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டால், ஊழல் ஒழிந்துவிடும் என்று, ஓங்கி, உரத்துச் சொல்லத் தொடங்கி உள்ளனர்.
அப்படியே வைத்துக் கொள்வோம். இதற்கு முன்னர் அப்படி நடந்திருக்கிறதா?
மத்தியிலும், மாநிலத்திலும் இந்த அறுபது ஆண்டுகளில் ஏற்படாத ஆட்சி மாற்றமா?
ஏன் ஊழல் ஒழியவில்லை.
ஊழலை நியாயப்படுத்துவதற்காகவோ, எவரையும் ஆதரிப்பதற்காகவோ  இந்தக் கேள்வியை எழுப்பவில்லை.
பொருளாதாரச் சீர் கேடு என்ற அரசியல் சமூகப் பெருநோயின் வெறும் அறிகுறி மட்டுமே ஊழல் எனும் வெளிப்பாடு. அதுவே மூல நோயல்ல. ஊழலை ஒழிக்கிறேன் பேர்வழி என்று, விஜயகாந்தைப் போல வீராவேசத்தோடு புறப்பட்ட பலர், அந்த மகாநதிக்குள் கரைந்து போகும் மர்மமும் கூட இதுதான்.
குறிப்பிட்ட ஒருவரிடமே பணம் குவிவதற்கான வாய்ப்பு…. பெரும் பரிவர்த்தனையும், லாபமும் ஈட்டக்கூடிய தொழில்கள் அனைத்தையும், பன்னாட்டு, உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கு பங்குபோட்டுக் கொடுப்பது… அவற்றில் மக்களுக்கு இருக்கும் பொருளாதார உரிமையை அடியோடு மறுக்கும் முதலாளித்துவத்தின் சூட்சுமமான கட்டமைப்பை வலிமைப் படுத்த உதவும் அரசியல் வாதிகள்…
இப்படி, நம் புலன்களுக்கு எட்டாத நுண்தளங்களில் இருந்து ஊற்றெடுக்கும் ஊழலின் பிரவாகத்தை, வெற்றுக் கூச்சல்களால் அணைபோட்டுத் தடுத்து விட முடியாது.
பின் எப்படித்தான் தடுப்பது?
அதனைத் தடுக்க, ஆட்சி மாற்றத்துக்குப் பதிலாக அரசியல் மாற்றம் தேவை.
இன்றைய இளையதலைமுறைக்கு அரசியல் பிடிப்பதில்லை. பிடித்துவிடக் கூடாது என்பதில், கல்வி வியாபாரிகள் முதல், ஊடகங்கள் வரை கவனமாக இருக்கின்றன. முதலாளித்துவம் ஊழலுக்கான சூட்சும வலையை இங்கிருந்துதான் பின்னத் தொடங்குகிறது.
இந்த அரசியல் தீண்டாமை உணர்வுதான், ஊழலின் ஆழமான ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. அரசியல் என்றால், அதிமுகவும், திமுகவும் மட்டுமல்ல என்ற உண்மையை ஊடகங்கள் வசதியாக மறைத்துவிடுகின்றன.
அரசியல் அகற்றப்பட்ட சமூகம் பண்படுத்தப்படாத களர் நிலைத்தைப் போல. அனைத்துச் சீர்கேடுகளும் தங்கு தடையின்றி புதர்களைப் போல மண்டிப் பெருகும்.
இந்தியாவில் தனியார் மயமும், தாரளமயமும் அறிமுகப்படுத்தப்பட்டு 18 ஆண்டுகள் ஆகின்றன. இந்த பதினெட்டு ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்றுள்ள ஊழல் பரிவர்த்தனையின் மொத்த தொகை 73 லட்சம் கோடி என்று, பெருமுதலாளிகளை ஆதரிக்கும் சில ஊடகங்களும், பத்திரிகைகளுமே சொல்கின்றன.
இதைப் புரிந்து கொள்ள, இன்றைய இளைஞர்களுக்கு உண்மையான அரசியல் அறிவு தேவை.
தனியார் நிறுவனங்கள் கையில் பெருந்தொழில்கள் ஒப்படைக்கப்பட்டால், நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் நடைபெறும் என பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் அது இப்போது பொய்யாகி இருக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகள் மலிவான விலையில் ஒதுக்கப்பட்ட நடவடிக்கை ரகசியமாகவே அரங்கேறி இருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கூட, நாம் இந்த உண்மயைத் தெரிந்து கொள்ள முடியாது. பிரச்சனை என வந்த பிறகு, பெரு முதலாளிகளின் தந்திரங்கள் அனைத்தும் அம்பலமாகின்றன.
இதில், ஆ.ராசா உள்ளிட்ட அனைவருமே அரசியல் கூலிகள். ரயில்வே நிலையத்தில் சுமைதூக்குவதற்கு உரிமம் பெற்ற போர்ட்டர்களைப் போல, மக்களின் உடைமைகளை முதலாளிகளுக்கு தாரைவார்க்க ஆட்சி அதிகாரம் என்ற உரிமத்தைப் பெற்றிருப்பவர்கள். அவ்வளவுதான்.
இதனைப் புரிந்து கொள்ள அரசியல் அறிவு தேவை.
அது இப்போது இளைஞர்களிடம் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வெற்றிடமும், மூடத்தனமும்தான், நாட்டின் ஒட்டு மொத்த சொத்தையும் கொள்ளையடிக்கும் அளவுக்கு பெருமுதலாளிகளுக்கு துணிச்சலைத் தந்துள்ளது.
ஆட்சி மாற்றங்களால் ஊழலை ஒழித்து விடலாம் என்று உரத்துப் பேசுபவர்களின் உள்நோக்கம், ஊழலை ஒழிப்பதல்ல. மக்களைச் சுரண்டுவதற்கான உரிமையை, தேர்தல் மூலம், அடுத்த முறை தாங்கள் பெறுவது மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஊழலை ஒழிக்க ஆட்சி மாற்றம் மட்டுமே போதாது. அடிப்படையான அரசியல், சமூக, பொருளாதார அமைப்பில், அணுகுமுறையில் மாற்றம் தேவை என்ற உண்மையை, கருத்து நேர்மையும், அறிவு நாணயமும் உள்ள அனைவரும் உரத்துச் சொல்ல வேண்டிய தருணம் இது.
மேனா.உலகநாதன்

20.2.11, தினமலர் - செய்திமலர் (நெல்லைப்பதிப்பு)

Wednesday, February 9, 2011


அவர்கள் காத்திருக்கிறார்கள்!

