Saturday, December 11, 2010




மாற்றி யோசிக்கலாமே…….

‘வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடிஉயரும்
குடிஉயரக் கோனுயர்வான்’

விவசாயம் எனும் உயிர்த்தொழிலின் அவசியத்தை உணர்த்த, தமிழ் மூதாட்டி ஔவை சொல்லி வைத்த அறவுரை இது.

நவீனத்தின் பாய்ச்சலில், எத்தனையோ தொன்மங்களும், விழுமியங்களும் அர்த்தம் இழந்து வரும் நிலையில், ஔவையின் இந்த மூதுரை மட்டும், நம் மண்ணின் அறமாக இன்றும் நீடித்து வருகிறது.

என்னதான் நவீனப் பொருளாதாரப் புலிகள் அதை இல்லை என அடிக்கப்பார்த்தாலும், இந்த நாட்டின் முதல் தொழிலாகவும், முழுத்தொழிலாகவும் விவசாயமே இன்றுவரை நிலைத்து வருகிறது.
ஆனால், இயற்கையின் சுழற்சி அப்படியே நீடிக்கவில்லை. அதில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

புவி வெப்பமயமாதல் காரணமாக, பருவநிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை நாம் கண்கூடாகக் காண முடிகிறது.
வடமேற்கு, வடகிழக்கு பருவமழைக் காலங்கள் உரிய காலத்தில் தொடங்கி உரிய காலத்தில் முடிவது இல்லை.
  
‘பெய்தும் கெடுக்கும், பெய்யாமலும் கெடுக்கும்’ என்ற விவசாயப் பெருமக்களின் வழக்கு மொழி முன்னெப்போதையும் விட, அண்மைக்காலமாக மெய்யாகி வருகிறது. 

ஆண்டு தோறும், சம்பா பருவ நடவு முடிந்து, சில தினங்களுக்குள் கனமழை பொழிவதும், பயிர்கள் பாழாவதும், அண்மைக் காலமாக தொடர்கதையாகி வருகிறது.

கடந்த சில வாரங்களாகப் பெய்த கனமழையால், கடலூர் மாவட்டத்தில் மட்டும் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள பயிர்கள் நீரில் மூழ்கியதாக, அப்பகுதியை நேரில் பார்வையிட்ட துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

டெல்டா மாவட்டங்கள் குறித்து சொல்ல வேண்டியதில்லை. கடும் சேதமும், பெரும் பாதிப்பும் அப்பகுதி விவசாயிகளைக் கலக்கமடைய வைத்துவிட்டது.
ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி என, தமிழகத்தின் தென் மாவட்டங்களையும், மழை விட்டுவைக்க வில்லை.

நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டிருக்கும் தமிழக அரசு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகிறது.
 ‘முன்பெல்லாம் தான் மழை பெய்தது. ஆனால் அது இத்தனை பேரழிவுகளை ஏற்படுத்துவதில்லை’ சில கிராமத்து முதியவர்கள் வெளிப்படுத்தும் இந்த அதிர்ச்சி கலந்த வேதனையில் அர்த்தம் இல்லாமல் இல்லை.

இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், கிராமப் பகுதிகளில் ஒரு கட்டாயமான பழக்கம் இருந்தது. விவசாயப் பருவம் முடிவடைந்து, கோடைக்காலத்தில் விவசாயிகள் ஓய்வாக இருப்பார்கள்.

அப்போது அந்தக் கிராமத்திற்கான நீராதரங்களுக்கு தண்ணீர் வரும் வழிகளையும், நிரம்பிய பின்னர் அதனை வெளியேற்றுவதற்கான வடிகால்களையும், தூர் வாரித் தூய்மைப் படுத்தும் பணி இயல்பாக மேற்கொள்ளப் படுவதுண்டு.

இதற்கு அரசு சார்பில் உதவியோ, உத்தரவோ எதுவும் பெறப்படுவதில்லை. வீட்டுக்கு ஒரு ஆள் என்ற முறையில், கிராமத்து பொதுமக்களே முடிவெடுத்து, அதனைச் செயல்படுத்துவார்கள்.

இந்த நடைமுறைக்கு சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில்  ‘கிராம ஊழியம்’ என்றே ஒரு பெயருண்டு.

ஆனால், தற்காலத்தில் இந்த நடைமுறை முற்றிலும் கைவிடப்பட்டு விட்டது. நீர் நிலைகளின் மராமத்துப் பணிகளுக்கு முற்றிலும் அரசு நிர்வாகத்தையே எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனநிலைக்கு மக்கள் ஆளாகி இருக்கிறார்கள்.

இதனால், பெரும்பாலான கிராமங்களில், ஏரி குளங்களுக்கு தண்ணீர் வரும் வழியும் சரி, வெளியேற்றப்படும் வழியும் சரி, புதர் மண்டியே காணப்படுகிறது.
தண்ணீர் வருவதும் சிரமம். வந்தால் வெளியேறுவதும் சிக்கல்.

இதனால் கால்வாய்களில் பெருக்கெடுக்கும் மழை நீர், ஏரிகளைச் சென்று அடைய வழி இல்லாமல், நேராக வயல்வெளிகளுக்குள் பீறிட்டுப் பாய்கிறது. ஏரியில் பெருகும் நீரோ, வெளியேற முடியாமல் கரைகள் உடைப்பெடுத்து, வயல் வெளியை மூழ்கடிக்கிறது.

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட, இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்ட மேலும் சில தலைவர்கள், அடிப்படையான இந்தப் பிரச்சனையைச் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

நீர்நிலைகள் தூர்வாரப்படாததுடன், அவற்றுக்கான நீர்வரத்து மற்றும் போக்கு வழிகளும் பாழடைந்து கிடப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ள நிவாரணப் பணிகளில் ஒன்றாக, நீர்நிலைகளையும், அவற்றின் நீர் வரத்து மற்றும் போக்குக்கான வழிகளையும் சீரமைப்பதில் அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் சுமார் 39 ஆயிரம் நீர் நிலைகள் இருந்த இடம் தெரியாமல், ஆக்கிரமிப்பாளர்களால் விழுங்கப்பட்டு விட்டதை,  சில ஆண்டுகளுக்கு முன்னரே சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர்.

எஞ்சி இருக்கும் நீர் நிலைகளையேனும் உரிய முறையில் பராமரிக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல, பொதுமக்களின் கடமையும் கூட.
மழை வெள்ளப் பாதிப்பு குறித்த ஆய்வுப்பணியில், நீர் நிலைகள் குறித்த இந்த கணக்கெடுப்பையும் அரசு சேர்த்துச் செய்தால், அடுத்த மழைக்காலத்திலாவது, வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து ஓரளவேனும் தப்ப முடியும்.

இது ஒரு புறம் இருக்க, கால மாற்றத்தால் ஏற்படும் இத்தகைய இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள இதுவரை நாம் என்ன வியூகம் வகுத்திருக்கிறோம்?
பனி, மழை, வெயில் என இயற்கையின் பருவமாற்றங்கள் அனைத்தும் அளவுக்கு மீறிய உக்கிரத்துடன், பூமிப்பந்தைத் தாக்கத் தொடங்கி உள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் கொட்டித் தீர்க்கும் கொடும் பனியும், கீழை நாடுகளில் பெய்து தீர்க்கும் பேய் மழையும் இதனை ஆண்டுதோறும் நமக்கு உணர்த்தி வருகின்றன.

மற்ற நாடுகளைக் காட்டிலும், மண்ணையும், மழையையும் சார்ந்திருக்கும் விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட நாம்,  இது குறித்து அதிகம் சிந்திக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற நமது முன்னோர்களின் பழ மொழியை, வேளாண் தொழிலுக்கான அடிப்படை விதியாக இனியும் நாம் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஆடி மாதம் நாற்றுப் பாவி, ஆவணியில் நடவு செய்த சில தினங்களுக்குள்ளேயே பெருமழை பெய்து பயிரை மூழ்கடித்து விடுகிறது.

இல்லாவிட்டால், நெற்பயிர் முற்றி, அறுவடைக்கு தயாரக உள்ள நேரத்தில் பெய்து, விளைந்த பயிரை நாசம் செய்து விடுகிறது.

இப்படிக் காலம் தவறிப்பெய்யும் மழைக்குத் தகுந்தவாறு நமது விவசாய முறைகளை மாற்றி அமைத்துக் கொள்வது குறித்து, வேளாண் வல்லுநர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கருத்து, விவசாயிகள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

விவசாய முறைகளிலும், காலத்திலும் மாற்றங்களை மேற்கொள்வது பற்றி, வேளாண் வல்லுநர்கள் யோசிக்கலாமே?