“ஆவீன மழைபொழிய இல்லம்வீழ..!
அகத்தடியாள் மெய்நோவ‌ அடிமை சாக..!
மாவீர‌ம் போகுதென்று விதைகொண்டோட‌..!
வ‌ழியிலே க‌ட‌ன்கார‌ன் ம‌றித்துக் கொள்ள..!
சாவோலை கொண்டொருவ‌ன் எதிரே தோன்ற‌..!
த‌ள்ள‌வொணா விருந்துவ‌ர‌ ச‌ர்ப்பந்தீண்ட..!
கோவேந்த‌ர் உழுதுண்ட‌ க‌ட‌மை கேட்க‌..!
குருக்க‌ள் வ‌ந்து த‌ட்ச‌ணைக‌ள் கொடு என்றாரே..!!!”

உழுதுண்டு வாழ்பவனின் அன்றாட வாழ்க்கை நெருக்கடியை, சித்தரிக்கும் விவேகசிந்தாமணி என்ற பழந்தமிழ் நூல் பாடல் வரிகள்தான் இவை.
சம்சாரி என்றும் குடியானவன் என்றும் அந்நாட்களில் அழைக்கப்பட்ட ஏழை விவசாயி ஒருவனுக்கு, ஒரே நேரத்தில் நேரும் துயரங்கள்தான் எத்தனை?

‘மாடு கன்று போடுகிறது. அடை மழையோ கொட்டுகிறது. அந்த மழையால், குடியிருந்த வீடும் இடிந்து விழுகிறது. மனைவி திடீரென நோய்வாய்ப்படுகிறாள். உதவிக்கு இருந்த வேலையாளும் திடீரென இறந்து போகிறான். இத்தனை நெருக்கடிக்கு இடையேயும், மழை பெய்த ஈரம் காயுமுன்னே விதைத்துவிட வேண்டும் என்ற பதற்றத்துடன், விதையை எடுத்துக் கொண்டு வயலுக்கு ஓடுகிறான் அந்த விவசாயி. வழியிலே கடன்காரன் வந்து மறித்துக் கொள்கிறான். அதோடு முடிந்தததா? நெருங்கிய உறவினர் இறந்து விட்டதாக ஒருவன் சாவோலையோடு எதிர்வருகிறான். சரி. இவர்களையெல்லாம் சமாளித்து அங்கிருந்து அவன் நகரும்போது தவிர்க்க முடியாத விருந்தினர் வருகின்றார். அவரை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனால், மகனைப் பாம்பு கடித்து விடுகிறது. அரசன் வரிகேட்டு ஆள் அனுப்பி இருக்கிறான்.  அந்நேரம் பார்த்து ஏற்கனவே செய்த சடங்குகளுக்கு தட்சணை கேட்டு குருக்கள் வந்து நிற்கின்றார்….’

துயரத்தை பட்டியலிட்ட நமக்கே மூச்சுவாங்கும் பொழுது அனுபவித்தவன் பாடு எப்படி இருந்திருக்கும்…?

விவசாயி என்பவனின் நிலை பல நூற்றாண்டுகளாகவே இப்படித்தான் இருந்து வருகிறது என்பதை, இந்த பழம்பாடல் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

காலம் முடியாட்சி முறையில் இருந்து, குடியாட்சிக்கு மாறிவிட்டது.  அரசுகளும் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன. விவசாய வளர்ச்சிக்கென திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆனாலும், சாரசரி இந்திய விவசாயியின் வாழ்க்கைத் தரத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டு விடவில்லை.

இந்தியா ஒரு விவசாய நாடு என்ற முழக்கத்தை நமது தலைவர்கள் இன்னும் கூட  முற்றாக நிறுத்தி விடவில்லைதான். காரணம் கணிசமான வாக்கு வங்கி கிராமப்புற விவசாயிகளின் கையில் தான் இருக்கிறது. விவசாயிகளின் தற்கொலை குறித்து அவ்வப்போது அவர்கள் கொள்ளும் கவலையும் கூட, நமக்கு ஒரு வாக்கு குறைகிறதே என்ற அடிப்படையில் மட்டுமே அன்றி அக்கறையில் அல்ல.

இது வரை ஏறத்தாழ 78 மத்திய நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில தினங்களில் மத்திய அரசின் அடுத்த நிதி நிலை அறிக்கையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

இந்த நிதிநிலை அறிக்கை குறித்து பெருந்தொழிலதிபர்களோடு நிதியமைச்சர் பிரணாப் ஆலோசிக்கிறார். பன்னாட்டு நிறுவனங்களோடு ஆலோசிக்கிறார். பெரு முதலாளிகளோடு ஆலோசிக்கிறார். எதிர்க்கட்சிகளோடும் கூட வேறு வழியில்லாமல் ஆலோசிக்கிறார்.
ஆனால்… 80 சதவீத மக்களின் வாழ்வாதாரமான  விவசாயம் தொடர்பான நிதி நிலை அம்சங்கள் குறித்து யாரோடும் ஆலோசித்ததாக தெரியவில்லை. அதுதான் மொத்தமாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்களே என்று கேட்கலாம்.

மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் கூடத் தேறாத பெருமுதலாளிகள் பாதித்து விடக் கூடாது என்பதற்காகத்தானே அவர்களின் விருப்பத்தைக் கேட்டறிகிறார்கள்.

பெருமுதலாளிகளின் பெருவிருப்பத்தைக் கேட்டறியும் ஆளும் தரப்பு, அன்றாடம் சீரழிந்துவரும் விவசாயிகளின் சிறு விருப்பங்களையேனும் கேட்டறியலாம் தானே…?

இந்த பட்ஜெட்டில் இடம்பெற உள்ள தொழில் துறைக்கான வரிச் சலுகைகள், பன்னாட்டு உள்நாட்டு பெரு நிறுவனங்களுக்கான சலுகைகள் குறித்தெல்லாம், சில உயர்தர (மேல்தட்டினருக்கான) ஆங்கில வணிக நாளேடுகளில் பக்கம் பக்கமாக யூகங்கள் வெளியிடப்படுகின்றன. அவை யூகங்கள் என்பதை விட, பெருமுதலாளிகள் அரசுக்கு இடும் மறைமுக கட்டளைகள் என்று கூட சொல்லலாம்.

ஆனால் விவசாயிகள் குறித்து அவை போன்ற ஏடுகள் மூச்சுக்கூட விடுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை விவசாயமும், விவசாயிகளும் பொருளாதாரத் தொல்லைகள். எப்படியோ அவர்கள் ஒழிந்தால் சரிதான். (தற்கொலை செய்துகொண்டாவது!)

எனினும், கேட்பாரற்று தடுமாறும் விவசாயிகள் நலம் குறித்து சிந்திக்கும் சில சமூக ஆர்வலர்கள், விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2011ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், விவசாய வளர்ச்சிக்கான சில அம்சங்கள்  இடம்பெற வேண்டும் எனவலியுறுத்தி வருகின்றனர். அவை இதுவரை இல்லாத புதிய அணுகுமுறைகைக் கொண்டவையாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் சொல்வதுதான் என்ன?

‘விவசாயத்தை வளர்க்க இந்த 60 ஆண்டுகளில் போடாத திட்டங்கள் எதுவும் இல்லை. அவை எல்லாம் விவசாயிகளுக்குப் போய்ச் சேர்கின்றனவா என்பதை முதலில் உறுதிப் படுத்த வேண்டும். உற்பத்தியைப் பெருக்க மானியக் கடன். வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு. பயிர்க்காப்பீட்டுத் திட்டங்கள். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு. வறுமையை ஒழிக்க வேலை உறுதித் திட்டம். இப்படி பல திட்டங்கள் செயல்படுத்தப் பட்டாலும், விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை’ என்கிறார்கள் அவர்கள்.

விவசாயிகளின் தேவைதான் என்ன? என்ற கேள்விக்கும் அவர்கள் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

‘விவசாயிகள் பிச்சைக்காரர்கள் அல்ல. சமூகத்தின் மற்ற எந்தப் பிரிவினரைக் காட்டிலும், சுயமரியாதையோடும், உழைப்பைச் சார்ந்தும் வாழக் கூடியவர்கள். அவர்களுக்கு தேவை தள்ளுபடிகளும், இலவசங்களும் மட்டும் அல்ல. அவை பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வும் அல்ல. நவீன மாற்றங்களின் தாக்கத்தால் விவசாயத்தில் ஏற்படும் புதிய சவால்களை சந்திக்க அரசு அவர்களுக்கு உதவ வேண்டும். உதாரணமாக, உற்பத்தியைப் பெருக்க திட்டம் என்பது காலாவதியாகிப் போன பழைய உத்தியாகி விட்டது. இப்போது சந்தை முக்கியப் பிரச்சனையாகி விட்டது. அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான சந்தை எது என்பதே தற்போதைய பிரச்சனை. இந்த பிரச்சனைக்கு அரசிடம் உள்ள தீர்வு என்ன? உற்பத்திக்கு உரிய விலை அதற்கான சந்தையில் தான் கிடைக்கும். இந்த சந்தையைத் தீர்மானிப்பதிலும், உருவாக்குவதிலும் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.

வியாபாரிகள் என்ற போர்வையில் விவசாயிகளின் உற்பத்திக்கான லாபத்தை உறிஞ்சும் இடைத் தரகர்களை ஒழிக்க வேண்டும். அரசு உருவாக்கும் லாப நோக்கமற்ற கொள்முதல் நிலையங்கள், தானியங்களை பதப்படுத்தி பாதுகாக்கும் வசதிகளோடு அமைய வேண்டும். நகர்ப்புற மக்கள் உள்ளிட்ட பொதுமக்களின் ஒட்டுமொத்த தேவை, உற்பத்தி, தடையற்ற விநியோகம் இந்த மூன்றுக்கும் இடையில் ஒழிவு மறைவற்ற பரிவரத்தனைச் சங்கிலித் தொடரை உருவாக்க வேண்டும். இது அரசால் மட்டுமே முடியும். பன்னாட்டு அல்லது உள்நாட்டு தனியார் நிறுவனங்களிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் அதன் பலன் விவசாயிகளைச் சென்றடையாது. (உதாரணம் - தற்போது உள்ள ரிலையன்ஸ் பிரஷ் உள்ளிட்ட மெகா ஸ்டோர்கள்)

அரசு கொள்முதல் நிலையங்கள் இப்போதும் உள்ளன. காலக்கட்டுப்பாடு, தரக்கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு தடைகளால் விவசாயிகள் பெரும்பாலும் இழப்பையே சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த தடைகள் நீக்கப்பட வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் வசதிக்காக நகர்ப்புறங்களில் மேற்கொள்ளப்படும் நவீனக் கட்டமைப்பு வசதிகளுக்கு செய்யும் செலவில், பத்து சதவீதம் கிராமப்புற கட்டமைப்புகளையும், கொள்முதல் நிலையங்களையும் நவீனப்படுத்த செலவிட்டாலே, விவசாயிகளின் 90 சதவீதப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்.

உற்பத்தி – உரிய விலை – தடையற்ற விநியோகம் என்ற பரிவர்த்தனை உத்தியை வலிமைப் படுத்துவதன் மூலம் மட்டுமே விவசாயத்தை ஒரு கௌரவ மிக்க தொழிலாக வளர்த்தெடுக்க முடியும். எவரும் தயங்காமல் நான் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் நிலை உருவாகும். வரும் மத்திய நிதி நிலை அறிக்கையில், விவசாயத்திற்கான திட்டங்கள் இதனை அடிப்படையாக கொண்டு தீட்டப்பட வேண்டும். மொத்தத்தில், கிராமப்புறங்களை வளப்படுத்தும் விவசாயம் சார்ந்த திட்டங்களில், வெறும் வறுமை ஒழிப்பு என்பதில் இருந்து அடுத்த கட்டத்தை நோக்கி, அரசின் அணுகுமுறை எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதன் மூலம் மட்டுமே, விவசாயம் மற்றும் விவசாயிகள் சார்ந்த நெடுங்காலப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும்.’

விவசாயம் மற்றும் விவசாயிகள் குறித்து கவலை கொள்ளும் மிகச்சில சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ள இந்த கருத்துகளை நமது மத்திய அரசு கவனத்தில் கொள்ளுமா? 2011ம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் அதற்கான திட்டங்கள் இடம்பெறுமா?

60 ஆண்டுகளுக்குப் பின்னரும், இந்த அரசு மீது நம்பிக்கை வைத்துக் காத்திருக்கிறார்கள் இந்திய விவசாயிகள்.
மேனா.உலகநாதன்

13.2.2011, தினமலர் செய்திமலர் (நெல்லைப் பதிப்பு).

Thursday, February 3, 2011

என்ன குற்றம் செய்தார்கள்?



நான் அப்போது நிறைமாத கர்ப்பிணி. மனிதக் கழிவுகளை அகற்றிக்கொண்டிருக்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டேன். அப்போது எவ்வளவு கதறியும் என்னை கை கொடுத்துத் தூக்க யாரும் முன்வரவில்லை. கழிவோடு கழிவாக புறக்கணிக்கப் பட்டேன். பொதுவாக எங்களைப் பார்த்தாலே மூக்கைப் பொத்திக் கொண்டு, இரண்டு கைகளையும் ஆட்டி போ, போ என்று கூறி விரட்டுகிறார்கள்’

அனிதா, பஞ்சாப் மாநிலம்.

‘நான் பள்ளியில் படித்த போது என்னை மட்டும் வேறு தட்டு மற்றும் குவளை எடுத்துவரச் சொல்லி விரட்டுவார்கள். கேட்டால் என் தாயார் மனிதக் கழிவுகளை அகற்றும் வேலை பார்த்துவருகிறாராம். இன்று வரை பள்ளிகளில் என் போன்ற குழந்தைகளுக்கு இந்த கொடுமை தொடர்கிறது. எங்கள் பிள்ளைகள் ஏன் பெரிய படிப்பு படிக்க முடியவில்லை. கலெக்டர் ஆக முடியவில்லை….’

உமையாள், தமிழ்நாடு.

டெல்லியில் சஃபாய் கர்மாச்சாரி அந்தோலன் (Safai Karmachari Andolan) என்ற அமைப்பு சார்பில், சில மாதங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்ட பெண்களிடமிருந்து பீறிட்ட, ஆயிரமாண்டுகால ரணத்தின் ரத்தம் தோய்ந்த வார்த்தைகள்தான் இவை.

இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள்?

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மனிதக்கழிவுகளை கையினால் அள்ளும் துப்புறவுப் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள். அதில், தமிழகத்தில் இருந்து உமையாள் என்ற தமிழ்ப்பெண்ணும் கலந்து கொண்டிருக்கிறார்.

‘சுதந்திரம் கிடைத்துவிட்டதாக சொல்லுகிறீர்களே… எங்களுக்கு மட்டும் அது இல்லையா? குறைந்த பட்சம் மனிதர்களாக கூட எங்களை இங்கே யாரும் மதிக்க மறுக்கிறார்களே? வீடுகளுக்குள் மட்டும் அல்ல. பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் இப்படி எங்குமே நாங்கள் மனிதர்களாக நுழைய முடியவில்லையே…மலம் அள்ள மட்டும் தானே எங்களை அனுமதிக்கிறார்கள்? ஏன்? நாங்கள் என்ன குற்றம் செய்தோம்?’

அந்த பேரணியில் கலந்து கொண்ட ஒவ்வொரு பெண்களும் அவரவருக்குத் தெரிந்த மொழியில் எழுப்பிய இந்த கேள்வி, இந்திய ஆன்மாவின் சிண்டைப் பிடித்து உலுக்குவதாக இருந்தது.

அந்த பேரணியில் அவர்கள் முன்வைத்த முழக்கம் என்ன தெரியுமா?

‘எங்களை சுயமரியாதை இன்றி நடத்திய அரசே மன்னிப்பு கேள்… மன்னிப்பு  கேள்’

மன்னிக்கக் கூடிய கொடுமையையா இந்த நாடும் சமூகமும் அவர்களுக்குச் செய்திருக்கிறது. ஆனாலும் அவர்கள் மன்னிக்கத் தயாராக இருக்கிறார்கள்.

மத்திய அரசு இப்போது குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது.

ஏன்?

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலத்தைத் தடுக்கும் வகையில், கடந்த 1993ம் ஆண்டிலேயே, உலர் கழிப்பறைகள் தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இன்று வரை அந்த சட்டம் அனைத்து மாநிலங்களிலும் முழுமையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை. அது மட்டுமல்ல.

மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் வழக்கம் அதிக அளவு நடைமுறையில் இருப்பது மத்திய அரசின் பொறுப்பில் இருக்கும் ரயில்வே துறையில்தான்.

மற்றபடி மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் இப்படி அரசின் அனைத்து அதிகார மட்டத்திலும், இந்த இழிவு இன்றுவரை முழுமையாக நிறுத்தப்படாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இது தொடர்பாக தொண்டு நிறுவனம் ஒன்று, சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உலர் கழிப்பறைகள் அமைக்கத் தடைவிதிக்கப் பட்டிருந்தும் பல இடங்களில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களிலேயே அவை அமைக்கப்பட்டிருப்பதை அந்த மனு சுட்டிக்காட்டியது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், தமிழகத்தில் மனிதக் கழிவுகளை கையினால் அகற்றும் பணியில் யாரையும் ஈடுபடுத்தக் கூடாது என அப்போது தடைவிதித்தது. 

மேலும், இது தொடர்பாக ஒரு குழுவை அமைத்து, கையினால் மனிதக் கழிவுகளை அள்ளும் வழக்கத்தை ஒழிப்பதுடன், அந்த தொழிலாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்கு வது குறித்தும் அவ்வப்போது ஆலோசிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை எனக் கூறி, அந்த தொண்டு நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கு கடந்த வாரம் திங்கள் கிழமை (31.1. 11) சென்னை உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி எம். ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை தடை செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்துமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். அப்போது தமிழக அரசு சார்பில், மத்திய அரசுக்கு இது தொடர்பாக  கடந்த மாதம் 25ம் தேதி எழுதிய கடிதத்தின் நகல் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

எப்படியோ, விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு, இது தொடர்பான சட்டத் திருத்தத்திற்கு வகை செய்யுமாறு அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதி மன்றம் தன் பங்குக்கு மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிவை ஒழிக்க முடிந்தவரை முயற்சித்திருப்பதை மறுப்பதற்கில்லை.

சட்டம் ஒழுங்கு குறித்து சதா கவலை கொள்ளும் நமது அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும், இது போன்ற சட்டங்களுக்கு குறைந்த பட்ச மதிப்பைக் கூட கொடுப்பதில்லை என்பதுதான் இதில் வேதனை.

அரசியல் சட்டத்தையோ, அதனை உருவாக்கிய அம்பேத்காரையோ மதித்திருந்தால், இன்று வரை இந்த பழக்கம் தொடர அனுமதித்திருப்பார்களா? அவர்ளைப் பொறுத்தவரை, சட்டம் ஒழுங்கு என்பது ஆளும்கட்சியாக இருக்கும் போது அதிகாரம் செலுத்தவும், எதிர்க்கட்சியாக இருக்கும்  போது பழி சுமத்தவும் மட்டுமே பயன்படும் வசதியான ஆயுதம்.

மற்றபடி எளிய மக்களின் உரிமைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட எந்த சட்டத்தையும் இவர்கள் மதிப்பதே இல்லை. அதன் விளைவுதான் தீண்டாமைக் கொடுமை தடை செய்யப்பட்டு 60 ஆண்டுகள் ஆகியும், இதுவரை அது தொடர்ந்து கொண்டிருப்பது. அதன் மிக அருவருக்கத்தக்க மற்றொரு முகம்தான், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பது.

அந்த சமூகத்தில் பிறந்ததைத் தவிர அந்த பரிதாபத்துக்குரியவர்கள் செய்த குற்றம்தான் என்ன?

மனித இனத்தின் நாகரிகம் குறித்து பெருமிதம் கொள்ளும் ஒவ்வொருவரது மனச்சாட்சியையும் பிடித்து உலுக்கும் இந்த கேள்விக்கு நாம் சொல்லப் போகும் பதிலும்தான் என்ன?

மேனா. உலகநாதன் 

6.2.11, தினமலர் - செய்திமலர் (நெல்லைப் பதிப்பு)

Monday, January 24, 2011

(23.1.11 தினமலர் செய்திமலரில் பிரசுரமான கட்டுரை)
 நிலை குலைக்கும் விலை உயர்வு…

ந்த மாதத்தில்மட்டும் இரண்டாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்த்திக்கொள்ளும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைக்கப்பட்ட பின்னர் இது எட்டாவது முறை.

ஏற்கனவே வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களின் விலை தாறுமாறாக எகிறி, விண்ணைத் தொட்டுத்தொட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குப் பின்னர் இனி கேட்க வேண்டாம். ஏறுமுகம்தான்.  

விலை உயர்வு என்பது ஏதோ ஒரு விதத்தில் கட்டுப்படுத்த முடியாத முரட்டுக் காளையாய், அரசுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்துகிறது. அது அரசே முன்னின்று நடத்தும் ஜல்லிக்கட்டாகவும் இருக்கிறது.

‘இப்படியே போனால் எங்கள் கதி என்னாவது’ என்ற சாமானியனின் கேள்விக்கு எந்த அரசியல் கட்சிகளிடமும் பதில் இல்லை.

சாமான்ய மக்களை மத்திய அரசு பழிவாங்குகிறது என்று குற்றம் சாட்டும் பாரதிய ஜனதாவிடம் கூட, இதற்கான விளக்கம் இல்லை. விலை உயர்வுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவது குறித்து, இடதுசாரிகள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப் போவதாக கூறும் மார்க்சிஸ்ட் கட்சியிடமாவது,  விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் மந்திரம் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

வெங்காயம், தக்காளி போன்ற அத்தியாவசியக் காய்கறிகளின் விலை மற்றும் உற்பத்தி நிலவரம் குறித்த மத்திய வேளாண்துறையின் புள்ளி விவரம், இந்தப் பிரச்சனை குறித்து சில முக்கியமான கேள்விகளை நம்முள் எழுப்புகிறது. 