மேனா. உலகநாதன்

நன்றி : 12. 12. 2010, தினமலர் – செய்திமலர்

Thursday, December 9, 2010

இப்போது…


பாறைகளின் மௌனம் 
உங்களுக்குப் பிடிக்குமா
அலைகளை விழுங்கிச் செரிக்கும் 
அதன் உன்மத்தம்
வாழ்வின் பருகத் தீராத மது

மோதிச் சிதறும் 
அலைத்துளிகளின் திவலைகள்
தரும் போதத்தில் 
இன்னும் இன்னும் இறுக்கம்
கொண்டு புடைக்கும் 
அதன் திமிர்
ரசிக்கத் தீராத சாகசம்

ஆங்காரத்துடன் வருவதும் 
அடிபணிவதுமாய்த்
திரும்பும் அலைகளின் 
தோல்வியில்
அதன் கம்பீரம் 
மேலும் உயிர்க்கிறது

எல்லோரும் நினைத்தார்கள்
வாழ்வின் மூர்க்கம் 
விளிம்பில் நிற்கும் எமை 
வீழ்த்தி விடுமென்று
எறும்பூரத் தேயும் கல்லோ 
நாம் கரைவதற்கு

காலம் சிதறுகிறது
கடவுள் அழுகிறான்

நம்பிக்கை அனைத்தும் 
வற்றிப் போன கடலின் வெறுமை
அவனைச் சஞ்சலம் கொள்ளச் செய்கிறது.

இப்போது
பாறையின் புன்னகைக்குள்
அவன் மெல்லப் புதைகிறான்.
மேனா.உலகநாதன்

Tuesday, December 7, 2010


நெருடல்
-----------------------------------------------------------------------

அவரைப் பார்த்தும்
பாராதவனாய்த் திரும்பிக் கொண்டேன்

பார்க்காமல் போகிறார்
என்பதைப் பார்க்காமல்
பார்த்திருக்கலாம்தான்

கேள்வியும் பதிலும்
உள் நெருடியது

பார்த்தும் பாராமையை
பார்த்தும் பாராமல் சென்ற
அவரின் பக்குவம் பார்த்தும்
பாராத நான்.  

மேனா. உலகநாதன்







அம்மத்தாள்

பக்கங்கள் படபடக்க
எப்போதும் என்னுள் விரியும்
நைந்து பழுப்பேறிப்போன
பழந்தமிழ்ப் புத்தகம்

நான் குழையும்போதெல்லாம்
திறந்து கொள்ளும்
அவளின்
பொக்கைவாய்ச் சொர்க்க வாசல்

மரணக்கதவுகளால் மூடப்பட்டும்
மறுபடி மறுபடி மனசுதட்டும்
அவள் நினைவசைவு

அவள் தந்த கருவாடும் கஞ்சியும்
கம்ப்யூட்டர் யுகத்தின்
நாசிகள் அறியா
வாசனை அற்புதம்

சுருங்கிய தோல் மடிப்புகளுக்குள்
நுழைந்தும் அலைந்தும்
என் ஜீவன் நுகர்ந்த பந்தம்
இன்னும் தேங்கிக் கசிகிறது
உயிர்ச்சுனையில்

கொட்டவும் முடியாமல்
பத்திரப்படுத்தவும் முடியாமல்
திரிந்து போன என்
வாழ்வுப் பாலுடன்
அவளது நினைவுகளும்.

மேனா. உலகநாதன்

Friday, December 3, 2010


வேண்டாம் விபரீத யோசனை!
றுமை ஒழிப்பைப் போலவே விவசாய வளர்ச்சியும் இந்தியாவைப் பொறுத்தவரை நிறைவேறாத நெடுங்கனவாகவே இன்றளவும் நீடிக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், அதற்கான பிரச்சனைகளும், தீர்வுகளும்,  ஒற்றைப் பரிமாணம் கொண்டவை அல்ல.

இந்த நிலையில்,  விவசாயத்தை வளர்த்தெடுக்க, நவீன வேளாண் வித்தகர்கள் (!) சிலர் அண்மையில் முன்வைத்துள்ள திட்டம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஈ ஃபார்ம் என்ற அமைப்பை நடத்திவரும் வெங்கட சுப்பிரமணியன் என்பவர் தெரிவித்திருக்கும் யோசனைகள் விபரீதமானவை என்கின்றனர் விவசாயிகள் சங்கத்தினர்.

அப்படி அவர் முன்வைக்கும் தீர்வும், திட்டமும்தான் என்ன?