கடந்த 2006ம் ஆண்டு முதல், நடப்புப் பருவம் வரை, வெங்காயம், தக்காளி இவற்றின் ஒட்டுமொத்த உற்பத்தியைப் பொறுத்தவரை ஏறுமுகத்தில்தான் இருந்து வருகிறது. குறையவே இல்லை என்பதை அரசின் புள்ளிவிவரமே நமக்கு சொல்லுகிறது.

அதாவது, கடந்த 2006ம் ஆண்டில்  தக்காளி பயிரிடப்படும் ஒட்டு மொத்த நிலப்பரப்பின் அளவு 17 லட்சத்து 40 ஆயிரம் ஹெக்டேராக இருந்தது. இது  , தற்போது 18 லட்சத்து 90 ஆயிரம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, 280 லட்சம் டன்னாக இருந்த தக்காளியின் ஒட்டுமொத்த உற்பத்தி, தற்போது 400 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. 

அதே நேரத்தில் 2006ம் ஆண்டில் குவிண்டால் 500 ரூபாயாக இருந்த தக்காளியின் விலை, 2010ம் ஆண்டில் 843 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் கதையும் இதுதான்.

உற்பத்தி அதிகமானால் விலை குறைய வேண்டும் என்பதுதானே, இயல்பான நடைமுறை. ஆனால் இங்கே நேரெதிராக நடந்து வருகிறது. இதற்கு என்ன காரணம்?

வரி விதிப்பில் குழப்பம் என்று சிலர் சொல்லுகிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கையில் உள்ள குளறுபடிகளே காரணம் என்று மற்றொரு தரப்பினர் சொல்லுகிறார்கள். மொத்தத்தில் ஏதோஒரு கொள்கைக் குழப்பத்தின் விளைவே இந்த விலை உயர்வு என்பது மட்டும் நமக்குப் புரிகிறது.

இது ஒருபுறம் இருக்க, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு நாம் எதிர்பாராத சில காரணங்களும் சொல்லப்படுவதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது.

அவற்றில் முதலாவதாக, நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 60 சதவீதமாக இருக்கும் இளைய தலைமுறையினரின் வாங்கும் சக்தி அதிகரித்து வருவதை ஒரு காரணமாக வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இளைஞர்களின் வருவாய் விகிதம் அதிகரித்திருப்பதால், அவர்கள் என்ன விலை கொடுத்தும் பொருட்களை வாங்கத் தயாராக உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். 

ஆனால், இதை சமூகத்தின் அனைத்து மட்ட இளைஞர்களுக்குமான அளவு கோலாக எடுத்துக் கொள்ள முடியாது. கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் மற்றும் பொறியியல் கல்வி கற்று, லட்சங்களில் சம்பளம் வாங்கும் இளைஞர்களின் எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் மேல் தேறாது. 

எனினும், ஒட்டு மொத்த சமூக மாற்றத்தின் காரணமாக அடிப்படை வருவாய் விகிதம் ஓரளவுக்கு உயர்ந்திருப்பதை மறுப்பதற்கில்லை. விலை உயர்வுக்கு இது ஒரு காரணமாக கூறப்படுவதை ஏற்க முடியவில்லை என்றாலும், முழுமையாக மறுக்கவும் முடியவில்லை.

மற்றொரு காரணம் இன்னும் வினோதமானது.

ஆண்டுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தின் காரணமாக விவசாயத் தொழிலாளர்களின் ஒரு நாள் கூலி, சராசரி 150 ரூபாயக உயர்ந்து விட்டதாகவும், இதனால் உற்பத்திச் செலவு அதிகரித்திருப்பதாகவும், விவசாயிகளில் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். 

2006ம் ஆண்டிற்குப் பின்னர் ஏற்பட்டுவரும் விலை ஏற்றத்திற்கும், இதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக, பொருளாதார வல்லுநர்களே கூறுகிறார்கள். விவசாயிகளின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும் போது, கொள்முதல் விலையும், அதன்காரணமாக சில்லறை விலையும் அதிகரிப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். 

ஆனால், விவசாயிகளின் உற்பத்திக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்பது, இன்று வரை முக்கியமான குற்றச்சாட்டாக இருந்து வருவதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அப்புறம் எப்படி விலை உயர்வுக்கு விவசாயிகள் காரணம் ஆவார்கள். அப்படி இருந்தால் இந்த விலை உயர்வை ஏற்றுக்கொள்வதே நியாயமும்  கூட! 

ஆனால், நாட்டில் எந்த விவசாயியும் அப்படி நிறைவடைந்திருப்பதாக தெரியவில்லை.

அடிப்படை வறுமையை ஒழிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ஆண்டுக்கு 100 நாள் திட்டத்தை விலை உயர்வுக்கு காரணமாக கூறுவதையும் ஏற்றுக் கொள்ளமுடியாது. விவசாயத் தொழிலாளர்களின் கூலி விகிதம் உயர்வதை எதிர்மறையாக பார்க்கும் போக்கு விபரீதமானதும் கூட.

ஆக, வாங்கும் சக்தி உயர்ந்துள்ளதே விலை உயர்வுக்கு காரணம் என்று  காட்டி, கணக்கை நேர்செய்யும் முயற்சியாகவே இந்த விளக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டி  இருக்கிறது.

உற்பத்தி அதிகரித்தால், விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதுதான் அடிப்படையான பொருளாதாரக் கோட்பாடு. தற்போதைய நிலை அதற்கு முரணாக காணப்படுவது ஏன் என்பதுதான் இன்று நம்முன் எழுந்து நிற்கும் முக்கியமான கேள்வி.