‘விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கு, அவற்றை கொள்முதல் செய்து சந்தைப்படுத்தும் பொறுப்பை, முழுக்கத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும்.

இதில் தொழில்முறை இடைத்தரகர்களின் பங்கு மிக முக்கியமானது(!). 4 அல்லது 5 கிராமங்களுக்கு ஒரு நிறுவனத்தை  அவர்கள் தொடங்க அனுமதிக்க வேண்டும். அவற்றின் மூலம், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களைக் கொள்முதல் செய்து, தனியாருக்கு நல்ல லாபத்துடன் விற்பனை செய்ய வேண்டும்.

விவசாயத்துறை தொடர்பான அனைத்துப் பொறுப்புகளையும்,  அரசிடம் இருந்து பறித்து தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் . எல்லாவற்றையும் அரசே செய்து கொண்டிருந்தால் அதில் லாபம் பார்க்க முடியாது…’ இப்படியாக விவசாயத்தைக் காப்பாற்றுவதற்கான பல புதிய உத்திகளை அவர் தெரிவித்திருக்கிறார்.

மருந்து, மளிகை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் பல்வேறு வர்த்தகச் சங்கிலித் தொடரின் மூலமாக மக்களைச் சென்றடையும் போது, விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு மட்டும் ஏன் அது பொருந்தாது எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

விவசாயிகளுக்கு அரசால் வழங்கப்பட்டு வரும் மானியங்களும், இலவச உதவிகளும், கடன் தள்ளுபடிகளும், அவர்களைச் சுயமரியாதையற்றவர்களாக மாற்றவே வழிவகுக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஆனால், இது போன்ற யோசனைகள் விவசாயத்தைக் கார்ப்பரேட் மயமாக மாற்ற உதவுமே தவிர, எளிய மக்களின் வாழ்வாதாரமாக தகவமைக்க உதவாது என்கிறார்கள் மரபுசார்ந்த வேளாண் வல்லுநர்கள். இது தொடர்பாக அவர்கள் முன்வைக்கும் மேலும் சில கருத்துகள்,  இந்திய விவசாயத்தின் எதிர்காலம் குறித்த அழுத்தமான கவலைகளை நமக்குள் ஏற்படுத்துகின்றன.

“விவசாயத்தை லாபம் மிக்க தொழிலாக மாற்றவேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால், சந்தைப்படுத்துவதால் மட்டுமே அது சாத்தியமில்லை. அது  மட்டுமே விவசாயத்தின் பிரச்சனையும் அல்ல.
இந்தியாவைப் பொறுத்தவரை விவசாயம் என்பது வெறும் வியாபாரமோ, தொழிலோ மட்டுமல்ல. நாட்டின் தற்சார்பு உள்ளிட்ட உன்னத இலக்குகளுக்குமான ஜீவாதாரத் தளம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

விவசாயிகளுக்கு வழங்கப்படும், இலவசங்களும், மானியங்களும் அவர்களின் சுயமரியாதையைப் பறிப்பதற்கல்ல. அவர்களிடமிருந்து பல ஆண்டுகளாக, பல்வேறு வடிவங்களில் பறிக்கப்பட்டுவரும் மண்வளத்தையும், மனிதவளத்தையும் ஈடு செய்ய என்பதை உணர்ந்நு கொள்ள வேண்டும். அது ஒரு மக்கள் அரசின் மறுக்க முடியாத கடமை.

பன்னாட்டு நிறுவனங்களால் விதைகளும், உரமும் கடன் வழங்கப்பட்டு, அதனால், விவசாயிகள் விஷம் குடித்துச் சாகும் நிலைக்குத் தள்ளப்பட்டதை ஏற்றுக்கொள்ளும் இந்த நவீன வேளாண்மைச் சிந்தனையாளர்கள், சொந்த மக்களைக் காப்பாற்ற அரசு வழங்கும் உதவிகளை விமர்சிப்பதன் உள்நோக்கம் நமக்குப் புரியவில்லை.

ஜனநாயக அமைப்பில் அத்தியாவசியத் தேவைகள் தொடர்பான அனைத்தும் அரசின் வசம் இருக்க வேண்டும் என்பதே, நியாயமான நடைமுறையாக இருக்க முடியும்.
விவசாயம் என்பது அத்தியாவசியத் தேவை மட்டுமின்றி, ஆதாரத் தேவையும் கூட. அப்படி இருக்கும் போது, அதற்காக அரசு மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகளை வீண் செலவாகச் சித்தரிப்பது, விபரீத விளைவுகளுக்கே வழி வகுக்கும்.