கற்பனைக்கு எட்டாத பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலவும் ஒரு சமூகத்தில், பொத்தாம் பொதுவான நியாயங்களைத் தீர்வாக வைக்க முடியாது. மாதம் ஒரு லட்சம் சம்பரூபாய் சம்பளம் வாங்குகிறவன் கொடுக்கும் விலையைத் தான், 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறவனும், அதற்கும் கீழாக இருப்பவனும் கொடுக்க வேண்டி இருக்கிறது. 

அதற்காக ஒரு கிலோ தக்காளியின் விலை 10 பைசாவாக குறையவும் வேண்டாம். பின்னர் 60 ரூபாயாக அதிகரிக்கவும் வேண்டாம்.

மாதத்திற்கு இரண்டு முறை பெட்ரோல், டீசலின் விலை உயர்ந்தால், அத்தியாவசியப் பொருட்களின் விலை நான்கு முறை உயர்த்தப்படும் என்பதுதானே உண்மை.

அடிப்படையான தவறுகளை விட்டுவிட்டு, அங்கொன்றும், இங்கொன்றுமாக காரணங்களைத் தேடி அலைவதில் பயனில்லை என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.

விலையின் ஏற்ற இறக்கம், சராசரியானதாக இருக்க வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடாக இருக்கும். காரணம் எதுவாக இருந்தாலும், முடிவில் உறுதியும், கோட்பாட்டில் தெளிவும் இருந்தால்,  அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்படும், இத்தகைய அதல பாதாள ஏற்றத்தாழ்வை நிச்சயமாக தடுத்து நிறுத்த முடியும். 

விலை உயர்வுக்கு சரத்பவாரும், கூட்டணி ஆட்சியுமே காரணம் என்று சாக்குப் போக்கு சொல்வதை விட்டு விட்டு, மத்திய அரசு முழு மனதுடன் அதற்கான நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்.
மேனா.உலகநாதன்.

Sunday, January 9, 2011


(9.1.11 தினமலர் செய்திமலர் நெல்லைப் பதிப்பில் வெளிவந்த கட்டுரை)

விரக்தியின் விளிம்பில்…
நாட்டில் விவசாயத்தைத் தொழிலாக கொண்டவர்களில் 45 சதவீதம் பேர் இந்தப் பிழைப்பே வேண்டாம் என்று நொந்து போய்ச் சொல்லுவதாக, பசுமைப் புரட்சியின் தந்தை என்று பாராட்டப்படும் தேசிய விவசாயிகள் ஆணையத்தின் தலைவர் எம்.எஸ். சுவாமிநாதன் அண்மையில் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஆச்சார்யா என்.ஜி. ரங்கா விவசாயப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர், மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போது இதனைக் கூறியுள்ளார் (Business Line, Dec – 30, 2010).

எம்.எஸ். சுவாமிநாதன் தெரிவித்திருப்பதாலேயே இந்தக் கருத்து, பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தந்தையாக இருந்து அவர் பெற்றெடுத்த பசுமைப் புரட்சி குறித்து, பல்வேறு கருத்து வேறுபாடுகள் உண்டு. எனினும், இந்திய விவசாயத்துறை சார்ந்து, அதற்கான அதிகாரத்தளங்களில் இடம்பெற்று இயங்கி வருபவர் என்ற அளவில், விவசாயத்தின் நிலை குறித்து அவர் தெரிவிக்கும் கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை மறுப்பதற்கில்லை. விவசாயம் குறித்த நவீன கருதுகோள்கள் அடைந்திருக்கும் தோல்வியைப் புரிந்து கொள்ள, அதன் பிதாமகர்களில் ஒருவராக கருதப்படும் எம்.எஸ்.சுவாமிநாதனின் பதில்களே போதுமானது என்று நம்புகிறோம். அந்தப் பேட்டியின் சுருக்கம் இதோ….

கேள்வி : விவசாயிகள் தற்கொலை செய்வது தொடர்கதையாகி விட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் (ஆந்திராவில்) நூற்றுக்கணக்கான குத்தகை விவசாயிகள் கூட தற்கொலை செய்து கொண்டார்கள். ஏன் இந்த துயரம் தொடர்கிறது?

பதில் : விவசாயத்தைப் பொறுத்தவரை மிகச்சிக்கலான காலக்கட்டத்திற்குள் நாம் நுழைந்து கொண்டிருக்கிறோம். இந்தப் பிரச்சனை பன்முகப்பரிமாணங்களைக் கொண்டது. எளிமையான ஒரே ஒருகாரணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. சில பயிர்களுக்கு அதிக முதலீடு ஒரு பிரச்சனையாக இருக்கிறது. போதிய மழை இன்மை, நிலத்தில் தண்ணீருக்கான ஊற்று இன்மை இப்படி இடத்துக்கு இடம் பிரத்தியேகமாக பல்வேறு பிரச்சனைகள்…

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு, உற்பத்திக்கு ஆகும் செலவுடன், 50 சதவீதம் சேர்த்து வழங்க வேண்டும் என்று, தேசிய விவசாயிகள் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், அவர்களுக்கு உற்பத்தி செலவுடன் 15 சதவீதம் மட்டுமே சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. மொத்தத்தில் விவசாயம் என்பது இன்று கட்டுபடியாகக்கூடிய தொழிலாக இல்லை.
தற்போதைய உணவுப் பாதுகாப்புச் சட்டம்,  இந்தப் பிரச்சனையில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடியை மத்திய அரசுக்கு ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன். விவசாயப் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால், நாட்டில் 100 கோடி மக்களுக்கும், 100 கோடி விவசாயக் கால்நடைகளுக்கும் நாம் உணவு வழங்க முடியாது. இதை மிகவும் சிக்கலான காலக்கட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

கேள்வி : இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடத் தயக்கம் காட்டுவது ஏன்? அவர்களது கவனத்தை இந்த தொழிலின் மீது திருப்ப என்ன செய்யலாம்?