ஏழ்மையும், வறுமையும் புதராக மண்டிக்கிடக்கும் நாட்டில் விவசாயம் ஒன்றுதான் எளிய மக்களின் வாழ்வாதாரமாக எஞ்சி நிற்கிறது. அதனையும் அவர்களிடம் இருந்து பறித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க வேண்டும் என்ற பேராசையே, நவீன வேளாண் சிந்தனையாளர்களிடம் தெரிகிறது.

நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்கப்பட்டு அதில், மண்ணுக்கேற்ற பயிர்களை விளைவிப்பதன் மூலமாகவே, விவசாயத்தை அதன் வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றும் முதல் கட்ட நடவடிக்கையாக இருக்க முடியும்.

ஆனால், இதற்கு நேரெதிராக விளைநிலங்களை மனையிடங்களாக கூறு போட்டு, கொள்ளை லாபத்திற்கு விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட்  கோமான்களின் ஆட்சிதான் இப்போது கொடிகட்டிப் பறக்கிறது.

எஞ்சியுள்ள நிலங்களையும் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரால், பெருமுதலாளிகளுக்கு பங்கு போட்டுத் தரும் கைங்கர்யமும் ஜரூராக நடந்தேறி வருகிறது.

இந்தநிலையில், விவசாயத்தை வளர்க்க யோசனை சொல்லுகிறோம் என்ற பெயரில், இடைத்தரகர்களின் பங்களிப்பு அவசியம் என்பது போன்ற விபரீத திட்டங்களை முன்வைப்பது ஆபத்தானது.

அரசு கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதோடு, தானியங்களைப் பதனிட்டு பாதுகாக்கும் வசதியும் விவசாயிகளுக்கு செய்துதரப்பட வேண்டும் என்பதே எமது முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

விசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் முழு உரிமையும் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். இடைத்தரகர்கள் வந்து ஆளுமை செலுத்துவதற்கு, இது பங்குச் சந்தையைப் போல வர்த்தகப் பரிவர்த்தனை மையம் அல்ல.

ஆழிப்பேரலையால் பேரழிவு நேர்ந்த போது இந்தியப் பங்குச் சந்தை வரலாறுகாணாத வகையில் ஏற்றம் கண்டதாகச் சொல்வார்கள்.

அழிவில் ஏற்றம் காணுவதற்கு விவசாயம் ஒன்றும் பங்குச்சந்தை இல்லை. அது ஆக்கத்தில் மட்டுமே ஏற்றம் காணக்கூடிய நேரிய தொழில். விவசாயத்தை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை விவசாயிகளிடம் தான் கேட்க வேண்டும். தரகர்களிடம் அல்ல ”

விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்திருக்கும் இந்தக் கருத்து, அத்துறையின் எதிர்காலம் சார்ந்த பல முக்கியக் கேள்விகளை நம்முள் எழுப்புகிறது.
எந்த ஒரு தொழிலும் நவீனத்தன்மைக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளாத போது, அதன் இருத்தலும் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் என்பதே இயற்கையின் நியதி. விவசாயத்துக்கும் அது பொருந்தும் என்பதை மறுப்பதற்கில்லை.

எனினும், மற்ற தொழிலுக்கும், விவசாயத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு. மற்றவற்றுக்குப் பொருந்தும் பொருளாதாரப் புள்ளிக் கணக்குள் இதற்குப் பொருந்தாது.  

விவசாயம் என்பது வெறும் பொருளாதார மேம்பாடு சார்ந்த துறை மட்டும் அல்ல…

எளியமக்களின் தவிர்க்க முடியாத வாழ்வாதாரம்…

நாட்டின் தற்சார்புத் தன்மையைத் தன் உயிரைக் கொடுத்துப் பிடித்து இழுத்து வைத்திருக்கும் மூலாதாரம்…

மண்ணையும், மண்சார்ந்த விதை உள்ளிட்ட மரபு உரிமைகளையும் காக்க வேண்டிய தார்மீக ஆதாரம்….

என அடிப்படையான அனைத்து ஆதாரங்களுக்கும் உயிராதாரமாக விளங்குவதுதான்  விவசாயம் என்பதை நவீன வேளாண் சிந்தனையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மேனா.உலகநாதன்

நன்றி : 05.12.10 தினமலர் செய்திமலர் .