பதில் :  விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில், இளைஞர்கள் மட்டும் ஏன் விவசாயத்திற்கு வரப்போகிறார்கள்? விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாத வரை, இளைஞர்களை விவசாயத்தின் பக்கம் ஈர்க்க முடியாது. விவசாயத்தை தொழில் நுட்ப ரீதியாகவும், வருவாய் மதிப்புள்ள தொழிலாகவும் மேம்படுத்துவது குறித்து, மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். அதில் உள்ள அபாயங்களைக் குறைப்பதற்கும், காப்பீடு, கடன் உள்ளிட்ட உதவிகள் எளிதில் கிடைப்பதற்கும் வகை செய்ய வேண்டும்.

கேள்வி : பல்வேறு காரணங்களால் விவசாயத்தை விட்டு பலர் வெளியேறி வருகிறார்கள். விவசாய நிலங்கள், விவசாயமல்லாத பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுவது விரைவாக நடந்து வருகிறது. இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில் :  நாட்டில் விவசாயத்தைத் தொழிலாக கொண்டவர்களில் 45 சதவீதம் பேர், அந்த தொழிலை விட்டு வெளியேறப் போவதாக, அண்மையில் நடத்தப்பட்ட தேசிய மாதிரி கணக்கெடுப்பின் போது தெரிவித்துள்ளனர். கடன் சுமை தரும் அழுத்தத்தால், விவசாயிகள் தங்களது நிலங்களை, விவசாயம் அல்லாத காரணங்களுக்காக விற்பனை செய்யும் மன நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால், விவசாயத்திற்கான நிலப்பரப்பு சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. நிலத்தின் விலையும் அதிகரித்து வருகிறது. சிறிய அளவு நிலத்தில் விவசாயம் செய்பவர்கள் கூட, அதிக உற்பத்தியும், நிறைய லாபமும் அடையக் கூடிய தொழிலாக விவசாயம் மாற வேண்டும்.

கேள்வி : பருவநிலையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் விவசாயத்தைப் பொறுத்தவரை எந்த அளவு பாதித்துள்ளது? அதனால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க என்னமாதிரியான திட்டங்களை வகுக்கலாம்?

பதில் : பருவநிலை அடிப்படையிலான 128 விவசாய மண்டலங்களாகப் பிரித்து (agro-climatic zones), அவை ஒவ்வொன்றுக்கும், பருவநிலை அபாய மேலாண்மைக்கான ஆய்வு மற்றும் பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும். வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற பேரிடர் மேலாண்மைக்கான புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும். தற்போது உள்ளதைப் போல, பேரிடர் இழப்புகளை, மத்தியக் குழுக்களை அனுப்பி மதிப்பிடுவது, பின்னர் மாநில அரசுகளோடு பேரம் பேசுவது போன்ற நடைமுறைகள் எல்லாம் பயனற்றவை. இதன் மூலம் விவசாயிகளுக்கு அடுத்த பருவத்துக்கு முதலீடு செய்து பயிரிடுவதற்கு உரிய காலத்தில் கைக்கு பணம் கிடைப்பதில்லை.
மொத்தத்தில் விவசாயப் பிரச்சனைகளைப் பொறுத்தவரை நம்மிடம் ஒருங்கிணைந்த அணுகுமுறை இல்லை. மேற்கத்திய நாடுகளில் விவசாயம் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும் ஒரு முனை அமைப்பின் கீழ் அணுகப்படுகிறது. எனினும் விவசாயம் தொடர்பான நமது பிரச்சனைகள் தீர்க்கப்பட முடியாதவை அல்ல. எல்லாம் நாம் உருவாக்கிய பிரச்சனைகள்தாம். எனவே அவற்றுக்கு நம்மால் தீர்வு காணமுடியும்.
…………..

இந்தப் பேட்டியில் இடம்பெற்றுள்ள கருத்துகளை, நவீன வேளாண் விஞ்ஞானி ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலம் என்றே கருதலாம். ஓரளவுக்கு நேர்மையாகவே பதில் அளித்திருக்கிறார். எனினும், தோல்விகளை ஒப்புக்கொண்ட அளவிற்கு, அவற்றுக்கான தீர்வு குறித்து சரியான திசையில் சிந்தித்துள்ளாரா என்பது குறித்த கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்திய விவசாயத்தில், தொழில் நுட்ப ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் ஏற்பட்டுள்ள தோல்விகளை மட்டுமே நவீன வேளாண் வல்லுநர்கள் கவனத்தில் கொண்டிருப்பதை எம்.எஸ்.சுவாமிநாதனின் இந்தப் பதில்கள் நமக்கு தெளிவு படுத்துகின்றன.
இயற்கைப் பேரிடர் குறித்து அஞ்சும் இவர்கள், மண்ணிற்கு நாம் இழைத்துள்ள செயற்கைப் பேரிடரை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை என்பதுதான், பிரச்சனையின் மற்றொரு பரிமாணம். மண்ணுக்கேற்ற மரபு சார்ந்த விவசாய முறைகளையும், பயிர்களையும் பாதுகாத்து, அவற்றை நமது மரபு உரிமைகளாகவும், செல்வங்களாகவும் நிலை நிறுத்துவது, நவீனச் சூழலில் நாம் எதிர்கொள்ள நேர்ந்திருக்கும் மிகப்பெரிய சவாலாகும். விவசாய வளர்ச்சி குறித்த திட்டமிடல்களில், அது குறித்து இவர்கள் சிந்திக்க மறுப்பது கவலை அளிக்கிறது.

பசுமைப் புரட்சி போன்ற மற்றுமொரு செயற்கைப் பேரழிவை, இந்த மண்ணில் ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்பதை, நவீன வேளாண் வல்லுநர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மண்ணைக் கொன்று விட்டு மனிதர்களை மட்டும் எப்படி ஐயா வாழவைக்க முடியும்?

மேனா. உலகநாதன்